Home » சிறுகதைகள் » தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!
தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

உத்தமபுரம் சமஸ்தானத்தை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சந்திரன். அவன் ஒரு பேராசை பிடித்தவன். உலகத்தில் உள்ள அவ்வளவு செல்வமும் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவான்.

ஒருபோதும் அவன் குடி மக்களின் நன்மையைப் பற்றி கவலைப் பட்டவனே இல்லை. அவர்களும் அவன்மீது பிரியம் இல்லாமலே இருந்தனர். மொத்தத்தில் அவன் ஒரு கொடுங் கோலனாகவே இருந்தான். கொடுங்கோல் மன்னனை யார் விரும்புவார்கள்?

அவனுக்கும் மக்களின் வெறுப்பு புரிந்தே இருந்தது. அவன் என்றாவது ஒருநாள் யாராவது ஒருவர் தன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகத் தன்னைக் கொன்றுவிடுவர் என்று கருதினான்.

அதற்குள் உலகத்துச் செல்வத்தை எல்லாம் தான் அடைந்துவிட வேண்டும் என்ற பேராசையில் அவன் செல்வத்தைச் சேர்த்து வந்தான். அவனிடம் அபூர்வமான பொருள்கள் ஏராளமாக இருந்தன. பல பணியாளர்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியக் காத்திருந்தனர்.

அவனுக்கு இளமைக்கால நண்பன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் மருது பாண்டி. அவனும், சந்திரனும் இளமைக் காலத்தில் ஒரே ஆசிரியரிடம் கல்வி கற்றனர். ஆனால், மருதுபாண்டி ஏழை வீட்டுப்பிள்ளை. இன்னமும் ஏழையாகவே இருக்கிறான்.

ஒருநாள் அவன் தன் பால்ய கால நண்பனான மன்னன் சந்திரனைக் காண அரண்மனைக்கு வந்தான். அதுவரை அவன் அரண்மனைக்கு வந்ததே இல்லை. அரசனும் அவனை வரவேற்று நன்கு உபசரித்தான்.

அறுசுவை விருந்தளித்தான். மருது பாண்டிக்கு அரசனின் செல்வத்தையும், செல்வாக்கையும் பார்த்து மிகுந்த ஆச்சரிய மாக இருந்தது. அவன் அரசனிடம், “”உன்னைக்காட்டிலும் உலகத்தில் மகிழ்ச்சி யானவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள் அல்லவா?” என்று ஆர்வத்தோடு கேட்டான்.
அதற்கு அரசன், “”அப்படி எதுவும் இல்லை!” என்று சொன்ன போது அவன் அதை நம்பவில்லை.

“”செல்வத்தால் கிடைக்க முடியாத சந்தோஷம் உலகில் என்ன இருக்கிறது?” என்று வாதிட்டான்.

அரசன் அவனைப் பார்த்து, “”சரி, நீ என் இடத்தில் இருந்தால் மிக சந்தோஷமாக இருக்கலாம் என்று எண்ணுகிறாய் அல்லவா? நீ என்னிடத்திற்கு வந்துவிடுகிறாயா?” என்று கேட்டான்.

மருதுபாண்டி சற்று யோசித்தான். பிறகு, “”சில நாட்கள் மட்டும் நான் உன் இடத்திற்கு வந்துவிட சம்மதிக்கிறேன். ஏன் என்றால் எனக்காக நீ பல நாள் உன் சந்தோஷங்களை இழந்து துன்பப்பட வேண்டாம்,” என்று ஆர்வம் கொப்பளிக்கக் கூறினான்.

அரசன் உடனே தன் கிரீடத்தைக் கழற்றி அவன் தலையில் சூட்டினான்.

தன் பணியாளர்களை அழைத்து, “”இன்றிலிருந்து சில நாட்கள் இவர் உங்கள் அரசனாக இருப்பார். என்னிடம் நீங்கள் எவ்வாறு பணிந்து நடந்தீர்களோ அதே போல், இவரிடமும் நீங்கள் பணிவோடு நடந்துகொள்ள வேண்டும்,” என்று கட்டளையிட்டான்.

பணியாளர்கள் அவன் கட்டளையைப் பின்பற்றி மருதுபாண்டிக்கு அடிபணிந்தனர். மருதுபாண்டியை வாசனைத் திரவியங்கள் நிரம்பிய பன்னீரால் குளிப்பாட்டினர். பட்டுப் பட்டாடைகளை அணிவித்தனர். ஏராளமான ஆபரணங்களைப் பூட்டி அலங்கரித்தனர். பின்னர் சாப்பிடும் இடத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு ஏராளமான உணவு வகைகள் மிகப் பிரமாதமாகத் தயாரிக்கப்பட்டு மேஜை மீது தயாராகப் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது. மருதுபாண்டிக்கு மகிழ்ச்சி கட்டுக் கடங்கவில்லை.

அவன் ஒவ்வொன்றிலும் சிறிது எடுத்து ருசி பார்த்தான்; ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று மிகுந்த ருசியாக இருந்தது. அவன் ரசித்து ருசித்துச் சாப்பிட்டு விட்டு பழ ரசத்தைக் குடிப்பதற்குக் குவளையை கையில் பிடித்துக்கொண்டு அண்ணாந்தான்.

அவ்வளவுதான்! அவன் மகிழ்ச்சி எல்லாம் அவனை விட்டு விட்டு ஓடி ஒளிந்துக்கொண்டது. ஏனென்றால், அவன் தலைக்கு மேலே மெல்லிய குதிரைவால் முடியில் கட்டப்பட்ட ஒரு கூரிய கத்தி தொங்கிக் கொண்டு இருந்தது. அவன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பதறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி தர்பார் மண்டபத்தை அடைந்து அரியாசனத்தில் அமர்ந்தான்.

பிறகு ஒரு சந்தேகத்தோடு, லேசாக தலையைத் தூக்கிப் பார்த்தான். அங்கும் ஒரு கத்தி பளபளவென்று தலைக்குமேலே தொங்கியது. அவனுக்கு கைகால் வெல வெலத்துப் போனது. ஏன் இப்படி ஒரு கத்தி அரசன் தலைமீது தொங்க வேண்டும்? இது எவ்வளவு நாளாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது? எப்போது அறுந்து தலை மீது விழும்? ஒரு சமயம் இந்த வினாடியே அறுந்து விழுந்து விட்டால் தன் கதி என்னவாகும்?

தன் அருகில் நின்றுகொண்டிருந்த வயதான காவலாளியை அழைத்துத் தன் சந்தேகங்களைப் பற்றி விசாரித்தான். அந்தக் காவல்காரர், “”அரசே, எல்லா அரண்மனைகளிலுமே அரசன் தலைக்கு மேலே ஒரு கத்தி தொங்குவது வழக்கம்தான். நம் அரண்மனைக் கத்திகள் என்னுடைய முப்பாட்டன் காலத்திலிருந்து தொங்கிக்கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்,” என்றான் பணிவோடு.

மருதுபாண்டிக்கு பயம் பிடித்துக் கொண்டது. ஒரு சமயம் ஆண்டாண்டு காலமாகத் தொங்கிக் கொண்டு இருக்கும் இந்தக் கத்தி குதிரைவால் முடி நைந்து இப்போதே தன் தலையில் அறுந்துவிழுந்து விட்டால்? அவன் மனம் நடுங்கியது. அவசர அவசரமாக அவன் தர்பார் பணிகளை முடித்துக்கொண்டு படுக்கையறைக்கு வந்தான். அப்பாடா தலைக்கு மேல் கத்தி பயத்திலிருந்து தப்பினோம். நாளையி லிருந்து உணவை இங்கேயே கொண்டுவரச் சொல்ல வேண்டும். தர்பார் மண்டத்திற்கு போகவே கூடாது என்று முடிவு செய்து கொண்டு அங்கு அரசனுக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த மிக உயர்வான அலங்காரமான படுக்கையில் அமர்ந்தான்.

அவனுக்கு இந்தத் தொங்கும் கத்தியைத் தவிர அரண்மனை வாழ்க்கையும், அதன் ஆடம்பரமும் பிடித்தே இருந்தன. நாளை விடிந்ததும் இந்தக் கத்திகளுக்கு ஒரு வழி செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு இவன் அந்தப் படுக்கையில் படுத்து விட்டத்தை நோக்கினான். என்ன கொடுமை? அங்கும் ஒரு கூரிய கத்தி அவன் தலைக்கு நேராகத் தொங்கிக் கொண்டிருந்தது. பயந்து போன அவன் கண்களுக்கு அந்தக் கத்தியை கட்டியிருந்த குதிரைவால் முடி லேசாக இற்றுப்போயிருப்பது போல் தெரிந்தது.

அவ்வளவுதான்! அவன் தூக்கம் எல்லாம் அவனை அனாதரவாக விட்டு விட்டு ஓடி ஒளிந்துகொண்டது. இரவு முழுவதும் அவன் கண்ணோடு கண் மூடாமல் அந்தக் கத்தியையே பார்த்துக் கொண்டு குலை நடுங்கிப்போய் படுத்துக் கிடந்தான். எப்போது விடியும் என்று காத்துக் கிடந்தான். ஒரு வழியாகப் பொழுதும் விடிந்தது. அவன் எழுந்து ஓடோடிச் சென்று சந்திரனைப் பார்த்து, “”ஐயா, எனக்கு இந்தக் கீரிடம் வேண்டாம். அதனோடு தலைக்கு மேலே கத்தி தொங்கும் ஆபத்தும் வேண்டாம். உங்கள் செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும் பின் எவ்வளவு பெரிய ஆபத்து புதைந்து கிடக்கிறது என்று எனக்குப் புரிந்துவிட்டது.

“”செல்வம் இல்லாவிட்டாலும் ஆபத்து இல்லாத என் ஏழைக் குடிசையே எனக்கு மகிழ்ச்சியும், பாதுகாப்பும் கொடுக்கும் இடம் என்று இப்போது நான் புரிந்து கொண்டேன். நான் வருகிறேன்,” என்று கூறிவிட்டு, தன் பொத்தல் குடிசைக்கு வந்து, “அப்பாடா!’ என்று நிம்மதியாகப் படுத்து உறங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top