Home » சிறுகதைகள் » குறையையும் நிறையாக்கலாம்!
குறையையும் நிறையாக்கலாம்!

குறையையும் நிறையாக்கலாம்!

ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான்.

சில மாதங்கள் கழிந்த பின்னும் அந்த ஆசிரியர் அவனுக்கு ஜூடோவின் ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். அந்த சிறுவன் அந்தப் பயிற்சியை ஓரளவு நன்றாகவே கற்றுத் தேர்ந்த பின் ஆசிரியரிடம் சொன்னான். ”ஐயா எனக்கு நீங்கள் வேறு பயிற்சிகளையும் கற்றுத் தாருங்களேன்”

அந்த வயதான ஆசிரியர் “நீ இந்த ஒரு பயிற்சியை சிறு குறையும் இல்லாமல் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தால் அதுவே போதுமானது. இதைத் தவிர வேறு எந்த பயிற்சியும் நீ கற்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறி விட்டார். அந்த சிறுவனுக்கு அவர் வேறு பயிற்சிகள் கற்றுத் தராமல் இருப்பது ஏமாற்றத்தைத் தந்த போதும் அவர் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தபடியால் அவர் கூறியபடி அந்த ஒரு பயிற்சியையே தொடர்ந்து மேலும் சில மாதங்கள் செய்து அதில் முழு ஆளுமை பெற்றான்.

அவன் அந்த ஒரு பயிற்சியில் ஒரு சிறு குறையும் இல்லாமல் முழுமையான ஆளுமை பெற்று விட்டான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் அந்த வருடத்திய தேசிய ஜுடோ போட்டியில் அந்தச் சிறுவனைக் கலந்து கொள்ளச் செய்தார் அந்த ஆசிரியர். அந்த சிறுவனுக்கோ திகைப்பு தாளவில்லை. அந்த தேசியப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல திறமையான வீரர்கள் கலந்து கொள்வார்கள். அவனோ ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறான். ஜூடோவில் அவனுக்குக் கற்றுக் கொள்ள இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
“ஐயா எனக்கு அந்த ஒரு பயிற்சி தவிர வேறு எதுவும் தெரியாத நிலையில் தேசிய அளவு போட்டியில் எப்படி கலந்து கொள்வது?”

அப்போதும் அந்த ஆசிரியர் அவனுக்குச் சொன்னார். “உனக்கு அந்த ஒரு பயிற்சி போதும். உனக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உன் எதிரியிடம் இந்த ஆக்கிரமிப்பு முறையை பயன்படுத்து. மற்ற எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே”

அவர் அந்த அளவு உறுதியாக கூறிய பிறகு அவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள சம்மதித்தான். ஆசிரியர் அவனை போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு போட்டிகளில் அவர் சொன்னது போலவே செய்து அவன் மிக எளிதாக வென்று காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றான். அவனுக்கே அது அதிசயமாக இருந்தது.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் சிரமங்களுக்கு இடையில் அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்த போது அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பிரயோகித்து வென்று முன்னேறினான்.

இறுதிப் போட்டியில் அவனுக்கு எதிராக போட்டியிட்ட ஆள் வயதிலும், வலிமையிலும், திறமையிலும் அவனுக்கு மேற்பட்டவனாகவே இருந்தான். போட்டியில் ஆரம்பத்தில் அவனால் அந்த நபரை வெல்ல முடியவில்லை. அவனுடைய இடது கை இல்லாத குறையையும், படும் சிரமத்தையும் பார்த்த நடுவர்கள் இடைவேளையின் போது அவன் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள அனுமதி தருவதாகக் கூறினார்கள். அவனுடைய ஆசிரியரோ அதற்கு சம்மதிக்கவில்லை. “அவன் போட்டியில் தொடர்வான்” என்று உறுதியாகக் கூறினார்.
அவர் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்ட அந்த சிறுவனுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது. இடைவேளைக்குப் பின் தொடர்ந்த போட்டியில் எதிராளி சற்று அசந்திருந்த போது தன் முழு பலத்தையும் திரட்டி அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பயன்படுத்தி எதிராளியை செயலிழக்க வைத்து வெற்றி பெற்றான். அவனுக்கே அந்த வெற்றி ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பதக்கத்தைப் பெற்ற போதும் அவனுக்கு பிரமிப்பு நீங்கவில்லை. வீடு திரும்புகையில் அவன் ஆசிரியரிடம் தன்னால் எப்படி அந்த ஒரு பயிற்சி மட்டும் கற்றுக் கொண்டு வெற்றி பெற முடிந்தது என்று கேட்டான்.

ஆசிரியர் சொன்னார். “அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, நீ அந்த ஒரு பயிற்சியில் குறைவில்லாமல் முழுமையாகப் பயிற்சி செய்திருக்கிறாய். இரண்டாவது, இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட எதிராளிக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அந்த வழி ஆக்கிரமிப்பவரின் இடது கையைப் பிடித்துக் கொள்வதில் தான் இருந்து தான் ஆரம்பிக்கிறது”
இடது கை இல்லாதவன் ஆக்கிரமித்தால் அந்தப் பிடியில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. அந்த சிறுவனின் மிகப் பெரிய குறை மிகப் பெரிய பலமாகப் போய்விட்டது பாருங்கள்.

பல சந்தர்ப்பங்களில் குறைகள் வேறு விதத்தில் நிறைகளாக முடியும். சில குறைகள் இருப்பவர்கள் அதை ஈடுகட்ட முயற்சித்து அந்த குறையில்லாதவர்களை விடவும் அதிகமாக சாதித்து விடுவதை பல சமயங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. குருடு, செவிடு, ஊமை என்ற மூன்று ஊனங்களை உதாசீனப்படுத்தி விட்டு உலக அளவில் பெரும் சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

குறைகளை மீறி சாதிப்பதற்குத் தேவையான மிக முக்கியமான பண்பு தன்னிரக்கத்தோடு தளர்ந்து ஒடுங்கி விடாமையே. தன்னிரக்கத்தில் ஆரம்பித்து அடுத்தவர் இரக்கத்தையும் தேடி நிற்பவர்கள் வாழ்க்கை தேக்கமடைந்து விடுகிறது. ’எனக்கு இந்தக் குறை இருப்பதால் நான் இனி ஒன்றும் செய்வதற்கில்லை’ என்ற அறிவிப்புக்கு குடும்பத்தினரும், மற்றவர்களும் கூட அங்கீகாரம் தந்து ஆதரிக்க ஆரம்பிக்கும் போது அந்த மனிதரின் முன்னேற்றம் முடங்கிப் போகிறது.

எனவே உடலின் குறைகளையோ, வசதி வாய்ப்புகளின் குறைகளையோ கண்டு தளர்ந்து விடாதீர்கள். அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். சில குறைகளை இன்னொரு கோணத்தில் பார்த்தீர்களானால் அதுவே வேறு சில முன்னேற்றங்களுக்கு அனுகூலமாகலாம். உண்மையான குறை மனதின் குறைகளே. வெளிப்புறக் குறைகள் தோற்றத்தில் இருக்குமளவு நம் முன்னேற்றத்தை தடுக்க சக்தி படைத்தவை அல்ல. இதை தங்களுக்கு இருக்கும் குறைகளைப் பெரிதாக நினைக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதே போல அவர்கள் நம்பிக்கை இழக்கும் தருணங்களில் நண்பர்களும், உறவினர்களும் அந்த அவநம்பிக்கைக்கு துணை போகாமல் தங்கள் அன்பாலும் நம்பிக்கையாலும் அவர்களைத் தாக்குப் பிடிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குறைகள் ஒருவரைக் குறைத்து விடாமல் நிறைகளாகப் பரிணமிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top