ஆப்பிள் தினம் அக்டோபர் 21 …
ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள்.மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு.ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம்.
ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. பைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது.
அதாவது குறிப்பாக `குவர்செடின்’ அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது. வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது.
மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது. இப்பொழுது ‘fuji apple’ கூட கிடைக்கிறது. பல நிறங்களில் கிடைத்தாலும் பலன் என்னவோ ஓன்றுதான்.
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.
அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.
செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.
குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தைஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். ஏன் பெரியவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.
ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன.
ஆப்பிளை அப்படியே உண்ணலாம். சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்து உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம்.
ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம்.
ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம்.
ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் அதன் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால், நன்கு அலம்ப வேண்டும் அல்லது தோலை நீக்கிவிடுவது நல்லது.
ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும்.
இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும்.
சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.
தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது.
பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.
ஆப்பிள் ஜூஸ்: ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும்.
இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.
ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும்.