பகையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை… பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான் என்பார்கள். அந்த வகையில் வறுமையும் பட்டினியும்தான் உலகின் மிகப்பெரிய தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது.
பெரும்பாலான நாடுகள் பட்டினியை ஒழிக்க அத்தனை முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்னமும் முற்றாக ஒழிக்க முடியவில்லை. பட்டியல் போட்டுச் சொல்லும் நிலைதான் உள்ளது.
ஆப்ரிக்கா இன்னமும் உலகின் பசிமிகுந்த பூகோளப் பரப்பாகவே மாறிவிட்டது. சஹாரா பாலைவனத்தையொட்டிய காங்கோ போன்ற நாடுகளில் பட்டினியால் பல ஆயிரம் பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் (Global hunger index list) தெரிவிக்கிறது.
அதே நேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்பு காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும், இன்று கிட்டதட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது.
அதேநேரம், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதில் இன்னும் உலகம் முழுக்க போதிய விழிப்புணர்வற்ற நிலையே உள்ளதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு முதல் 1000 நாட்கள் சத்தான ஆகாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையை பல நாடுகள் பின்பற்றுவதில்லை என்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத் தலைவர் மேரி ரவுல் தெரிவித்துள்ளது கவனிக்க வேண்டிய கவலை!
இந்த ஆண்டின் ‘உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்’ திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியல்படி, பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைப் பெறுகிறது குவைத். இதற்கு அடுத்த இடம் மலேஷியாவுக்குக் கிடைத்துள்ளது.
84 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. பட்டினி ஒழிப்பில் இலங்கை 39வது இடத்தையும், நேபாளம் பாகிஸ்தான் 57 வது இடத்தைப்பெற்றுள்ளது. இந்தியாவோ 67வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக வல்லரசுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் பட்டினி ஒழிப்புக்கான திட்டங்களை ஏட்டளவில் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இங்கே, பயன்படுத்தப்படும் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுவதைவிட வீணாக்கப்படுவதே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவு உலகின் எடைகுறைந்த, நோஞ்சான் குழந்தைகளின் எண்ணிக்கையில் 42 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இது வெறும் 5 சதவீதமாத உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 65வது இடத்திலிருந்தது. இந்த ஆண்டு 67வது ஆண்டுக்கு நழுவியிருக்கிறது.
பட்டினி ஒழிப்பில் டாப் 9 நாடுகள்:
குவைத், மலேசியா, துருக்கி, மெக்ஸிகோ, டுனீஷியா, நிகாரகுவா, கானா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் பெரு.
மோசமாக பட்டினி நிலவும் 9 நாடுகள்:
காங்கோ, கொமரோஸ், புருண்டி, வட கொரியா, ஸ்வாஸிலாந்து, ஜிம்பாப்வே, கினியா பிஸா, லைபீரியா, காம்பியா.