தமிழர்களின் உணவுகளில் சேர்க்கப்படும் கருப்பு மிளகு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது என்பது உங்களில் எத்தனைப் பேர்க்குத் தெரியும்?
முதலாவதாக, கருப்பு மிளகு மனிதனின் செரிமானச் சக்தியை அதிகரிப்பதோடு, குடல் ஆரோக்கியமாக இருக்கவும் துணை புரிகின்றது.
அடுத்ததாக நம் நாவின் சுவை மொட்டுகளையும் கருப்பு மிளகு தூண்டுகின்றது.
இத்தூண்டுதல் நம்முடைய வயிற்றில் ஹைட்ரோகுலோரிக் எசிட் (hydrochloric acid) சுரப்பதற்கு ஒரு சமிக்ஞையாக அமைகின்றது.
இந்த அமிலம் புரதச் சத்து மற்றும் இன்னும் வேறு சத்துக்களைச் செரிக்க அவசியமாகிறது.
போதுமான அளவில் ஹைட்ரோகுலோரிக் எசிட் சுரக்காவிட்டால் நம் உடலுக்குள் செல்லும் உணவு செரிமானமாகாத நிலையில் நீண்ட காலம் வயிற்றிலேயே இருக்கும்.
இதன் விளைவாக நெஞ்செரிச்சல், குடல் பாதிப்பு போன்ற வருத்தங்களுக்கு நாம் ஆளாகின்றோம்.
எனவே, செரிமானமாகாத உணவை சில கேடு விளைவிக்க தக்க குடல் பாக்டீரியாக்கள் தங்களின் தேவைக்கு உபயோகித்து நச்சு வாயுவை வெளியிடும்.
இதனால் வாந்தி, வயிற்றோட்டம் போன்ற சிக்கல்களுக்கும் நாம் ஆளாகுவோம்.
கருப்பு மிளகை உட்கொள்வதால் இம்மாதிரியான சிக்கல்களிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
அதோடு மட்டுமின்றி, கருப்பு மிளகு சிறந்த கிருமிநாசினியாகவும் திகழ்கின்றது.
கருப்பு மிளகு மேலும் கொழுப்புச் சத்தைச் செரிக்கவும் உதவுகின்றது.
எனவே, உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளவும் கருப்பு மிளகு உதவுகின்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!