Home » சிறுகதைகள் » அஷ்டவக்கிரர்!!!
அஷ்டவக்கிரர்!!!

அஷ்டவக்கிரர்!!!

பாரத மகரிஷிகளுள் புகழ் பெற்றவர்; முக்காலம் அறிந்த முழு ஞானி; சூதுகளை வாதுகளால் வெல்லும் தர்க்க சாஸ்திரி எனப் பெயர் பெற்றவர் அஷ்டவக்கிரர்.

கவுரவர்களுடன் சூதாட்டம் ஆடி தோற்றுப் போனார்கள் பாண்டவர்கள். அதன் விளைவாக பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் புகுந்தனர். காட்டின் உள்ளே உத்தாலகர் என்ற ஒரு ரிஷியின் ஆசிரமம் இருந்தது. பாண்டவர்கள் அங்கு வந்தார்கள். வழக்கமாக அவர்கள் எந்த ஒரு புதிய இடத்திற்கு வந்தாலும் அந்த இடத்தைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வர். அவ்வாறே அந்த ஆசிரமத்தைப் பற்றி அறிந்து பெரிய ஞான பண்டிதர் என்று உணர்ந்தனர். அவரிடத்தில் பக்தி கொண்டு அணுகி, பல விஷயங்களைக் கேட்டறிந்தனர். உத்தாலக மகரிஷியிடம் சில சீடர்கள் இருந்தனர். அதில் ஒருவன் ககோளகன். பார்க்க, ஒரு மாதிரி அம்மாஞ்சி போல இருந்தாலும், ரொம்பப் பதவிசு. ஒரு வம்பு தும்புக்குப் போகமாட்டான்.

ககோளகன், தன் குருவிடம் பக்தி உள்ளவன்தான். ஆனால் ஏட்டுக்கல்விதான் அவனுக்கு எட்டிக் காயாக இருந்தது. குருநாதர் சொல்வதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதால் விட்டு விடுவான். இரண்டு காதுகளுக்கும் நடுவில் அவன் கபாலத்திற்குள் இருக்க வேண்டியது இல்லாமல், இடம் காலியாகக் கிடந்தது; காற்றோட்டமாக இருந்தது. இதனால் மற்ற சீடர்கள் எல்லாம் அவனை மக்கு, மக்கு என்று எக்கச்சக்கமாக எள்ளி நகையாடினர். குருவுக்கு வருத்தம். இருப்பினும், ககோளகனுக்கு படிப்புதான் சரிப்படவில்லை; மற்ற விஷயங்களில் அவன் கெட்டிக்காரனாக இருக்கக்கூடும் என்று குரு உத்தாலகர் நம்பி, ஒரு காரியம் பண்ணினார். தன் மகள் சுஜாதாவை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார். ககோளகன் மனைவியுடன் மகிழ்வாக இல்லறம் நடத்தியதன் விளைவு… வேறென்ன, மனைவி சுஜாதா கர்ப்பவதியானாள்.

சில குழந்தைகள் தாய் தந்தையின் சாயலையும், தாத்தா பாட்டியின் அறிவையும் கொண்டு பிறப்பது உண்டு. சுஜாதா வயிற்றில் இருந்த சிசுவும் கர்ப்பத்திலேயே தாத்தா உத்தாலக மகரிஷியைப் போல வேதத்தை நன்கு அறிந்திருந்தது.

குழந்தையின் தந்தை ககோளகன் சும்மா இருக்காமல், ஓய்வு நேரத்தில்  வேதப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உரக்கப் படிப்பான். வேதத்தை அவன் எக்குத் தப்பாகப் படித்து ஏடாகூடமாகச் சொல்வதை ஞானக் குழந்தை ஏனோதானா என்று கேட்டுக் கொண்டிருக்குமா? அதற்குப் பொறுக்கவில்லை. “அடே, ஞானசூன்யா! மூடும் உம் திருவாயை!” என்று கத்த வேண்டும் போலிருந்தது. சத்தம் போட்டாலும் வெளியே கேட்காது என்று அறிந்தோ என்னவோ, அது சங்கடப்பட்டு நெளிந்தது. விளைவு அதன் உடல் நெளிந்து வளைந்து அஷ்டகோணலாகி, சுருங்கி, சிறுத்து, உயரம் குறைவாகப் பிறந்துவிட்டது.

அஷ்ட (எட்டு) கோணல் வடிவில் பிறந்ததால் அவருக்கு அஷ்டவக்கிரர் என்று பெயரிட்டார்கள். கருவிலே திருவுடையானாக விளங்கிய அஷ்டவக்கிரர் சிறந்த கல்விமானாகி, பன்னிரண்டு வயதிற்குள் மிகச் சிறந்த வேத விற்பன்னராகத் திகழ்ந்தார்.

அஷ்டவக்கிரர் குழந்தையாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. இவர் தந்தையை ஜனக மகாராஜனின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த வந்தி என்பவன், வாதில் வென்று தந்தைக்கு கொடிய தண்டனைகள் விதித்தான். தந்தைக்கு நேர்ந்ததை பின்னர் அறிந்த அஷ்டவக்கிரர், வந்தி பண்டிதனை உண்டு, இல்லை என்று ரெண்டில் ஒன்று பார்க்காமல் விடுவதில்லை என்று தீர்மானித்து மிதிலைக்குச் சென்றார். மிதிலை நகரில் யாகசாலை நோக்கி அவர் செல்லும்போது, எதிரே ஜனகர் பரிவாரங்களுடன் வந்து கொண்டிருந்தார். சேவகர்கள், “மன்னர் வருகிறார்! சாலையில் ஒதுங்கிப் போ!” என்று எச்சரித்தும் அஷ்டவக்கிரர் நடுவீதியில் நடந்தார். சேவகர்கள் தடுத்தனர்.

“பெண்கள், உடல் ஊனமுற்றவர்கள், சுமை சுமந்தோர், குழந்தைகள் ஆகியோர் சென்றால் விலகிச் செல்லும்படி கூறுவது சாஸ்திர விரோதம்!” என்றார் அஷ்டவக்கிரர். இதைக் கேட்ட ஜனகர், “அவர் சொல்வது சரிதான்! ஆளை, அனுமதியுங்கள்!” என்று ஆக்ஞையிட்டார். அஷ்டவக்கிரர் யாகசாலையை அடைந்தார். அங்கேயும் அவரது சின்னஞ் சிறு தோற்றத்தைக் கண்டு, சிறுவர்களுக்கு அனுமதியில்லை! என்று தடுத்தனர், காவலர்கள்.

“நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ, ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ, ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்” என்றார் அஷ்டாவக்கிரர்.

“அறிவுக்கு வயது ஏது? அல்லது, உடலைப் போல அறிவையும் அங்குலக் கணக்கில் அளக்க முடியுமா? வயது குறைந்த நான் சிறியவனும் அல்ல; முதிர்ந்த கிழம் எல்லாம் பெரியவரும் அல்ல!” என்று வாதிட்டு, உள் நுழைந்தார்.

அவைக்குள் அவர் வந்ததும் அங்கு கூடியிருந்தோர் அவருடைய அவலட்சணத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். அஷ்டவக்கிரர் நிதானமாகச் சொன்னார், ”ஜனகரே,இது தத்துவ ஞானிகள் நிறைந்த சபை என்று நான் எண்ணித்தான் இங்கு வந்தேன். கசாப்புக் கடைக்காரர்களும்,செருப்பு தைப்பவர்களும் நிறைந்த இந்த சபைக்கு தவறுதலாக வந்து விட்டேன்.

இதைக்கேட்ட அறிஞர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். மன்னர் அவரிடம் விளக்கம் கேட்டார்.

அதற்கு அவர், ”இங்குள்ளவர்கள் என்னைத் தோலாகவும் சதையாகவும், எலும்பாகவுமே பார்த்தனர். சதையையும் எலும்பையும் விற்பவர் கசாப்புக் கடைக்காரர். தோலைப் பயன்படுத்துபவர் செருப்புத் தைப்பவர். ஒரு உன்னதமான தத்துவ ஞானி,மனிதனின் ஆன்மாவையே பார்க்கிறார். அதையே அங்கீகரிக்கிறார்.அது அனைவருக்கும் ஒன்றே,”என்று பதிலளித்தார்.

பின்னர் ஜனகரிடம், “உமது ஆஸ்தான பண்டிதன் வந்தியை வரச்சொல். இப்போது அவனை நான் வாதுக்கு அழைக்கிறேன். முன்பு என் தந்தையை வென்றவன், தைரியம் இருந்தால் என்னெதிர் வரட்டும்!” என்றார்.

மகாராஜா வியந்தார். “நீயோ சிறுவன்; வேண்டாம், விபரீதம்!” என்றார்.

“மன்னரே! நான் அக்கினிக் குஞ்சு! கனலில் மூப்பென்றும் சிறிதென்றும் உண்டோ? சிறுநெருப்பு என்றால் சுடாதோ?”

வந்தி வந்தான். வாதில் அமர்ந்தான். அவனது கேள்விகளை எல்லாம் தம் வாதினால் முறியடித்தார் அஷ்டவக்கிரர். பதிலுக்கு அஷ்டவக்கிரர் கேட்ட கேள்விகளுக்கு வந்தியால் பதில் கூற முடியவில்லை. சபையோர் அஷ்டவக்கிரர் பக்கம் வெற்றிக் கொடி காட்டினர். வந்தி அஷ்டவக்கிரர் திருவடியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, ஆஸ்தான பதவியையும் அரண்மனையையும் விட்டு வெளியேறினான்.

அஷ்டவக்கிரர் பின்னர் சமங் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, அஷ்டகோணலான தன் உடல் நேராக நிமிரப் பெற்றார் என்பது புராணக் கதை.

திருக்குறளில் உள்ள சில குறள்களை பிரபல மகரிஷிகளை மனதில் வைத்து வள்ளுவர் இயற்றியிருப்பார் என்று கூறியிருக்கிறோம் அல்லவா? அஷ்டவக்கிரரை மனதில் கொண்டு வள்ளுவர் இயற்றிய குறள் எது தெரியுமா?

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (குறள் 667)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top