ஆஸ்திரியா – Austria
அதிகாரபூர்வ பெயர் |
ஆஸ்திரிய குடியரசு
Republic of Austria |
இருக்குமிடம் |
ஐரோப்பாவின் நடுவில், இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் வடக்கில் |
பூகோள குறியீடு |
47 20 வடக்கு, 13 20 கிழக்கு |
மொத்தப் பரப்பு |
83,858 சதுர கி.மீ. |
மொத்த நிலம் |
82,738 சதுர கி.மீ. |
கடற்கரை |
1,120 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) |
ஆஸ்திரியன் சில்லிங் (ATS); ஐரோ (EUR) |
அண்டை நாடுகள் (எல்லை) |
செக் குடியரசு 362 கி.மீ., ஜெர்மனி 784 கி.மீ., ஹங்கேரி 366 கி.மீ., இத்தாலி 430 கி.மீ. |
தலைநகர் |
வியன்னா |
ஆஸ்திரியா என்ற பெயரைக் கேட்டால் பலருக்கு உடனே ஞாபகம் வருவது அடோல்வ் ஹிட்லெர் தான்! இவர் இன்றைய ஜெர்மனியை ஒட்டியிருக்கும் ஆஸ்திரியாவின் வடக்கு பகுதி நகரான ரான்ஸ்ஹோவனில் (Ranshofen) பிறந்திருந்தாலும் பரந்த ஜெர்மனி முழுவதையும் ஆரிய நாடாக மாற்றி அமைக்க கனவு கண்டு ஜெர்மனியில் சில காலம் ஆட்சி செய்து மாண்டார் என்பது பலரும் அறிந்ததே. அவர் கதை இங்கே நமக்கெதற்கு?
என்னைக் கேட்டால் ஆஸ்திரியா என்றால் இயற்கை அழகு என்று நான் சொல்வேன். இயற்கை அழகை வருடத்தின் நான்கு பருவங்களிலும் விதம் விதமாக்கிக் காட்டும் அற்புத நாடு ஆஸ்திரியா. மலைகளும், ஏரிகளும், வனங்களும் நிரம்பிய பசுமையான நாடு. சுற்றுலாத்துறை இந்தநாட்டின் வருமானத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுக்க முடியாது. ஆஸ்திரியா உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றும் கூட.
அலுவலக விஷயமாக சில முறையும் விடுமுறைக்காக என மூன்று முறையும் ஆஸ்திரியாவின் சில வேறு இடங்கள் பயணித்திருக்கின்றேன். ஒவ்வொரு இடமும் என் மனதைப் பார்த்த உடன் கொள்ளை கொள்பவை.
ஓங்கி உயர்ந்து வளர்ந்து காட்சி தரும் பைன் மரங்களும் ஊசி இலை மரங்களும், அவற்றை தாங்கி பிரமாண்டமாக நிற்கும் மலைகள், பனித்தூறலைத் தாங்கி நிற்கும் மலைச் சிகரங்கள் அனைத்துமே அழகின் உறைவிடங்கள்.
அதில் இந்த எங்கள் பயணத்தில் நாங்கள் இருந்த சிறு நகரின் பெயர் ரோய்ட்ட (Reutte). இந்த நகரம் இருக்கும் பகுதி அரசால் பராமரிக்கப்படும் இயற்கை பாதுகாப்பு இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இயற்கை பாதுகாப்புப் பகுதியும் கூட.
நகரைப் பற்றி சுற்றுலா துறையினர் தயாரித்துக் கொடுத்திருந்த அறிக்கையைத் தங்கும் விடுதியினர் கொடுத்திருந்தனர். அதனை வாசித்ததில் ரோய்ட்ட என்ற இந்த நகரம் முதன் முதலில் அரசாங்க அறிக்கையில் 1278ம் ஆண்டில் பதிவாக்கப்பட்ட செய்தியை அறிந்துகொண்டேன். பழமையான நகரம் தான் இது.
மேலும் இந்த நகரம் பற்றி அறிந்து கொள்ள முயன்ற பொது ஆரம்பத்தில் இந்த நகரத்தின் பெயர் ரோய்ட்ட என்று அமைந்திருக்கவில்லை என்பது தெரிய வந்தது. 1278ம் ஆண்டில் ருதி (Ruthi) என்று வழங்கப்பட்ட இந்த நகரம் 1440 வாக்கில் Rythy என்றும், பின்னர் 18ம் நூற்றாண்டு வாக்கில் Reitti என்றும் வழக்கில் மாறி மாறி தற்சமயம் Reutte என்றும் மாற்றம் கண்ட வரலாற்றினைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஊர்களின் பெயர் மாற்றம் காலத்துக்குக் காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் காண்பது நடைமுறையில் சாத்தியம் தான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் தானே!
ரோய்ட்ட அமைந்திருக்கும் இடம் இதன் முக்கியத்திவத்தைச் சிறப்பிப்பதாகதாக அமைந்திருக்கின்றது என்று சொன்னால் மிகையில்லை. ஜெர்மனி நாட்டு எல்லையில் இருப்பது மற்றும் ஏனைய பிற ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, ப்ரான்ஸ், சுவிஸர்லாந்து இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கும் அதிக தூரம் இல்லையென்பதும் கூட இதற்கு ஒரு தனிச் சிறப்பு. ரோய்ட்ட ஆஸ்திரியாவில் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற டிரோல் மானிலத்தின் எல்லை நகரம் என்பது இவை எல்லாவற்றிற்கும் மேலான தனிச் சிறப்பு. ஆஸ்திரியாவின் இரண்டு மிகப் பெரிய சுற்றுலா பகுதிகள் என்றால் அவை டிரோலும் சால்ஸ்பெர்க்கும் தான்.
ஆக ரோய்ட்ட, டிரோல் மானிலத்தின் வட பகுதியில் எல்லை நகராக அமைந்து ஆஸ்திரியாவின் டிரோலுக்கு வருகின்ற சுற்றுப் பயணிகளை மலர்ந்த முகத்துடன் வரவேற்று நிற்கின்றது.
ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியில் அமைந்திருக்கும் சுவிஸர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து மாறுபட்டது ஆஸ்திரியா. ஏனைய நாடுகள் ஆல்ப்ஸ்மலைத்தொடர்ச்சியில் ஒருபகுதி என்ற வகையில் அமைந்திருப்பது. ஆனால் ஆஸ்திரியாவைப் பொருத்தவரை முழுமையாக ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் ஒரு நாடு இது என்றே குறிப்பிட வேண்டும். இதைப்போல இங்கிருக்கும் மற்றொரு குட்டி நாடான லிக்ஸெஸ்டைனும் அமைகின்றது.
மேற்கு, கிழக்கு வடக்கு தெற்கு என எல்லா பகுதிகளும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பூகோள அமைப்பு அமைந்துள்ளது.உயரமான மலைப்பகுதி, அப்பகுதிகளில் அடர்ந்திருக்கும் பசுமையான மரங்கள் பின்னர் தாழ்வாக இறங்கும் பகுதிகள், பனி கரைந்து உருவாக்கும் நீரோடை இவைகளே இந்த நாட்டில் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும் காட்சி. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் இயற்கையான பள்ளத்தாக்குகளில் மனித குடியேற்றமேற்பட்டமையின் காரணத்தால் கிராமங்கள் நகரங்கள் பெருநகரங்கள் என ஊர்கள் அமைந்திருப்பதைக் காண்போம்.
ஆஸ்திரியா முழுமையும் மலைகள் என்றமைந்திருந்தாலும் இங்கே மிகத் தரமான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மலை உச்சிக்குச் செல்லும் பாதை கூட விரிவாக தரமாக வாகனம் ஓட்டிச் செல்வோர் சிரமமின்றி பயணிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் இங்கே பனிக்காலம் இருப்பதால் பனி கொட்டி சாலையை நிரப்பிவிடும் வேளையில் அதனை சுத்தம் செய்ய வரும் வாகனங்கள் அடிக்கடி வந்து சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை தூக்கி நகர்த்திக்கொட்டி சாலையை பனி இல்லாமல் ஆக்கி விடுகின்றன. மலைப்பகுதி பயணங்கள் எனும் போது கேபிள் கார் பயணம் பரவலாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மலையடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்லும் கேபிள் கார் வசதிகள் மிக விரிவாக புழக்கத்தில் உள்ளன.
குளிர்கால விளையாட்டுக்கள் வருடம் முழுக்க இங்கே தடையில்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. விண்டர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு மைதானம் இங்குள்ள சீபெல்ட் (Seefeld) நகரில் தான் அமைந்திருக்கின்றது. பனிக்கால விளையாட்டுக்களில் பயிற்சி பெற விரும்புவோர் எந்த தயக்கமுமின்றி ஆஸ்திரியாவின் எல்லா பகுதிகளில் தடையின்றி அமைந்திருக்கும் பனி விளையாட்டுப் பள்ளிகளில் பதிந்து பயிற்சி பெற முடியும்.
விண்டர் விளையாட்டுப் போட்டிகள் ஆசிய நாடுகளில் அவ்வளவாகப் பிரபலமாகாவிடினும் கூட ஐரோப்பா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் முக்கிய விளையாட்டுக்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி விளையாட்டுக்கள் பனிவெளி, பனிமலையை சார்ந்தும் நிகழ்வதால் ஆஸ்திரியா எப்போதும் வருகையாளர்கள் நிறைந்து காணப்படும் ஒரு நாடாகவே உள்ளது. எவ்விதமான குளிர்கால பனி விளையாட்டுக்கள் மக்கள் ஈடுபடுபவை என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த விக்கி பகுதி நல்லதொரு அறிமுகத்தைத் தரலாம்.