Home » படித்ததில் பிடித்தது » கவிஞர் கண்ணதாசன்!!!
கவிஞர் கண்ணதாசன்!!!

கவிஞர் கண்ணதாசன்!!!

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.

தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் முரண்பாடுகளைக் கண்டு வளர்ந்தது. தமிழ் வழங்கும் இடங்களில் எல்லாம் அவரைச் சிறப்பாகத் திகழ வைத்தவை அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களே.

தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழ்நாடு மாநிலம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். இவருடைய தந்தை சாத்தப்பனார், தாய் விசாலாட்சி ஆச்சி. இவருடன் உடன் பிறந்தோர் 8 பேர். சிறுவயதிலேயே இவரை ஒருவர் ரூ.7000-க்கு தத்து எடுத்து வளர்த்தார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த கண்ணதாசன் 1943-ஆம் ஆண்டு திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை அவரது ‘வனவாசம்’ நூலைப் படித்தால் உணரலாம்.

கல்வி:

சிறிகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி, அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 15 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 17 வயதில் அவரது முதல் கவிதை வெளிவந்தது.

புனைப்பெயர் – காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி

தொழில் – கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்

எழுதிய காலம்: 1944 – 1981

முதல் குறுங்காவியம்: மாங்கனி. இவை டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையிலிருந்துகொண்டு படைத்தது. (1952-53)

மணவாழ்க்கை: 1950ல் கண்ணதாசனின் மண வாழ்க்கை தொடங்கியது. கவிஞருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்).

இரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது ‘கண்ணதாசன் பதிப்பக’த்தின் அதிபர்).

 

மூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி மனோகரன் என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்). கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவு மறைவு இன்றி ‘வனவாசம்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அது அவருடைய மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. தன் குணச்சித்திரத்தை இரண்டே வரிகளில் பாடலாக எழுதியுள்ளார்.

‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணை இருப்பு’ என்பதே அப்பாடல். இப்பாடல், அவரே பாடுவது போல ரத்த திலகத்தில் இடம் பெற்றுள்ளது.

அரசியல்: 1949ல் திமுக தொடங்கி அரசியலில் பல்வேறு அனுபவங்களை தந்தது.

திமுகவிலிருந்து விலகல்: 1960-61 ஆம் ஆண்டுகளில் தி.மு.க.விலிருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று 1960-61 ஆம் ஆண்டுகளில் அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.

இவரது ‘சேரமான் காதலி’ என்ற புதினம் 1980 ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. ‘குழந்தைக்காக’ என்ற திரைப்படத்திற்கு எழுதிய திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்படல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகொர்த்தன, கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.

 பத்திரிக்கை: அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய  உருவக கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.

அரசவை கவிஞர்: தமிழ்நாட்டின் ‘அரசவை கவிஞராக (ஆஸ்தான கவிஞர்) கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.

அதன் பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை, 28-3-1978-ல் ‘அரசவைக் கவிஞர்’ ஆக நியமித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதம்: அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யா லகரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார்.

சுயபிரகடனம்: கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். ” நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்” என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.

தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும்  உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசன். மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப்பாடல்களின் மூலம் தனது கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி அறிவுறுத்திய தேசிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.

கண்ணதாசனின் நூல்கள்:

பிரதானமானவை

இயேசு காவியம்

அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

திரைப்படப் பாடல்கள்

மாங்கனி

கவிதை நூல்கள்:

கண்ணதாசன் கவிதைகள் – 6 பாகங்களில்

பாடிக்கொடுத்த மங்களங்கள்

கவிதாஞ்சலி

தாய்ப்பாவை

ஸ்ரீகிருஷ்ண கவசம்

அவளுக்கு ஒரு பாடல்

சுருதி சேராத ராகங்கள்

முற்றுப்பெறாத காவியங்கள்

பஜகோவிந்தம்

ருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்:

அவள் ஒரு இந்துப் பெண்

சிவப்புக்கல் மூக்குத்தி

ரத்த புஷ்பங்கள்

சுவர்ணா சரஸ்வதி

நடந்த கதை

மிசா

சுருதி சேராத ராகங்கள்

முப்பது நாளும் பவுர்ணமி

அரங்கமும் அந்தரங்கமும்

ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி

தெய்வத் திருமணங்கள்

ஆயிரங்கால் மண்டபம்

காதல் கொண்ட தென்னாடு

அதைவிட ரகசியம்

ஒரு கவிஞனின் கதை

சிங்காரி பார்த்த சென்னை

வேலங்காட்டியூர் விழா

விளக்கு மட்டுமா சிவப்பு

வனவாசம்

அத்வைத ரகசியம்

பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்:

எனது வசந்த காலங்கள்

எனது சுயசரிதம்

வனவாசம்

கட்டுரைகள்:

கடைசிப்பக்கம்

போய் வருகிறேன்

அந்தி, சந்தி, அர்த்தஜாமம்

நான் பார்த்த அரசியல்

எண்ணங்கள்

தாயகங்கள்

வாழ்க்கை என்னும் சோலையிலே

குடும்பசுகம்

ஞானாம்பிகா

ராகமாலிகா

இலக்கியத்தில் காதல்

தோட்டத்து மலர்கள்

இலக்கிய யுத்தங்கள்

போய் வருகிறேன்

நாடகங்கள்:

அனார்கலி

சிவகங்கைச்சீமை

ராஜ தண்டனை

கவிஞரின் பழமொழிகள்:

கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் எழுதலாம், செய்யப் போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் செல்லலாம்!

முட்டையைக் கொடுத்துக் காசு வாங்கிறவன் வியாபாரி, காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி, எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல் வாதி.

கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்!

யாருக்காகவும் என்னை மாற்றி கொள்ளாதே

ஒருவேளை மாற நினைத்தால்

ஒவ்வொரு மனிதர்களுக்கும்

நீ மாற வேண்டி வரும்.

 

அழும் போது தனிமையில் அழு,

சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி!

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,

தனிமையில் சிரித்தால்

பைத்தியம் என்பார்கள்.

 

நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே

 

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்

மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?

உணர்ச்சிகளைச் சொல்லும்போது நேராகவும் கூராகவும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை.

 

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்.

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.

சொல்லாத சொல்லுக்கு விலைஏது மில்லை.

தத்துவத்தைத் திரைப்பாடல்களில் மனமுருகக் காட்டியவர் கண்ணதாசன்.

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா-என்

இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா.

நூற்றுக்கணக்கான பாத்திரங்களின் ஆயிரக்கணக்கான உணர்வுகளின் நுட்ப வேறுபாடுகளைக் கண்ணதாசன் சித்திரித்ததுபோல வேறொருவர் சித்திரித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

மக்கள் மனங்களிலும் உதடுகளிலும் அன்றும் இன்றும் என்றும் அசைப்போடும் பாடல்கள்:

“கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே.” என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய கவிஞர் அடுத்து…

போனால் போகட்டும் போடா .

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?

————————————————–

வீ டுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ ?

…………………………..

மனிதன் மாறி விட்டான்

மதத்தில் எறி விட்டான்

…………………………………………………

உன்னைச் சொல்லி குற்றமில்லை

…………………………………………………………………

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்

அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் .

………………………………………………………………………..

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா… கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா… கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்த்த
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா – கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

…………………………………………………………………………………….

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா – அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா – அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு – அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் – பொருள் தந்து மணம் பேசுவார் – மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் – மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக – மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா?
பிரித்த கதை சொல்லவா?
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா – இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

ம்ம்… அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ

…………………………………………………………………………………………..

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம் !

குரங்குகள் போலே மரங்களின் மேலே
தாவித் திரிந்தோமே

குயில்களைப் போலே இரவும் பகலும்
கூவித் திரிந்தோமே

வரவில்லாமல் செலவுகள் செய்து
மகிழ்திருந்தோமே

வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்
வாழ்ந்து வந்தோமே நாமே
வாழ்ந்து வந்தோமே

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு
செல்வோமோ

இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி
நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ

………………………………………………………………………………………………………

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்

பால்போல் சிரிப்பதில் பிள்ளை – அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை (2) – அவள்
கவிஞனாக்கினாள் என்னை

……………………………………………………………………………………………………………………

நிலவைப் பார்த்து வானம் சொன்னது

என்னை தொடதே .

………………………………………………………………………………………………………………………………………

கவலை இல்லாத மனிதன் படம் எடுத்து நஷ்டப்பட்டு  கவலைப்பட்ட வரலாறும் உண்டு.

“நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு

பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது .” என்று சொன்ன வரிகள் இன்றும் பலரின் உதடுகளில் உறவாடி வருகின்றன.

‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.

மணிமண்டபம்: தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கவிஞரின் இரங்கல் கவிதை: மறைந்த பிரதமர் நேரு மீது மிகுந்த பற்று வைத்திருந்த கண்ணதாசன். 1964-ல் நேரு மறைந்தபோது அவர் மீது கொண்டிருந்த பக்திக்கு சான்றாக கண்ணதாசன் ‘சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா’ என்று எழுதிய இரங்கல் கவிதை விளங்குகிறது.

அந்த கவிதை———–

சீரிய நெற்றி எங்கே?

சிவந்த நல் இதழ் எங்கே?

கூரிய விழிகள் எங்கே?

குவலயம் போனதெங்கே?

நேரிய பார்வை எங்கே?

நிமிர்ந்த நன் நடைதான் எங்கே

நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்த திங்கே

ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?

எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட

தாயே எனக்கொரு வரம் வேண்டும்

தலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்

சாவே உனக்கொருநாள்

சாவு வந்து சேராதோ

சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ?

தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?

தெய்வமே உன்னையும் நாம் தேம்பி

அழ வையோமோ

கண்ணதாசனின் ஆசையும் மறைவும்:

கண்ணதாசன் பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். அப்போதெல்லாம் அவர் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணத்தைப் பற்றியும் குறிப்பிடலானார். தன்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவரே உணரலானார். ‘மரணத்தை ரகசியமாக இறைவன் வைத்துள்ளதால்தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதாபிமானத்துடன் நடக்கிறான்’ என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘காமராஜர் போல, மறைந்த பட அதிபர் சின்னஅண்ணாமலை போல மரணம் திடீர் என்று வரவேண்டும். என் கண்ணனிடம் எனது கடைசி ஆசையாக இதைத்தான் கேட்டு வருகிறேன்’ என்று கூறிவந்த கவிஞர் வெள்ளித்திரையில் ஒரு முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரப்படி 10.45 மணிக்கு மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top