திருக்கைலாயம். தியானத்தில் கைலாசபதி வீற்றிருக்கிறார். சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூத, சிவ கணங்கள். ஸ்ரீருத்ர சமகம் பாராயணம் ஒலிக்கிறது. பிரணவ ஜபம் கைலாசத்தையே ஆனந்தமாக அதிரச் செய்கிறது.
சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கித் தமது எல்லையற்ற மகிமையில் மக்னமாகியுள்ளார். அப்போது ஒரு தேவவாணி கேட்டது:
ஏழைகளிடமும், பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன் தான் – உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனின் பூஜை, ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.
ஒரே ஓர் ஏழைக்காவது, அவனது ஜாதி, மதம் போன்ற எதையும் பாராமல், அவனிடம் சிவபெருமானைக் கண்டு – அவனுக்கு உதவி, தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் மகிழ்கிறார்; கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, இத்தகையவனிடம் சிவபெருமான் அதிக அளவில் மகிழ்ச்சி கொள்கிறார்!
இந்த தேவவாணியைக் கேட்டதும் சிவபெருமானின் அதரங்களில் ஓர் அலாதியான புன்னகை மலர்ந்தது; மெல்ல மெல்ல கண்களைத் திறந்தார்.
உடனே தேவ, முனி கணங்கள் மகிழ்ந்தனர். அவர்களுள் ஒரு முனிவர், சிவபெருமான் முறுவலித்ததன் காரணம் பற்றி யோசித்தார்.
அம்முனிவர் பெருமானை மெல்ல அணுகி, “ஐயனே, சற்று முன்பு வெளிவந்த தேவவாணிக்கும் தங்கள் திருமுக நகைக்கும் தொடர்புண்டா, பெருமானே?” என்று கேட்டார்.
“மகனே, அது தேவவாணி அல்ல, வேத வாணி. இன்று கலியுகத்திற்கேற்ற யுக வாணி” என்று திருவாய் மலர்ந்தருளினார் உலகநாதன்.
“வேதநாயகா, அந்த வாணி எங்கிருந்து வந்தது? தங்களையே மகிழ்வூட்டிய அவ்வாக்கு யார் உரைத்தது? அறிந்திட விழைகிறேன்.”
“உம்மைப் போன்ற ஒரு முனிவர் அதைச் செப்பியது. அவன் என்னவன்”
“ஆஹா, எங்கள் தென்னவனே என்னவன் என்று கூறினால், அவரைத் தரிசிக்க ஆவலாக உள்ளது பெருமானே.”
“ஆகட்டும். அவனைக் காண பூலோகம் புறப்படு. அவனுள் என்னைக் கண்டு வா” என்று சிவபெருமான் கூறி அருளினார்.
முனிவர் ஏதோ கேட்க நினைத்ததும், மீண்டும் சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்து போனார். வேறு வழியின்றி முனிவர் விடை
பெற்றுப் பூலோகம் ஏகினார்.
***
பூலோகம் வந்த முனிவர் உரை வந்த திக்கைப் பார்த்தார். அது ராமேஸ்வரம். அங்கு ஸ்ரீ ராமநாத சுவாமி ஆலயத்தில் தான் அந்தத் தெய்விக சாசனம் செப்பப்பட்டது.
செப்பியவர் சிவபெருமானையே உகப்பித்தவர் எனில், சைவக் குரவர் நால்வருள் ஒருவரா? சப்தரிஷிகளுள் ஒருவரா?
முடிவில், அந்த தேவ வாணியை – அல்ல, வேதவாணியை முழங்கியவர் சுவாமி விவேகானந்தர் என்பதைப் புரிந்துகொண்டார் முனிவர்.
விவேகானந்தரின் கம்பீரத்தைக் கண்டு, ஒரு நாட்டின் சக்ரவர்த்தியா? என்றும் அவரது ஆழ்ந்த அமைதியைப் பார்த்து, இவர் ரிஷியா? என்றும் வியந்தார் முனிவர்.
விவேகானந்தரது வரலாறு என்ன? முனிவர் தியானித்தார். உடனே மனக்கண்ணில் காசியில் வீற்றிருக்கும் வீரேஸ்வர சிவன் உதித்தார். ஓ, அவரது திருக்கோயிலில் ஓர் அன்னை தவமிருந்து வேண்டிப் பெற்றவரா இவர்!
அனைவரையும் வசியப்படுத்தும் தாருகாவனத்து இளம் சிவனோ என்று எண்ண வைக்கும் லீலை நரேனின் (விவேகானந்தரின்) பாலலீலைகள்.
குட்டி நரேன் விளையாடுவான், குறும்புக் கண்ணனாக. ஆனால் கண்மூடி, மௌனமாகி, மனதைக் குவித்து விட்டாலோ சிவனே இவன் என அவனைக் கண்டவர்கள் உணர்வார்கள்.
நரேனை அடக்க வீட்டில் ஆயாக்கள் இருவர் இருப்பர். ஆயா என்பதை அவன் மாயா என்று புரிந்து கொண்டானோ! அவர்களுக்கெல்லாம் அடங்காமல் ஆனந்தத் தாண்டவம் ஆடுவான்.
சிறுவயதில், திடீரென முடியைக் கலைத்துக் கொள்வான், விபூதியை உடலில் பூசிக்கொள்வான், ஒரு சூலத்தை ஏந்திக் கொள்வான் – இந்தக் கோலத்தில் அம்மா முன் நின்று, நான் சிவனாகி விட்டேனம்மா… என்று கூறும் நரேனைக் கட்டுப்படுத்த யாரால் முடியும்?
அன்னை புவனேஸ்வரி தேவி பதறுவாள். ஆண்டியாக மகனைப் பார்க்க எந்த அன்னைக்குத்தான் உண்டு துணிவு?
சிவன் கோலத்திலுள்ள நரேனை அடக்க முடியாதுதான். ஆனால், அடங்கா இளங்கன்றாகத் திரியும் அவன் மீது தாய் குளிர் நீரைக் கொட்டுவாள்; காதில் ‘சிவ சிவ’ என்பாள்.
நீர்க்குளிரும், சிவஒலியும் இமயத்தில் இருக்கும் தன் மெய் இயல்பை உணர்த்துமோ நரேனுக்கு! அதுவரை திரியும் சிவனாக இருப்பவன், தியான சிவனாகிவிடுவான்.
இளம்பிராயத்து இந்த இயல்பு இறுதி வரையும் தொடர்ந்தது. பிற்காலத்தில், அமர்நாத் கடுங்குளிரில் கௌபீனதாரியாக இருந்து சிவலிங்கத்தைத் தரிசித்தாரே, சுவாமி விவேகானந்தர் – அது அவர் சிவனே என்பதை ஜகத்திற்கும் செப்பியதுதானே?
சிவாம்சமே உருவானவன் நரேன் என ஸ்ரீ ராமகிருஷ்ணரே சொன்னாலும் புரிந்து கொண்டது யார்?
புவனமே அறியும், சிவபெருமான் முயலகன் என்ற அரக்கனைத் தமது காலடியிலிட்டு அடக்கினார் என்று. அதுபோல், மக்களின் அறியாமை, அடிமைத்தனம், வறுமை, சோம்பல், இயலாமை இவை போன்ற அரக்கத்தனங்களைத் தமது ஆற்றலால் அடக்கியவர் சுவாமி விவேகானந்தர்.
தேவலோகத்து முனிவர் நரேனின் பால லீலைகளை ரசித்த
படி சிரித்தார். என்றாலும் அவர் ஒரு கேள்விக்கு விடையின்றித் தவித்தார். தவிப்பைப் புரிந்து கொண்ட விடைப்பாகன் அந்த முனிவருக்கு முக்கியமான காட்சி ஒன்றைக் காட்டியருளினார். அது தேவர்களின் தரத்திலுள்ளவர்கள் மட்டுமே காணக் கூடியது.
***
காசிப்பூர் தோட்டத்தில் விவேகானந்தரின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சீடர்கள் பலரும் அவருக்குச் சேவை செய்து வந்தனர்.
ஒரு நாள் இரவு தியானம் செய்துவிட்டு சுவாமிஜியும் சகோதரச் சீடர்களான சுவாமி சிவானந்தரும், சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் உறங்கினர்.
அதிகாலை. சிவானந்தர் மெல்ல எழுந்தார். என்ன இது?
இந்த இருளில் இவ்வளவு ஒளி வெள்ளமா! இது எங்கிருந்து வருகிறது? சுற்றுமுற்றும் பார்த்தார். அது வெறும் ஒளி அல்ல, உள்ளொளி.
உடனே தான் கண்டதை சுவாமி விவேகானந்தரிடம் கூறுவதற்கு, அவர் படுத்திருந்த இடத்தை நோக்கியதும் வியப்பின் எல்லைக்கே போனார் சிவானந்தர்.
அங்கு விவேகானந்தரைக் காணோம்! மாறாக, அந்த இடத்தில் பல சிறு சிறு சிவபெருமான்கள் (படுக பைரவர்கள்) சடாமுடியுடன் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்தத் தெய்விக ஒளி அவர்களிடமிருந்தே வந்தது. சிவத்தில் ஆனந்தத்தைக் காணும் சிவானந்தர் பரவசத்தில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே விடியும் வரை திளைத்தார்.
விடிந்தது. தான் கண்டவற்றை விவேகானந்தரிடம் பகிர்ந்துகொள்ளத் தேடினார் அவரை. தேடும் பொருள் சிவன் கழலே என்பதைக் கண்டு கொண்டவராக விவேகானந்தர் அமைதியாக இருந்தார்.
அவரிடம் சிவானந்தர் தான் காலையில் கண்டவற்றைச் சொன்னார். விவேகானந்தரோ, தான் இருந்த நிலையை எப்படிச் சொல்கிறார் என்பதை ரசித்தார் போலும். பதில் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தார்.
சிவனின் அடிமுடி காண முடியாமல் தவித்த தவிப்பு தானோ பதிலின்றித் தவித்த சிவானந்தருக்கும்! அந்தத் தவிப்பை சுவாமிஜி புரிந்து கொண்டு, மற்றொரு நாள் தமது மகிமையை மீண்டும் வெளிப்படுத்தினார்!
பாரா நகர் மடம்.
ராமகிருஷ்ண மிஷனின் ஆரம்ப மடம். அங்கு அல்லல்கள் ஓராயிரம். ஆயினும் ஆனந்தமோ ஆயிரமாயிரம்.
அன்று சுவாமிஜியும் சிவானந்தரும் உறங்கினார்கள் ஒரே இடத்தில். நடுநிசியில் சிவானந்தர் விழித்துப் பார்த்தார். மீண்டும் ஒளி வெள்ளம். ஆஹா, அதே ஆனந்தப் பெருவெள்ளம் – சிவ வாரிதி.
இந்த ஒளியை உணர்ந்தே தீர்வது என்று திரும்பினால்…, அவரது நெஞ்சுக்குள் ‘சிவனே போற்றி, கயிலைநாதனே போற்றி’ போன்ற முழக்கங்கள் முகிழ்த்தன. மெய்சிலிர்த்தது.
கண்களைக் கசக்கிப் பார்த்த சிவானந்தருக்குச் சீரிய வடிவில் மீண்டும் அரிய சிவதரிசனம்.
ஆனால் சுவாமிஜி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றிலும் சூலம் தாங்கிய சிவத் திருவுருவங்கள் தியான கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார்கள்!!
சிவானந்தர் தொண்டை வற்றியவராக, ”நரேன், நரேன், எழுந்திரு….” என்றார்.
மெல்ல கண் திறந்து பார்த்தார் சுவாமிஜி. சுற்றி இருந்த சிவவடிவினரைப் பார்த்தார். அவர் பரவசமடையவில்லை, நான் இருப்பதே பரவசத்தில் தானே என்பது போல் பார்த்தார்.
”ஓ, இவர்களா? ஒன்றுமில்லை. நீங்கள் படுங்கள் அண்ணா’ ‘என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துவிட்டார்.
பார்வையைத் திருப்ப முடியாத சிவானந்தர் செய்வதறியாது அந்தத்
தெய்வ வடிவங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சுவாமிஜியைச் சுற்றி சிவ கணங்கள் ஏன்?
சுவாமிஜி விழித்ததும் சிவானந்தர், ”நரேன், இரவில் வந்து காட்சி அளித்த அந்த தெய்வ வடிவினர்கள் யார்?” என்று பரபரப்புடன் கேட்டார்.
அமைதியாக சுவாமிஜி, ‘ஓ, என் சிறுவயதிலிருந்தே என்னைக் காக்கும் பொருட்டு வரும் பைரவ கணங்களே அவர்கள்” என்றார்.
”பைரவ கணங்கள் உன்னை ஏன் பாதுகாக்க வேண்டும்?” என்ற சிவானந்தரின் மெல்லிய கேள்விக்கு விவேகானந்தரின் பதில், புன்னகைதான்!
சிவன் சிரிப்பில், அரக்கக்கோட்டைகள் இளகும்; சுவாமிஜி சிரித்தால் சந்தேகங்கள் நழுவுமோ!
சுவாமிஜி தன் நிஜ சொரூபத்தை சிவானந்தர் போன்ற மகான்களுக்கு மட்டுமா காட்டுகிறார்?
விவேகானந்தரைச் சுற்றி சிவகணங்களைக் காட்டினார் சிவபெருமான். அதோடு, அடுத்து ஒரு வித்தியாசமான காட்சியையும் ஏன் காண்பித்தார் என்று புரியாமல் தேவலோகத்து முனிவர் தவித்தார்.
***
அமெரிக்காவின் நியூயார்க் நகரம். 1897-ஆம் ஆண்டு. ஒரு நாள் சாலையில் அழுக்கான ஏழைச் சிறுவன் ஒருவன் சுவாமிஜியிடம் எப்படியோ ஒட்டிக் கொண்டான்.
சுவாமிஜியும் பாசத்துடன் அவனை அழைத்துக் கொண்டு தமது வேதாந்த சங்கத்திற்கு வந்தார்.
வரும் வழியில் அவனைப் போன்ற மற்ற ஓரிரு சிறுவர்களும் சேர்ந்து கொள்ள, அந்தச் சிறுவர் பட்டாளத்துடன் சுவாமிஜி உள்ளே நுழைந்தார்.
அப்போது அங்கிருந்த சகோதரி கிறிஸ்டைன் என்ற சுவாமிஜியின் சிஷ்யை, இப்படிப்பட்டவர்களை எல்லாம் ஏன் இவர் கவர்கிறார்? என்று தமக்குள் நினைத்தார்.
அவர் நினைத்ததும் பளிச்சென வந்தது சுவாமிஜியின் பதில்: “இதோ, இவர்களை யாரென நினைத்தாய்? இவர்கள் சிவபெருமானின் பூத
கணங்கள்” என்றார்.
சிவகணங்கள் சிவனைச் சுற்றியிருப்பார்கள். ஏழைச் சிறுவர் கணங்கள் சுவாமிஜியைச் சுற்றியிருந்தார்கள்.
(ஆதாரம்: சுவாமி விவேகானந்தர்-2, பக்-403)
சிவலிங்கத்தில் சிவனைக் காணும் பதி புண்ணியமும், ஜீவர்களிடத்தில் சிவனைக் காணும் பசு புண்ணியமும் ஒருங்கே காணும் விவேகானந்தரைக் கண்ட தேவமுனி, நவீன வேதவாணி உரைத்த விவேகானந்தரின் திசை நோக்கிக் கரம் குவித்தார்.