சில தெரிவு செய்யப்பட்ட பழமொழிகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கீழே காணலாம்.
1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகம் என்பது மனம் அல்லது உள்ளம். மனத்தில் எழுகின்ற எண்ணங்களின் பிரதிபலிப்பு முகத்தில் தெரியும். ஒருவருடைய மன உணர்வை அல்லது மன நிலையை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் அவரது முகம் காட்டிவிடும். உள்ளத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி முகமாகும்.
2. அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
உலகில் அனைத்தும் இறைவனின் ஆணைப்படி நடக்கிறது. அந்த இறைவன் இல்லாவிட்டால் ஒரு சிறு அணுவும் அசையாது. இறைவனின் பேராற்றலினால்தான் உலகமும் உயிரினங்களும் இயங்குகின்றன.
3. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
குழந்தை பசியெடுத்து அழுதால் உடனே தாய் அதற்குப் பசிக்கிறது என்பதை உணர்ந்து பால் தருவாள். குழந்தை பால் குடித்துப் பசியாறும். குழந்தை அழுது தனக்கு வேண்டிய பாலைப்பெற்றுக்கொள்வதைப்போல, ஒவ்வொருவரும் தமக்கு வேண்டிய ஒன்றைப்பெற முயற்சி செய்தால் தேவையானது கிட்டும். ‘முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்‘ என்கிறார் வள்ளுவர்.