மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம்.
காரணங்கள்
தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.
தீர்வுகள்
1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற,தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி?
இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும்தெரிந்துகொள்ளவும் முடியாது. ஒரு உதாரணத்திற்கு, ஒரு ராக்கெட்டில் அதன் உச்ச வேகத்தில் வானத்தில், எவ்வளவு ஆண்டுகள் பயணித்தாலும், வானின் எல்லையை காண முடியாது. இப்படி பூமிக்கு மேலேயும், கீழேயும் பக்க வாட்டிலும் வானுக்கு எல்லை இல்லை. எவ்வளவு பெரிய தொலைநோக்கியை வைத்து ஆராய்ந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் அறிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது இந்த வானவெளியில் பூமி, இந்தியா, தமிழ்நாடு, நம்மூர், நாம் – எவ்வளவு மிகச்சிறு பகுதி… எண்ணிப்பாருங்கள்.
ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அதையும் பிரித்து அணுத்துகள்கள் – இவற்றைப் பற்றி எவ்வளவு டாக்டர் பட்டம் வாங்கினாலும், எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும் முழுமையாக இன்னும் புரியவில்லை. பிறப்புக்கு முன்பும், இறப்புக்கு பின்பும் இன்னும் சரியாகத் தெரியவில்லை.
இதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் தான் பெரிது என்ற அகங்கார மனநிலை போய்விடும்.
தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி?
இந்த உலகில் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் உடையது. (Uniqueness) ஒருவர் கைரேகையைப் போல் இன்னொருவர் கைரேகை இருப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு செடி,கொடி, பறவைகள் உயிரினங்கள்- எல்லாமே மிக மிக அற்புதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. இதை எண்ணிப்பார்க்கும்போது ஒரு சிறந்த படைப்பே என்பதை எண்ணிப்பார்த்தால் ஒப்பிட்டு உருவாகும் தாழ்வு மனப்பான்மை ஓடிவிடும். என்னிடம் மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர் முயற்சியினால் வெளிப்படுத்தினால் மாபெரும் சாதனை புரிய முடியும் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறிக.
“பெரியோரைப் பார்த்து
வியத்தலும் இலமே
சிறியோரைப் பார்த்து இகழ்தல்
அதனினும் இலமே”
–புறநானுறு
2. இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும், மதிப்பும், முக்கியத்துவமும், கொடுக்கும்போது,உறவுகள் இனிமையாகும்.
ஏனென்றால் எல்லா உயிர்களுக்கும் அடிப்படை உறவுத் தேவைகள்: (i) அன்பு (ii) மதிப்பு,முக்கியத்துவம், அங்கீகாரம் இவைகள் கிடைக்கும்பொழுது உள்ளங்கள் நிறைவு கொள்ளும். நிறைந்த உள்ளங்கள் நிறைவின் இனிமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தும்.
மனித உறவுத் தேவைகள் கிடைக்காத போது, உள்ளங்கள் பாதிக்கப்பட்டு – பாதிப்பினை வேறு வேறு ரூபத்தில் எளிப்படுத்தி – உறவுகளுக்குள் உரைசலை உருவாக்கும்.
ஆகவே நான், எனது என்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசாமல், உங்கள் நீங்கள்,உங்களுடைய என்கிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது – நம்மோடு உரையாடவும், உறவுகளைத் தொடரவும் மனிதர்கள் விரும்புவர்.
கணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..?
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது கோர்ட் வாசலை தேடிப் போகின்றனர். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையா சந்தோசமாக பிரிந்து விடுவோம் என்பது இன்றைக்கு சாதரணமாகிவிட்டது.
தம்பதியராக இருந்தபோது உயிருக்கு உயிராக இருந்துவிட்டு திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இன்றைக்கு திருமணம் நடைபெறுவது என்பது சிரமமான, செலவு ஏற்படுத்தும் விசயம். ஆனால் ஒரு நொடியில் பிரிந்து விடலாம் என்று இருவரும் முடி வெடுப்கின்றனர். எனவே பிரிவு ஏற்படாமல் தவிர்க்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைவது தாம்பத்ய உறவுதான். பல்வேறு சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தயக்கம்தான் சிக்கலுக்கு காரணமாகிறது. தன்னை நேசிக்கும் கணவரையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அடிக்கடி ஐ லவ் யூ சொல்லி மனைவியின் மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.
மன்னிப்பது தெய்வ குணம்
தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது. தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.
சந்தோசமாக பேசுங்கள்
கணவன் மனைவியே தொடர்பற்று இருப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.
பொறுப்புணர்வு
குடும்பத்திற்காக பணம் செலவழிப்பது என்பது அவசியமானதுதான். ஆனால் அதுவே அத்தியாவசியமாகிவிடாது. பணத்தை விட அவர்களோடு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமானது. ஏனெனில் பணத்தை விட மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மை தரக்கூடியது.
நேர்மறை வார்த்தைகள்
தம்பதியரிடையே எதிர்மறையான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
எதற்குமே இல்லை என்று சொல்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள் நீங்கள் ஆம் என்று கூறுவதனால் உறவு பலப்படுகிறது என்பதை அறிந்து நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.
காது கொடுத்து கேளுங்கள்
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது கணவரின் கடமைகளில் முதன்மையானது. எனவே மனைவி கூறுவதை செவி கொடுத்து கேட்பதை விட இதயப்பூர்வமாக கேளுங்கள். ஏனெனில் அதைத்தான் உங்கள் மனைவி அதிகம் எதிர்பார்க்கிறார்.
வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
கணவனும் மனைவியும் சண்டையிட்டு பிரிந்து செல்வதற்கான முக்கிய காரணம் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையாகும் பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. மனைவியானவர் அதை எதிர்ப்பார்க்கா விட்டாலும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதையே சில தம்பதியர் புரிந்து கொள்ளலாமல் இருக்கின்றனர்.
ஆரோக்கியத்தில் கவனம்
பல ஆண்கள் தங்களின் ஆரோக்கியம் பற்றி கவலையில்லாதவர்களாக இருக்கிறார்கள் இது வாழ்விற்கு சிறந்ததல்ல. ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது ஆரோக்கியமான உங்கள் குடும்ப வாழ்விற்கு அவசியமானதாகும். அதேபோல் மனைவிக்கும் மாதத்தில் சில நாட்கள் விடுமுறை அளியுங்கள். ஏனெனில் ஓய்வற்ற நிலையில்தான் பிரச்சினைகள் எழுகின்றன.அந்த நாளில் உங்கள் மனைவி எந்தக் கவலையும் இன்றி ஓய்வாக இருக்க அனுமதியுங்கள் இவ்வாறான ஒருநாளை பெறுவதானாது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் அவசியமானது. இதுவே பிரச்சினைகளுக்கான முற்றுப்புள்ளியாகும்.