உலக சேமிப்பு தினம் , இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாடு (சேமிப்பு வங்கிகள் உலக சமூகம்) அக்டோபர் 31, 1924-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சார்ந்த அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார உயர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கடமையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானிக்க பட்டது. மேலும், சிக்கனதினுடைய முக்கியத்துவத்தை இந்த உலகிற்கு உணர்த்த எண்ணி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதில் முக்கியமான நடைமுறை என்னவென்றால், விடுமுறை நாட்களில் வரும் அக்டோபர் மாத 31-ம் தேதியன்று அனைத்து வங்கிகளும் திறந்து வைக்க பட வேண்டும். பொது மக்கள் அன்று தங்களது சேமிப்பு கணக்கில் அன்றைய தினம், தங்களிடம் உள்ள பணத்தை டெபொசிட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த சிறப்பு தினம் அனுசரிக்கபடுகிறது.
உலக சேமிப்பு நாள் அக்டோபர் 31, 2013 இன்று கொண்டாடப்படுகிறது.
பொதுவாக தற்பொழுது நிகழ்ந்து வரும் பொருளாதார மாற்றத்தில் பலர் தங்களது வங்கி சேமிப்பு கணக்கை, தங்களுக்கு இது போன்ற ஒரு கணக்கு இருக்கிறது என்று கணக்கு காட்டவே வைத்துள்ளனர். நடைமுறையில் தங்களது பணத்தை பெரும்பாலும் இதில் போடுவதில்லை. கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கி அதில் பணம் திருப்பி செலுத்தவே சரியாக இருப்பதால் இதற்கு போதிய அளவு பணம் கிடைப்பதில்லை.
உபரியாக கிடக்கும் பணத்தை கூட இந்த மாதம் கையில் வைத்துக்கொண்டு, கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து விட்டு அடுத்த மாதம் அந்த பணத்தை கட்டி கணக்கை நேர் செய்வதிலேயே காலம் ஒடி விடுகிறது. இது போன்ற தருணங்களில் சேமிப்பு பற்றி தனிமனித விழிப்புணர்வை ஏற்படுத்தி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்த சேமிப்பு தினம் அனுஷ்டிக்கபடுகிறது.
மாத கடைசியில் நிறையப் பேர் ரொம்ப கஷ்டப்படுவதை நாம் பாத்திருப்போம். ஏன்? அவங்களுக்கு சம்பளம் போதவில்லையா என்ன? அதெல்லாம் இல்லை. அவர்களுக்கு தங்களின் வருமானத்தையும், செலவுகளையும் சரியாக நிர்வகிக்கத் தெரியவில்லை என்பது தான் உண்மை. இப்போது இதை சரியாகவும், எளிதாகவும் செய்ய, குறிப்பாக திருமணமாகாமல் சிங்கிளாக இருப்பவர்களுக்கு உதவக்கூடிய யோசனைகளைப் பார்ப்போமா…?
ஒரு ஆர்டி (தொடர் வைப்பு)
போடுங்க நீங்கள் தொடர் வைப்பை துவங்க சரியான தருணம் நீங்கள் வங்கியில் ஒரு சம்பளக் கணக்கைத் துவங்கும் நேரம். இதன் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் சம்பளத்திலிருந்து தானாகவே சேமிப்பிற்கு சென்றுவிடும். மேலும் இதிலிருந்து இடைமறித்து நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. எனவே இந்த தொகை முதிர்வுரும் காலத்தில் ஒரு பெரிய தொகையாக உங்களுக்குக் கிடைக்கும்.
உங்கள் செலவுகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் செலவுகளைக் குறித்த எந்த விவரமும் உங்களுக்கு விளங்காத போது, நீங்கள் வகையில்லாமல் செலவு செய்வதால் உங்களின் வருமானத்திற்கும் அதிகமான செலவினை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். நீங்கள் உங்கள் ஒரு மாத செலவுகளை குறித்து வைத்துக் கொள்ளும் போது, அதை அடுத்த மாதம் இனம் கண்டு அதன் தேவையை அல்லது முக்கியத்துவத்தின் அடிப்படையில் மேற்கொண்டு உங்கள் திட்டமிடல்படி கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
சிறிய விருந்துகளை வீட்டிலேயே நடத்துங்கள்
பிறந்த நாளையோ அல்லது வேறு விசேஷங்களையோ ஒரு ஹோட்டலுக்கும் பப்புக்கும் போய் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. நண்பர்களை அழைத்து வீட்டிலேயே நடத்துங்கள். இது விருந்துச் செலவை குறைப்பதுடன், அனைவரும் ஒன்றிணைந்து சமைத்தல் போன்ற செயல்களை செய்வதன் மூலமும், விருந்துக்குப் பின் சிறு கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமும், மகிழ்வுக்குக் குறைவிருக்காது. நீங்கள் வெளியில் செய்தால் இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது.
முப்பது நாள் பார்முலா
என்ன? இத நீங்க கேள்விப்பட்டதில்லையா? ரொம்ப சிம்பிள். உங்களுக்கு ஏதாவது வேண்டும் அல்லது செய்ய வேண்டுமென்று தோன்றினால் ஒரு முப்பது நாளைக்கு பொறுமையா இருங்க. அதற்குப்பிறகு அந்த தேவையை பத்தி யோசியுங்க. இந்த முப்பது நாட்களில் அது இல்லாமல் உங்களால் இருக்க முடிந்தது என்றால் அது அவசியமில்லாததாகக் கூட இருக்கலாம். இதன் மூலம் மன உந்துதலைத் தவிர்த்து தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.