Home » சிறுகதைகள் » நன்றி கெட்டவன்!!!
நன்றி கெட்டவன்!!!

நன்றி கெட்டவன்!!!

முன்னொரு காலத்தில் மருதபுரி நாட்டில் பொன்னுரங்கம் என்ற ஏழை இருந்தான். அவலட்சணமாக இருந்த அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான்.

வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் தோன்றினாள்.

“”ஆ! இப்படி ஒரு இனிய இசையை நான் கேட்டது இல்லை. நீ என்னை மணந்து கொள். உன் ஆசை எதுவானாலும் நிறைவேற்றி வைக்கிறேன்,” என்றாள் தேவதை.

இப்படி ஒரு நல்வாழ்க்கை கிடைத்ததை அவனால் நம்ப முடிய வில்லை.
“”தேவதையே! உன் விருப்பம் போல நடப் பேன்,” என்றான் அவன்.

அடுத்த நொடியே அவன் பேரழகனாக ஆனான். அரசனைப் போல ஆடை, அணிகலன்கள் அணிந்து இருந்தான். தன் தோற்றத்தைப் பார்த்துப் பெருமிதம் கொண்டான்.

“என்னை அவலட்சணம் என்று இகழ்ந்தவர்கள் முன் செல்ல வேண்டும். நான் யார் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்’ என்று நினைத்தான்.

“”தேவதையே! நம் திருமணத்திற்கு முன் நகரத்திற்குச் சென்று வர ஆசைப்படுகிறேன்,” என்றான் பொன்னுரங்கம்.

அவன் முன் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட பொன் தேர் ஒன்று நின்றது.
“”உனக்காக காத்திருப்பேன். விரைவில் திரும்பி வா,” என்றது தேவதை.

அரசனைப் போல அந்தப் பொன் தேரில் அமர்ந்தான் அவன். பெருமித மாக நகரத்திற்குள் சென்றான். அங்கே இருந்தவர்கள் அவனைப் பார்த்து வியப்பு அடைந்தனர்.

அரண்மனை மாடத்தில் நின்ற அரசி தேரில் வரும் அவனைப் பார்த்தாள். அவன் அழகில் மயங்கினாள்.

வாயிலுக்கு வந்த அவள், அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள். அரசி தன்னை மணக்க விரும்புகிறாள் என்பதை அறிந்தான் அவன்.

“தேவதையை மணப்பதை விட அரசியை மணப்பதே சிறந்தது’ என்று நினைத்தான்.

அரசியை வணங்கிய அவன், “”இந்த அடிமையைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் துணையாக இருப்பேன்,” என்றான்.

அங்கே என்ன நடந்தது என்பதை அறிந்தது தேவதை.

அவன் அரச வடிவம் மறைந்தது. முன்பு இருந்தது போல அவலட்சண மாக காட்சி அளித்தான் பொன்னுரங்கம்.

எரிச்சல் அடைந்த அரசி,””இந்த அவலட்சணத்தை யார் அரண்மனைக் குள் விட்டது? அடித்து விரட்டுங்கள்,” என்று வீரர்களுக்குக் கட்டளை இட்டாள்.

ஏமாற்றத்துடன் காட்டிற்கு வந்தான். நீண்ட நேரம் புல்லாங்குழலை இசைத்தான். தேவதை அவன் முன் தோன்றவே இல்லை.

“”நன்றி கெட்ட எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது,” என்று கதறி அழுதான் பொன்னுரங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top