Home » சிறுகதைகள் » விதியா? மதியா?
விதியா? மதியா?

விதியா? மதியா?

ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். “மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?”.

ஞானி சொன்னார். “ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்”

கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.

ஞானி சொன்னார். “சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து”

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி “என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு” என்று சீறினான். “இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?”

ஞானி அமைதியாகச் சொன்னார். “நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது”

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.

சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.

குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.

எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top