ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்மாணிக்க எண்ணிய குரு ஒருவர் அதற்கு பணம் திரட்ட சீடர்களை ஊருக்குள் அனுப்பிவந்தார். அவர்கள் ஒரு சீமாட்டி வீட்டிற்குச் சென்று விவரம் கூற நிறைய தங்க நாணயங்களை அவள் நன்கொடை தந்தாள்.
அதைக் கண்ட வேலைக்காரச் சிறுமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என எண்ணி பல நாட்களாக தான் வைத்திருந்த செல்லாத செம்பு நாணயம் ஒன்றை சீடர்களிடம் தந்தாள்.
செல்லாக் காசை கண்ட தலைமைச்சீடன் “இந்தக் காசு எதற்குமே பயன்படாது நீயே வைத்துக்கொள்” என திருப்பித்தர துயரத்துடன் வாங்கிக் கொண்டாள் சிறுமி.
சில நாட்களுக்குப் பின் இறைவன் திருவுருவை உருவாக்கம் செய்தபோது சிலையில் ஒரு விரிசல் எவ்வளவு சரி செய்தும் உருவாகிக்கொண்டே இருந்தது.
குரு “ இன்னொரு சிலையை உருவாக்குங்கள் “ எனக் கூறி தானே நேரில் பார்வையிட்டும் சிலையில் விரிசல் விழுந்தது. திகைத்துப்போன குரு சீடர்களிடம் விசாரிக்க சிறுமியின் செல்லாக்காசு விவரம் அறிந்தார்.
உடனே சென்று அந்த சிறுமியிடமிருந்து செல்லாக்காசை வாங்கிக்கொண்டு வாருங்கள் எனக் கட்டளையிட தலைமைச் சீடன் அவ்வாறே வாங்கி வந்தான். பிறகு அதையும் சேர்த்து உருக்கி அச்சில் ஊற்றச் சொன்னார் குரு.
அதன்பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் அச்சை நீக்கிப் பார்த்த அனைவருக்கும் வியப்பு. எவ்வித விரிசலும் இன்றி இறைவனின் திருவுருவச்சிலை பொன் எழில் பூத்தது. அத்துடன் இறைவனின் இதயப்பகுதியில் ஏதோ பதிந்திருப்பது போல் தெரிய எல்லோரும் உற்றுப்பார்த்தார்கள்.
அது அச்சிறுமி மனதார இறைவன் திருப்பணிக்கு அளித்த செல்லாக் காசு. குரு அர்த்தபுஷ்டியுடன் தலைமைச் சீடனைப் பார்க்க தலை கவிழ்ந்தான் அவன்.