Home » படித்ததில் பிடித்தது » வெள்ளை அடிப்பது ஏன்?
வெள்ளை அடிப்பது ஏன்?

வெள்ளை அடிப்பது ஏன்?

வெள்ளை அடிப்பது ஏன்?

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் வடலூரில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்து இரவு ரயில் ஏறினார்.அந்த ரயில் சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு வந்தது. ரயிலை விட்டிறங்கி குழாயில் கை கால் முகம் கழுவிக் கொண்டு ரயிலில் ஏறினார். சூரமங்கலம் போய் ரயில் மாறி ஈரோடு போகவேண்டும்.

காலை நேரம். தன் திருநீற்றுப் பையை எடுத்து திருஐந்தெழுத்தை ஓதி திருநீறை பூசிக்கொண்டார். திருநீறை பிறருக்குத் தரும்போதும் நாம் பூசிக் கொள்ளும் போதும் பஞ்சாட்சரம் கூறவேண்டும். அதனால் விபூதிக்கு பஞ்சாட்சரம் என்ற பெயர் அமைந்தது.

சிவாய நம என்று சொல்லி நீறணிந்தார்.

நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்ட அவரைப் பார்த்து எதிரில் இருந்த ஓர் இளைஞன் சிரித்தான். அதைப் பார்த்தும் பாராதது போல இருந்தார் வாரியார்.

இளைஞன் அவரைப் பார்த்து, ஐயா! ஏன் நெற்றிக்கு வெள்ளையடித்துக் கொள்கிறீர்? என்று கேட்டு மீண்டும் சிரித்தான்.

அவனுக்கு விளக்க, வேதத்தில் இருந்தோ, தேவாரம், திருவாசகம் திருமந்திரத்தில் இருந்தோ பாடல்களை சொன்னால் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என நினைத்த சுவாமிகள், ‘தம்பி குடியிருக்கின்ற வீட்டிற்கு வெள்ளையடிப்பார்கள்; காலியான வீட்டிற்கு வெள்ளை அடிக்க மாட்டார்கள். நெற்றியில் பகுத்தறிவு குடியிருக்கின்றது என்று நான் வெள்ளையடித்துக் கொண்டேன்’ என்று ஓங்கிக் கூறினார்.

இளைஞனுக்கு அந்த பதில் ஆணி அறைந்தது போல இருந்தது. தன் நெற்றியில் அறிவு குடியிருக்கவில்லை,காலி வீடு, அதனால் வெள்ளையடிக்காதிருக்கிறோம் என்பது புலனாயிற்று.
ரயிலை விட்டு இறங்கும்போது, சுவாமி! சிறிது திருநீறு கொடுங்கள்!’ என்று கேட்டு வாங்கி திருநீறு பூசிக் கொண்டான்.

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ”ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.”என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ”நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .” என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top