Home » தன்னம்பிக்கை » வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 12
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 12

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 12

சிலர் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்!

ஒருவர் ஒரு சிறப்புச் சொற்பொழிவிற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக பேச வேண்டிய சொற்பொழிவு அது. அது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய நூல்கள் படித்து, அதன் அனைத்து அம்சங்களையும் விளக்கி கேட்பவருக்கு எந்தவொரு சந்தேகமோ, குழப்பமோ வராத அளவு தன் பேச்சு இருக்கும்படி தயார் செய்து முடித்தார். நிகழ்ச்சியில் பேசும் முன் ஒத்திகை பார்த்து, சொற்பொழிவு எப்படி இருக்கிறது என்ற கருத்தை அறிந்து கொள்ள விரும்பிய அவர் ஒரு நண்பரை அழைத்து அவரிடம் பேசிக் காட்டினார். கணீரென்ற குரலில் அருவியாக கருத்தான வார்த்தைகளைக் கொட்டி மிகச் சிறப்பாகப் பேசி விட்டு தன் நண்பரின் அபிப்பிராயத்தை அவர் கேட்டார்.

நண்பர் அவரை இரக்கத்துடன் பார்த்து சொன்னார். “பாவம், உனக்கு சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.”

அவர் விக்கித்துப் போனார்.

சிலருக்கு பாராட்ட மனம் வராது. எல்லா நல்லவற்றிலும், எல்லா சிறப்புகளிலும் ஏதாவது ஒரு குற்றம் கிடைக்காதா என்று கஷ்டப்பட்டு தேடுவார்கள். அப்படித் தேடினால் எதிலும் எப்போதும் ஓரிரு சில்லறைத் தவறுகள் அல்லது குறைபாடுகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிக் கண்டுபிடிப்பதை மாபெரும் குற்றங்களாகச் சொல்லி மகிழ்வார்கள். மற்றவர்களின் சந்தோஷங்களை ஒரேயடியாக வடிய வைத்து விடுவார்கள்.

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியாக வரும் நாகேஷ் சொல்லும் வசனம் போல் “குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள்”  நிறைய பேர் இருக்கிறார்கள். அடுத்தவர்களின் சாதனைகளை இவர்களால் ரசிக்க முடியாது. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள மனம் இவர்களுக்கு வராது. பலரும் பாராட்டினாலும் இவர்கள் வித்தியாசப்பட்டு விமரிசிப்பார்கள். அப்படி மாறுபடுவதாலேயே அவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். அதுவும் பிரபலங்களை விமர்சிப்பது என்றால் இவர்களுக்கு தனி உற்சாகம் வந்து விடும். அவர்களை விமரிசிப்பதாலேயே அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பில் இருப்பார்கள். தங்களை வித்தியாசமான அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொள்ள நினைப்பார்கள்.

குறைகள் கண்டிப்பாக சுட்டிக் காட்டப்பட்டால் தான் அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அப்படி திருத்திக் கொள்ளும் போது தான் மனிதன் முன்னேறுவதும், பக்குவம் அடைவதும் சாத்தியமும் கூட. ஆனால் நிறைகளை ஒரேயடியாகப் புறக்கணித்து விட்டு, குறைகளை பூதக்கண்ணாடி வைத்து தேடுவது என்பது நேர்மையான விமரிசனத் தன்மை அல்ல. மாறாக அது விமரிசிப்பவனின் தரத்தின் சிறுமையை சுட்டிக் காட்டி விடும்.

வாழ்க்கைக் கனவுகளை நனவாக்க நாம் எடுத்து வைக்கும் ஆரம்ப அடிகள் மிக மென்மையானவை. நமக்கு நம் மீதே முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்காத காலமது. நம் ஆரம்ப முன்னேற்றங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அடுத்தவர் வாய்வழியாக சில சமயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத் தோன்றும். அப்படிப்பட்ட சமயங்களில் இது போன்றவர்களின் கருத்தைக் கேட்கும் தவறைச் செய்து விடாதீர்கள். கேட்காமலேயே தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு. அப்படி தெரிவித்தாலும் அதை அலட்சியப்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவர்கள் கருத்து, விதைத்தவுடன் ஊற்றப்படும் வெந்நீராக அமைந்து விடும். அந்தக் கனவு விதைகளை ஆரம்பத்திலேயே அழித்து விடும்படியான அமிலமாக இவர்கள் விமரிசனம் அமைந்து விடலாம். மன உறுதி மட்டும் இல்லா விட்டால் உங்கள் தன்னம்பிக்கை அப்போதே காணாமல் போய் விடும்.

எத்தனையோ திறமைகள் முளையிலேயே இவர்களால் கிள்ளி விடப்பட்டிருக்கின்றன. அதிலும் இவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் மற்றவர்களின் உற்சாகத்தையும், துடிப்பையும் கண நேரத்தில் காணாமல் போகும்படி பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் பேச்சுகள் எல்லாமே குறைகளையும், பலவீனங்களையும் சார்ந்ததாக இருக்கும்.  பேச்சுகள் மட்டுமல்லாமல் பார்க்கின்ற விதமும், சொல்கின்ற தோரணையும் கூட கிண்டல் நிறைந்ததாக இருக்கும். இவர்களை அலட்சியப்படுத்தி தூர நகர்வதே புத்திசாலித்தனம். எப்பாடுபட்டாவது இவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்று விடலாம் என்று நினைப்பது மலைக் கல்லில் கிணறு தோண்டுவதைப் போல் பலன் தரமுடியாத செயல்.

அதே போல ஒன்றைப் புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களிடமும் அதைக் குறித்த பாராட்டை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அறிஞர் அண்ணா அழகாகக் கூறுவார். “செவி பழுதுற்றவன் அருகில் சென்று சிதம்பரம் ஜெயராமன் என்ன அழகாய்ப் பாடினாலும் அவன் ‘இவருக்கு என்ன ஆயிற்று? இவர் வாய் ஏன் இப்படி கோணிக் கொள்கிறது’ என்றல்லவா நினைப்பான்?”.  நகைச்சுவையாகத் தோன்றினாலும் சில நேரங்களில் நாமும் அதே போன்ற முட்டாள்தனத்தைச் செய்து விடுகிறோம். எதையும் பாராட்டவும், விமரிசிக்கவும் கூட அடிப்படைத் தகுதி இருந்தால் மட்டுமே அந்த பாராட்டும், விமரிசனமும் அர்த்தமுள்ளதாக இருக்க முடியும்.

எனவே பாராட்ட மனமில்லாதவனிடமிருந்தும், பாராட்ட  தகுதி இல்லாதவனிடமிருந்தும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். முன்னவன் பாராட்ட மாட்டான். பின்னவன் பாராட்டு பொருளில்லாதது. மாறாக உள்நோக்கம் இல்லாத ஒருவன், உள்ளதை உள்ளபடி சொல்ல முடிந்தவன், உங்களைப் பாராட்டாமல் விமரிசித்தாலும் கூட அது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.

மேலும் படிப்போம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top