சீடர்களுடன் சென்று கொண்டிருந்த குருநாதருக்கு நேரமாகி போனதால் பசியெடுக்க ஆரம்பித்தது. வழியில் எதிர்ப்பட்டவரிடம், “”இந்த ஊரில் தர்ம சத்திரம் எங்கிருக்கிறது?” என்று கேட்டார்.
“”சுவாமி! தானம் செய்ய இங்கு ஆள் இல்லை. ஆனால், இங்கு உணவகம் ஒன்று இருக்கிறது. பணம் கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்” என்றார்.
சீடரில் ஒருவர் குருவிடம், “”சுவாமி! உங்களை நேரில் பார்க்கும் போது எப்படிப்பட்டவரின் மனமும் மாறி விடும். நிச்சயம் அனைவருக்கும் இலவச சாப்பாடு கிடைக்கும்,” என்றார்.
எல்லாரும் உணவகத்தில் சாப்பிட்டனர். சீடர் எதிர்பார்த்ததற்கு மாறாக, உரிமையாளர் பணம் கேட்டார். மறுப்பேதும் சொல்லாமல் கேட்டதை கொடுத்து விட்டு குருநாதர் நடக்க ஆரம்பித்தார்.
“”எத்தனை பெரியவர் நீங்கள். உங்கள் முகத்தைப் பார்த்தும் கூட அவருக்கு தர்மம் செய்ய மனம் இல்லையே? அவர் பணத்தாசை பிடித்தவர் போல இருக்கிறது,” என்று படபடத்தார் சீடர்.
துறவியோ சிரித்தபடி, “”நீ கோபிப்பதில் நியாயம் இல்லை. உணவகம் நடத்துபவர் ஒரு வியாபாரி. வியாபாரம் நடத்துவதே லாபம் அடைவதற்குத் தான். அந்த நியதியை நமக்காக அவர் மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது நியாயமில்லை. தொழில் என்று வந்து விட்டால் அதற்குரிய தர்மத்தைக் கடைபிடிப்பது தான் முறை. காசு கொடுக்க மனமில்லாத உன்னை வேண்டுமானால்பணத்தாசை பிடித்தவன் என சொல்லலாம்,” என்றார் வேகமாக.
பணம்… எல்லாரையும் ஆட்டி வைக்கும் ஒரு மந்திரக்கோல்.