இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்களுள் அக்பரும் தலை சிறந்த மன்னனாகக் கொள்ளப்படுகிறார். மொகாலய பேரரசினை நிறுவுவதில் அக்பரின் பங்களிப்பானது அளப்பரியதாகும். தமது பெருமுயற்சியால் ஒரு பேரரசினை நிறுவி, அதனை ஐம்பது ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். இவரது நிருவாகம், அரசியல் நடவடிக்கைகள், சமயக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, சமூக மற்றும் பொருளாதார ரீதியான பங்களிப்பு, கலைத்துறைசார் பங்களிப்பு என இவரது ஆட்சி பல முக்கியத்துவ அம்சங்களை உள்ளடக்கியது.
அக்பர் சிந்து மாவட்ட அமரர் கோட்டம் என்ற இடத்தில் உமாயூன், ஹமீதா பானு பேகம் தம்பதியினருக்கு கி.பி1542 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ஆம் திகதி மகனாகப் பிறந்தார். பிறந்ததும் அக்பருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாருக்தீன் என்பதாகும். பின்னர் அவரை ஜலாலுதீன் முகம்மது அக்பர் என அழைத்தனர். அக்பர் பிறந்த சமகாலத்தில் தந்தை உமாயூன் தன் நாட்டினை இழந்திருந்தார். தனது குடும்பத்தை காந்தஹாரில் இருக்கும்படி பணித்துவிட்டு உமாயூன் பாரசீகம் சென்றார். பாரசீக மன்னரின் உதவியுடன் தன் இளவல் அஸ்காரியை வென்று காந்தஹாரினைக் கைப்பற்றிக் கொண்டார். 1545 முதல் அக்பர் தனது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். அக்பர் படிப்பில் நாட்டம் கொள்ளவில்லை. அதேவேளை வேட்டையாடல், போர்ப்பயிற்சி செய்தலில் ஆர்வம் காட்டினார்.
உமாயூனின் சகோதரன் ஹிண்டால் மடிந்தபோது அக்பர் (9ஆவது வயதில்) கஜினியின் ஆளுநராக நியமனம் பெற்றதுடன் ஹிண்டாலின் மகளையும் திருமணம் செய்தார். உமாயூன் டெல்லியின் அரசனானதும் (கி.பி1555) அக்பர் லாகூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இளம் வயதான அக்பரின் பாதுகாவலனாக பைராம்கான் அமர்த்தப்பட்டான். உமாயூன் 1556 ஆம் ஆண்டு இறந்தபோது ஆட்சிப் பொறுப்புக்கள் அக்பரிடம் வந்து சேர்ந்தது. 1556 ஆம் ஆண்டு மாசி மாதம் 14ஆம் திகதி அக்பர் டெல்லியின் அரசனாக முடிசூடிக்கொண்டார்.
அக்பர் ஆட்சிப்பீடம் ஏறியபோது பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. உமாயூன் இறந்தபோது டெல்லி, ஆக்ரா பகுதிகளை ஹேமு (அடில்ஷாவின் தளகர்த்தா) என்பான் கைப்பற்றிக் கொண்டான். பஞ்சாப் தனக்கு சொந்தமென சிகந்தர் ஷா என்பான் உரிமை பாராட்டினான். மிர்ஸா ஹகீம் என்பான் (அக்பரின் உறவினன்) காபுலில் தனியரசர் போல் ஆட்சியை முன்னெடுத்தான். முகம்மது அடில் ஷா, இப்ராஹிம் ஷா என்போர் அக்பரது ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டனர். பிற மாநிலங்களை ஆட்சி செய்தவர்களும் அக்பருக்கு கட்டுப்படாது செயற்படத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் இடைவிடாத போரினால் நாட்டிலும் பஞ்சம் மலிந்தது. இவை பதின்மூன்று வயது மட்டுமே நிரம்பிய அக்பருக்கு பெரும் சவாலாக காணப்பட்டன. இருப்பினும் பாதுகாவலர் பைராம்கானின் துணையுடன் நாட்டின் ஆட்சியை சிறப்புற நடத்த முயன்றார்.
அக்பரது சிறப்பினை அறிந்து கொள்ள அவரது ஆட்சிமுறை பற்றி நோக்குவது சாலச்சிறந்தது. அவரது ஆட்சி அரேபிய, பாரசீக ஆட்சிமுறைகளைப் பின்பற்றியதாய் அமைந்திருந்தது. துறைகளின் அமைப்பு, மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்களின் அதிகார வரம்புகள் முதலானவை அயல்நாட்டு தொடர்பினால் ஏற்பட்டவையாகும். அரசாங்க அலுவல்கள் பற்றிய முடக்கல் போக்கு வரவுகள் அதிகமிருந்தமையால் இதனை ‘எழுது தாளினாலான ஆட்சி’ என்றும் கூறுகின்றனர்.
அக்பர் நிருவாகத் தலைவராக காணப்பட்டர். சகல துறைகளும் இவருக்குக் கட்டுப்பட்டு செயற்பட்டன. தனக்கு நிருவாக விடையங்களில் உதவிபுரிய அமைச்சரவை ஒன்றினைக் கொண்டிருந்தார். அமைச்சரவையில் முதலமைச்சர், நிதியமைச்சர், இராணுவ அதிகாரி, சமயத்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, முதலானோர் இடம்பெறுவர். அவர்களின் நியமனம், ஊதியம், பதவி உயர்வு, பதவி நீக்கம் தொடர்பான அதிகாரங்கள் யாவும் மன்னரிடமே காணப்பட்டது. அக்பரிற்கு ஆலோசனைகள் கூற மஜ்லிஸ் என்ற சபை காணப்பட்டது. ஆட்சிமுறைச் செய்திகள், இராணுவ அலுவல்கள், பொதுச்செய்திகள் தொடர்பான ஆலோசனைகளையும் முடிவுகளையும் கூற மொத்தம் இருபது உறுப்பினர் கொண்ட மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மஜ்லிஸ் சபை செயற்பட்டது.
மாநில நிருவாக அமைப்பினை நோக்குவோமாயின் அரசானது பதினைந்து மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இவை ‘சுபாக்கள்’ என்று அழைக்கப்பட்டன. சுபாவின் அதிகார் ‘சுபேதார்’ என அழைக்கப்பட்டார். இவரின் கீழ் திவான், சதர், அமில், பிடிக்சி, போஸ்தார் முதலிய அதிகாரிகள் பணியாற்றினர். ஒவ்வொரு மாநிலமும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் பௌஜ்தார், அமால் குஸார், பிடிக்ச்சி, வட்ட அதிகாரிகள் முதலானோர் காணப்பட்டனர். இதை விடுத்து கருவூலக் காப்பாளரும் காணப்பட்டார். இவருக்கு பொருளாளர் என்ற பிறிதொரு பெயரும் உண்டு.
நகராட்சி முறையினை நோக்குமிடத்து அதில் ‘கொத்வால்’ என்ற அதிகாரி முக்கியத்துவப்படுத்தப்படுகிறார். கொத்வால் மத்திய அரசால் நியமிக்கப்படுவார். இவர் சிறு நகராட்சிகளைக் கவனிக்க மாவட்ட வருவாய் அதிகாரிகளை நியமிப்பார். நகரங்கள் ஒவ்வொன்றும் பல வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டமும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக அதிகாரிகளை கொத்வால் நியமிப்பார். நகரினை கண்காணித்தல், விலை நிர்ணயத்தை பேணல், குற்றச் செயல்களைத் தடுத்தல், இறைச்சிக் கடைகளைக் கட்டுப்படுத்தல் என பல கடமைகளில் கொத்வால் கவனம் செலுத்த வேண்டும்.
தன்னாட்சி ஊர் பொதுநல மன்றங்களின் சிறப்பான செயற்பாடானது அக்பரது ஆட்சியிலேயே வெளிப்படுத்தப்பட்டது. ஏனெனில் சுல்தானியராட்சியில் இம்முறை காணப்பட்டிருந்தாலும் இம்மன்றங்களிலிருந்து வருமானம் கிடைக்காமையால் சுல்தானியர்கள் அதனை தனித்தியங்க விட்டனர். ஆனால் அக்பர் ஊர் ஐவராயங்களை சட்டப்படி அனுமதித்தார். அக்பரது தலையீட்டால் ஊராட்சி மன்றங்கள் தகுதி, மதிப்பு பெற்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொது நலமன்றம் ஒன்று காணப்பட்டது. அம்மன்ற நிருவாகக் குழுவில் ஒவ்வொரு வீட்டுத் தலைவரும் காணப்பட்டனர். ஊர் பொது நிருவாகம், பாதுகாப்பு, துப்பரவு, நீதி, நீர்ப்பாசனம், மருத்துவம் என பல தரப்பட்ட பணிகளை இம்மன்றங்கள் புரிந்தன.
அக்பரது படை நிருவாகத்தினை நோக்கின் அயல் நாட்டு வீரர்களை கொண்டே மொகாலயப் படையானது அமைக்கப்பட்டிருந்தது. அக்பர் படைச் சீர்திருத்தத்தினை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பினை வலுப்படுத்தினார். சபாஷ்கானை இராணுவ அமைச்சராக்கி (1571) புதிய இராணுவ முறையைக் கொண்டு வந்தார். இம்முறை படையினரின் பணிக்கேற்ப தரமும், நிலையும் பிரிக்கப்பட்டு திறைமையை வளர்க்கும் விதமாக கொண்டுவரப்பட்டது. அம்முறை ‘மான் சப்தாரி’ படைமுறையாக காணப்பட்டது. பத்து படை வீரர்களுக்கு தலைவன் முதலாய் பத்தாயிரம் பத்தாயிரம் படைவீரர்களுக்கு தலைவன் ஈறாய் பலவிதத் தரங்கள் அக்பரது படையில் காணப்பட்டன. மொகாலயப் பேரரசின் படையினை நான்கு பெரும் கூறுகளாக பிரிக்கலாம். காலாற்படை, பீரங்கிப் படை, குதிரைப்படை, கப்பற்படை என்பன அவையாம். இதனைவிட யானைப்படையினையும் மொகாலயர்கள் கொண்டிருந்தனர். அக்பரது படையில் 3,87,758 குதிரைகளும் 38,77,557 காலாற்படை வீரர்களும் காணப்பட்டனர் என ‘அயினி அக்பரி’ என்ற நூல் கூறுகிறது.
படை நிருவாகத்தில் உயர் பதவிகள் தமது சுற்றத்தாருக்கே மொகாலய மன்னர்கள் வழங்கினர். ஆனால் அக்பரது ஆட்சியில் இச்செயல் தளர்த்தப்பட்டது. மான்சப்தார்கள் இராணுவத்தில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு காணப்படவில்லை. மான்சப்தார்களை விடுத்து அரசாங்கமும் படைகளுக்கு ஆட்சேர்க்கும் முறையும் காணப்பட்டது. அதனை துணைபடை என அழைத்தனர். பேரரசர் சில தரமான, தேர்ச்சிமிக்க ஆடவர்களை தெரிவு செய்து அவர்களை தனது மெய்க்காப்பாளர்களாக நியமிப்பார். அக்குழுவானது அஹாதி எனப்படும். இத்தகு அடிப்படையில் அக்பரது படை நிருவாகம் காணப்பட்டது.
அக்பரது வெளிநாட்டுக் கொள்கையினை நோக்கின் அவர் இந்து மன்னர்களுடன் சமசரம் பேணி சிறப்பான ஆட்சியை ஏற்படுத்த முயன்றார். அதில் சில வெற்றிகளையும் கண்டார். இராச புத்திர அரசருடன் திருமணத்தொடர்பினை ஏற்படுத்தியதன் வாயிலாக இந்து,முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்தினார். இந்துக்களின் எதிர்ப்பினை முறியடிக்கும் விதத்தில் இது போன்ற பல திட்டங்களில் (வரி முறை, சமயப் பொறை) கவனம் செலுத்தியதுடன் பேரரசை விரிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார். இவரது போர் நடவடிக்கைகளே மொகாலய அரசினை பேரரசு நிலைக்கு இட்டுச் சென்றது எனலாம். எனவே இவரது போர் நடவடிக்கைகளின் வாயிலாக பேரரசின் சிறப்பினை அறிந்து கொள்ள முடியும்.
சூனாரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அடில்ஷா என்பானுடன் இரண்டாம் பானிபட் போரில் அக்பர் ஈடுபட நேர்ந்தது. இப்போரில் அக்பர் ஈட்டிய வெற்றியே மொகாலய பேரரசின் உருவாக்கத்திற்கான அடிப்படையினை வழங்கியது எனலாம். இந்த போரின் முடிவில் ஹேமு (அடில்ஷாவின் தளகர்த்தா) கொல்லப்பட்டான். அத்துடன் டெல்லி, ஆக்ரா பகுதிகள் மொகாலயர் வசமாயின. மேலும் லாகூரில் சிக்கந்தர் ஷாவும் 1557 முதல்அக்பரின் மேலாதிக்கத்திற்கு கட்டுப்படலானான். முகம்மது அடில் ஷா என்ற பிறிதொரு சூர் மரபு வீரனும் 1557 ஆம் ஆண்டு மடிந்தான். இப்ராஹிம் ஷா (மூன்றாவது சூர் மரபு வீரன்) 1567 வரை ஒரிஸ்ஸாவில் தஞ்சம் புகுந்திருந்து பின்னர் அவனும் இறந்தான். இத்தகு மூன்று எதிரிகளின் மரணமானது டெல்லி அரசுரிமை பிரச்சனைக்கு முடிவு கட்டியதுடன் அக்பரின் ஆதிக்கம் நிலைபெறவும் வழிவகுத்தது. எனவே இரண்டாம் பானிபட் போரானது மொகாலயரது ஆட்சி வலுப்பெற மிக முக்கிய பங்களிப்பினை நல்கியது என இதன் மூலம் அறியலாம்.
அக்பர் தனக்கு சவாலாய் காணப்பட்ட மாளவ மன்னன் பாஜ்பகதூரினை விரட்டியடித்து ஆட்சியைக் கைப்பற்ற 1560ஆம் ஆண்டு படையெடுத்தார். இருப்பினும் பாஜ்பகதூர் மீண்டும் படையெடுத்து தனது பகுதியை மீட்டுக் கொண்டான். அப்துல்லா கான் என்பான் தலைமையில் படையனுப்பி மாளவத்தை மீண்டும் அக்பர் தன்வசப்படுத்தினார். அடுத்து அக்பரினாதிக்கத்திற்குட்பட்ட ஜான்பூரில் அக்பரின் ஆட்சித்தலைவனாக காணப்பட்ட கான்ஜாமன் என்பான் தனது விருப்பின்படி நடக்கத் தலைப்பட்டான். இதனைத் தடுக்க அக்பர் ஜான்பூர் சென்று கான்ஜாமனை அடக்கினார். அங்கிருந்து வரும் வழியில் காணப்பட்ட சூனாரையும் கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். 1562ஆம் ஆண்டு மார்வார் நாட்டில் காணப்பட்ட மேர்த்தாக் கோட்டையை மேவார் நாட்டு மன்னன் உதயசிங்கிடம் போரிட்டுக் கைப்பற்றிக் கொண்டார்.
கோண்டவனம் என்ற நாடு காரகடங்கா என்ற மரபினரின் ஆட்சியில் மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனை அக்பரது காலத்தில் வீரநாராயணன் என்ற சிறுவன் ஆட்சிசெய்தான். அவனது தாய் துர்க்காதேவி பாதுகாப்பு அரசியாக இருந்து நிருவாக விடயங்களை கவனித்தாள். அப்பகுதி மீது(கோண்டாவனம்) 1564ஆம் ஆண்டு படையெடுத்து அப்பகுதியையும் அக்பர் கைப்பற்றினார். 1567-1568 காலப்பகுதிகளில் சித்தூர் முற்றுகையும் அக்பரால் மேற்கொள்ளப்பட்டது.
இதற்குக் காரணம் ராஜஸ்தானில் காணப்பட்ட பிற நாடுகளைக் காட்டிலும் மீவார் சிறந்து விளங்கியமையும், மீவாரை வென்றால் மற்றைய ராஜபுத்திர நாடுகளை வென்று மொகாலயர் ஆட்சியை வலிமைபடுத்தலாம் என்று அக்பர் திட்டமிட்டார். கடுமையான போரின் முடிவில் (1568) மீவாரின் தலைநகரான சித்தூரைக் கைப்பற்றினார். அடுத்த ஆண்டு (1569) மீவாரின் கீழிருந்த ராந்தாம்பூரை முற்றுகையிட்டு அதில் வெற்றி பெற்றதுடன் அதன் அரசனான சர்ஜன்ராய் என்பானை தனது மேலாணையை ஏற்கச் செய்தார். சித்தூர், ரான்பூர் கோட்டைகளுக்கடுத்து கலிஞ்சார் கோட்டையையும் கைப்பற்ற எத்தணித்த வேளை அதன் அரசன் இராம்சத்து அக்கோட்டையை அக்பரிடம் ஒப்படைத்துவிட்டு அகலாபாத்தினருகில் சில நிலப்பகுதிகளைப் பெற்றுக் கொண்டான்.
ராஜஸ்தான் பெரும்பாலான 1570ஆம் ஆண்டில் அக்பரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேவார் நாட்டு பிரதாப்சிங் மட்டும் அக்பரிற்கு கீழ்படியவில்லை.
இவ்வண்ணம் வடபகுதியில் பல நாடுகளை வெற்றி கொண்டதும் மேற்குப் பகுதியில் குஜராத்தினையும் வெற்றி கொள்ள அக்பர் தலைப்பட்டார். சமகால குஜராத்தின் மன்னனான முஸாபர்கானை மக்கள் வெறுத்தனர். இதனால் உள்ளூர் கலகமும் அங்கு நடந்தேறியது. இவ்வேளை 1572ஆம் ஆண்டு படையெடுத்து அப்பகுதியையும் கைப்பற்றினார். அங்கு கான் ஆஸம் என்பானை குஜராத்தின் ஆளுநராக்கிவிட்டு ஆக்ரா மீண்டபோது குஜராத்தில் கலகம் வெடித்தது. இதனையறிந்த அக்பர் மிகக் குறைந்த நாட்களில் படை கொண்டு சென்று கலகத்தினை அடக்கினார். இச்செயல் அக்பரது விரைவையும் விவேகத்தினையும் எடுத்தியம்புவதாக உள்ளது.
சூர் வம்ச வீழ்ச்சியின் பின்னர் வங்காள, ஒரிசா பகுதிகள் சுலைமான் கர்ராணியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவனது மகன் தாவுத்கான் அரசனானதும் அக்பரது ஆட்சிக்கு இடயூறு விளைவித்தமையால் தாவுத்கானைக் கொன்று வங்காள, ஒரிசா பகுதிகளையும் அக்பர் தனதாக்கினார். 1576 ஆம் ஆண்டு மேவார் நாட்டின் பெரும்பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த அக்பருக்கு கீழ்படியாத பிரதாப் சிங்குடன் அக்பர் பொருதினார். ஹால்டிகட் கணவாயில் பிரதாப் சிங்கினை தோற்கடித்தார்.
தனது உறவினனும் காபுலின் ஆளுநருமான ஹகீம் என்பான் அக்பருக்கெதிராக செயற்பட்டமையால் அவனை அடக்கி 1581 ஆம் ஆண்டு தனது சகோதரி பக்துனிசா பேகத்தினை காபுலின் ஆளுநராக்கினார். காபுலும் அக்பர் வசமாயிற்று. 1579ஆம் ஆண்டு காஷ்மீரின் ஆட்சிப்பீடத்திலேறிய யூசுப் கான் என்பான் அக்பரது மேலாதிக்கத்தினை ஏற்க மறுத்தமையினால் காஷ்மீர் மீதும் படையெடுத்து அதனை 1586ஆம் ஆண்டு அக்பர் கைப்பற்றினார்.
1574ஆம் ஆண்டு சிந்து நாட்டின் பக்கார் என்ற சிறு தீவை அக்பர் கைப்பற்றிக் கொண்டதுடன் 1591ஆம் ஆண்டில் சிந்து நாடு பூராக கைப்பற்றினார். மீர்ஸா ஜானிபெக் என்பானை அதன் ஆளுநராக நியமித்தார். சிந்து நாட்டு வெற்றியானது புகழ்மிக்க தட்டா, செகான் கோட்டைகளையும் அவருக்கு அளித்தது. அக்பருக்கு ஒரிசா ஆட்சியாளர் கீழ்படியாமையால் 1592 ஆம் ஆண்டு ஒரிசாவை அக்பர் கைப்பற்றினார். 1595ஆம் ஆண்டு பலுசிஸ்தானை கைப்பற்றினார். காண்டஹாரை கைப்பற்ற அக்பர் முயன்ற வேளை அதன் ஆட்சியாளர் சரணடைந்தமையால் அப்பகுதியையும் எளிமையாக பெற்றுக் கொண்டார்.
அக்பரது சிறப்பினை அறிவதற்கு அவரது சமயக் கொள்கையை ஆராய்வது அவசியமானதாகு. இவரது சமயக் கொள்கை ஏனைய இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபடுவதனைக் காணலாம். இவரது கொள்கை ஏக கடவுள் கொள்கையாக காணப்பட்டதுடன் இஸ்லாமிய நெறிமுறைகளிலிருந்து சற்று மாறுபட்டும் காணப்பட்டது. அத்துடன் சமயப்பொறையும் இவரால் கடைப்பிடிக்கப்பட்டது. இவர் அறிமுகப்படுத்திய(1582) புதிய சமயமான தீ-இ-இலாகி (தெய்வ நம்பிக்கை) பல சமயக்கருத்துக்களையும் உள்வாங்கிய கொள்கையாக காணப்பட்டது. இவ்வாறு புதுவித மாற்றங்களை ஏற்படுத்தி இந்தியாவில் சிறப்பான ஆட்சியையும் இந்துக்கள், முஸ்லிம்களிடையில் ஒற்றுமையையும் ஏற்படுத்திய பெருமை அக்பரையே சாரும்.
அக்பர் மொகாலய மன்னர்களிலிருந்து வேறுபட்ட வகையில் சமயக் கொள்கையினைக் கடைப்பிடிக்க பல காரணங்கள் கூறப்படுகின்றன. அந்த வகையில் அவரது தாய், தந்தை முறையே சியா, சுன்னி முஸ்லிம்களாக காணப்பட்டமையும். அக்பரது ஆசிரியர்கள் பரந்துபட்ட இயல்பினராக காணப்பட்டமையும், சமகால சூழல் சமய வெறியை அவரிடமிருந்து தளர்த்தியமையும், அக்பரது புத்தாய்வுப் போக்குடனான குணவியல்பும், அக்பது மனைவியரில் சிலர் இந்துக்களாக காணப்பட்டமையும், இஸ்லாமிய சமயத்திலும், சமயத் தலைவர்களிடத்தும் காணப்பட்ட சில குறைபாடுகள் அக்பரிற்கு வெறுப்பை ஏற்படுத்தியமையும் என பல காரணங்கள் கூறப்படுகின்றன.
அக்பர் 1562ஆம் ஆண்டு இராஜா பீர்மால் என்ற இராச புத்திர மன்னனது மகளைத் திருமணம் புரிந்தமையுடன் இந்துக்கள் குறிப்பாக இராசபுத்திரருடன் காணப்பட்ட கசப்புணர்வுகள் நலிவுற்றன எனலாம். 1563ஆம் ஆண்டு இந்துக்கள் புனிதப் பயணங்களை மேற்கொள்கையில் செலுத்தும் பயணவரியானது அக்பரால் நீக்கப்பட்டது. அதேபோல் 1564ஆம் ஆண்டு ஜிசியா என்ற முஸ்லீம்கள் அல்லாதோர் செலுத்திய வரியும் அக்பரால் நீக்கப்பட்டது. இத்தகு செயல்கள் ஒரு புதுவித கலாசார வளர்ச்சிக்கு வழிகாட்டியது.
அக்பர் பிற சமயத்தவர்களின் மனநிலையையும் அறிந்து முஸ்லீம்கள் அல்லதோரும் ஆலயங்கள் அமைத்துக்கொள்ள இசைவளித்தார். அத்துடன் இந்து, இஸ்லாமிய சமயத்தவரிடையிலான பண்பாட்டுத் தடைகளை நீக்கும் வழிவகைகளையும் மேற்கொண்டார். உதாரணமாக மகாபாரதம், அதர்வ வேதம் போன்ற நூல்கள் பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டமையினைக் கூறலாம். மேலும் வற்புறுத்தலின் பெயரிலான சமய மாற்றங்களிற்கும் தடை விதித்தார். அத்துடன் இஸ்லாமிய சமத்தவரல்லாதோருக்கும் ஆட்சியியலில் உயர்பதவிகளை வழங்கினார். உதாரணமாக தோடர்மால் என்பான் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டமை.
அக்பரால் கட்டப்பட்ட இபாதத்கானா(வழிபாட்டு இல்லம்) என்ற மாளிகையில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர், பாரசீகர் என பலரது சமய ஞான, தத்துவ விவதங்களையும் நிகழ்த்தி சமய இணக்கப்பாடுகளையும் எட்டினார். சமணர்களின் செல்வாக்கினால் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் முதலிய கருமங்களை தவிர்த்தார். கூண்டிலடைக்கப்பட்டிருந்த பறவைகளுக்கு சுதந்திரம் அளித்தார். குறித்த சில நாட்களில் விலங்குகள் பலியிடலையும் தடைசெய்தார். இயேசு சபைப் பாதிரிமார்களையும் அழைத்து கிறிஸ்தவ சமயக் கருத்துக்களை அறிந்துகொண்டார். சமகால சீக்கிய குருவான அமர்தாசுவின் வேண்டுகோளிற்கிணங்க பஞ்சாப் உழவர்களிற்கு ஓர் ஆண்டு வரித்தள்ளுபடி அளித்தார்.
பதேபூர் சிக்ரியில் உள்ள ஜாமா மசூதியில் 1579 ஆம் ஆண்டு ஆனி மாதம் குத்பா ஓதியவர்களை நீக்கிவிட்டு பைசி உருவாக்கிக் கொடுத்த உரையினை ஐந்தாம் மாதம் முதல் வெள்ளிக் கிழமை வாசித்தார். அதே ஆண்டு(1579) தவறுபடா ஆணையினை வெளியிட்டார். அதன் அடிப்படையில் இஸ்லாமைப் பற்றி நாட்டில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், சமயப் பிரச்சனைகளாயினும் தீர்ப்பளிக்கும் வரம்பற்ற அதிகாரம் அக்பரிற்கு உரியதாயிற்று.
அக்பர் 1582ஆம் ஆண்டு உருவாக்கிய தீ-இ-இலாகி என்ற புதிய சமய நெறியானது அன்பு, உண்மை, சமய சகிப்புத்தன்மை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவானதாகவும், எல்லாச் சமயங்களின் நல்ல கருத்துக்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதாகவும் அவர் கருதினார். இவரது புதிய சமயநெறிமுறை பற்றி அய்னி அக்பரி என்ற நூல் கூறுகின்றது. இந்த புதிய சமயத்தில் இணைவோர் தமது செல்வம், உயிர், சிறப்பியல்புகள், தமது சமயம் ஆகியவற்றை இழக்கச் சித்தமானவர்களாயிருக்க வேண்டும் எனவும் அவர்களே தீ-இ-இலாகியின் மிகவுயர் பக்தியாளர்கள் என்றும் அக்பர் சுட்டுகிறார்.
தீ-இ-இலாகி சமயத்தில் உயர்குடியினருள் 18 பேர் மட்டுமே உறுப்பினராக இணைந்தனர். அத்துடன் ஆயிரத்திற்கும் குறைந்த சாதாரண மக்களே உறுப்பினர்களாக சேர்ந்தனர். இச்சமய நெறியானது அக்பரின் மறைவுடன் மறைந்துவிட்டது எனலாம். ஆகவே இந்த நெறிமுறையானது தோல்வியடைந்தது என்பதே உண்மை. சுமித் என்ற அறிஞர் ‘அறிவுடைக்கு அல்லாமல் முட்டாள் தனத்துக்கு மிகச் சிறந்த நினைவுச் சின்னமாகும்’ என்கிறார். சேர். வெஸ்லி ஹேக் என்ற அறிஞர் ‘தற்பெருமையை எடுத்துக் காட்டவே இதனை உருவாக்கினார்’ எனக் கூறுகின்றார். ஆனால் அக்பரை குறை கூறுவது பொருத்தமற்றது என்று ஸ்ரீவத்சா கூறுகின்றார். இவற்றிலிருந்து ஆராய்ந்து பார்ப்பின் அவரது சமயப் பொறை முற்போக்குவாத சிந்தனையாகக் காணப்பட்டாலும் அவர் உருவாக்கிய புதிய சமய நெறியானது சமகாலத்திற்கு ஏற்புடையதாக காணப்படவில்லை. இதுவே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
அக்பரது ஆட்சியில் சமூக நிலை பற்றி எடுத்து நோக்கின் சமூகத்தில் இந்து, முஸ்லிம்கள் கலப்புற்றுக் காணப்பட்டனர். இவர்களிடையில் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு அக்பர் பல நடவடிக்கைகளைக் கையாண்டார். உதாரணமாக இந்து முஸ்லிம்களிடையில் கலப்புத் திருமணம் செய்து கொள்ள ஆதரவு அளித்தமையினைக் கூறலாம். மேலும் வரி முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியமையால் சமூக ஒற்றுமை வலுப்பெற்றது.
இந்து சமயத்தில் காணப்பட்ட சதி, உடன்கட்டை ஏறுதல் முதலிய மூடக்கட்டுக்களை ஒழித்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். போர் கைதிகளை அடிமையாக்குவதையும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவதையும் தடைசெய்தார். இஸ்லாமிய சமத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். உதாரணமாக ரம்ஸான் பண்டிகை கொண்டாடுவதை நிறுத்தியமையைக் கூறலாம். இவர் தான் உருவாக்கிய தீன் –இ–இலாகி என்ற புதிய சமயத்தினை மக்களிடத்து பரப்பி சமூக நல்லிணக்கத்தையும், பண்டைய மடமைகளையும் தகர்க்க முயற்சித்தார்.
மொகாலய பேரரசில் ஆடை நெய்தல், பருத்தி பயிரிடுதல் என்பன மிக முக்கிய தொழில்களாக காணப்பட்டன. பட்டு நெசவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. டெக்கா நகரம் மஸ்லின் என்ற உயர்தர துணிகளுக்கு பெயர்பெற்ற இடமாக காணப்பட்டது. அக்பர் பட்டு நெசவுக்கு ஊக்கம் அளித்தார். சால்வை கம்பள நெசவினையும் மக்கள் அறிந்திருந்தனர். சாய்வு மேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருட்கள் போன்ற தொழிற்றிறன் மிக்க வேலைகளையும் மக்கள் செய்தனர். செல்வந்தர்கள் இந்த தொழில்களில் முதலீடுகளைச் செய்தனர். பெரியளவில் உற்பத்திகளைச் செய்கின்ற அரசுப் பணிமனைகளிற்கு அக்பர் உதவிகள் அளித்து ஊக்கப்படுத்தினார். அத்துடன் அரசுப் பணிமனைகளும் இவரது காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. இவை கர்கானாக்கள் என்று அழைக்கப்பட்டன. இவ்வண்ணமாக அக்பரது ஆட்சியில் தொழில்கள் விருத்திபெற்று விளங்கின.
அக்பரது நிலவரித்திட்டமும் சிறப்பித்து பார்க்கப்பட வேண்டிய அம்சமாகும். நிலவரிமுறையினை முதலில் சீர்படுத்திய இஸ்லாமிய மன்னனாக ஷெர்ஷா காணப்படுகிறார். இவரைப் பின்பற்றி அக்பரும் மேலும் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 1575ஆம் ஆண்டு முதல் பேரரசு பூராக மத்திய கருவூல காப்பாளரின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1579-1580 களில் கொண்டுவரப்பட்ட பொருளமைப்பு திட்டப்படி புதிய நிலவரித்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இவரது காலத்தில் நிலப்பரப்பு பூராக அளக்கப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன.
இதனை பைமாஷ்(வரைபடங்கள்) என அழைத்தனர். வரைபட உதவியுடன் நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வரிகள் பெறப்பட்டன. வரி நிர்ணயத்திற்காய் நிலங்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டன. பெலாஜ், பரவுதி, சாச்சார், பாஞ்சார் என்பன அவையாகும். ஸப்தி முறையும் (வரி முறை) இவரது காலத்தில் காணப்பட்டது. அக்பரது தேசிய வருமானத்தில் பெரும்பகுதி வரிவருமானமாக கிடைக்கப்பட்டதே ஆகும். அது அண்ணளவாக இரண்டு கோடி பொற்காசுகள் என கணக்கிடுகின்றனர்.
அக்பர் இலக்கியம் மற்றும் கலை வளர்ச்சிக்கும் பங்களிப்பு நல்கினார். அந்த வகையில் அக்பரது அவையினை அபுல்பாசல், அபுல்பைசி முதலிய பேரறிஞர்களும், தான்சென் என்ற புகழ்பெற்ற இசைக் கலைஞரும் சிறப்பித்தனர். சமகாலத்து வாழ்ந்த துளசிதாசர் என்பார் இராமாயணத்தை ஹிந்தி மொழியில் இயற்றினார்.
அக்பரது கலைத் துறைசார் பங்களிப்பினை நோக்குமிடத்து இந்து மற்றும் முஸ்லிம் கட்டடக் கலைகளின் செல்வாக்கிலமைந்த கட்டடங்கள் சிறப்பித்து கூறப்பட வேண்டியவை. அவ்வண்ணம் அமைக்கப்பட்ட கட்டடங்களிற்கு உதாரணமாக ஆக்ராவில் அமைக்கப்பட்ட ஜஹாங்கீர் மஹால், அகலாபாத்தின் நாற்பது தூண் அரண்மனை, சிக்கந்தராவிலுள்ள அரச சமாதி முதலானவற்றினைக் கூறலாம். இவரது கட்டடக் கலையிலும் சிறப்பான வடிவமைப்பு முறைகள் கையாளப்பட்டுள்ளதுடன் இந்து மற்றும் முஸ்லிம் கலைப்பாணிகள் கலப்புற்றும் காணப்படுகின்றன.
அக்பரது ஆட்சியானது மொகாலயரின் எழுச்சிக்கும், பேரரசின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்தது என்பது வெளிப்படை உண்மை. இருப்பினும் அவரது நிருவாக அமைப்பு, சமயக் கொள்கை முதலானவற்றில் சில குறைபாடுகள் இருப்பதும் விமர்சனத்திற்குரியதாகும். சமயக் கொள்கையானது வெற்றியளிக்கவில்லை. சமயங்கள் யாவும் உருவானதே தவிர உருவாக்கப்பட்டனவன்று என்ற உண்மையினை அக்பர் உணரத் தவறிவிட்டார். நிருவாகத்திலும் பல குறைபாடுகள் காணப்பட்டன. குறிப்பாக கப்பல் படையொன்றினைக் கொண்டிருக்காமை எதிர்காலத்தில் அந்நியராதிக்கம் ஏற்பட்டுக்கொள்ள வழிவகுத்தது.
எது எவ்வாறாயினும் சிறப்பான ஆட்சியினை நல்கியும் மக்களை ஒன்றுபடுத்தியும் இறுக்கமான இஸ்லாம் சமயத்தினைப் பின்பற்றி இந்தியாவில் ஆட்சிசெய்த பிற முஸ்லிம் அரசர்களால் சாதிக்க முடியாத அளவிற்கு சமயப் பொறையுடனான நல்லாட்சியை ஏற்படுத்தியும், முற்பட்ட மொகாலய மன்னர்கள் செய்யத் தவறிய நிருவாக ஒழுங்கீனங்களை சீர்படுத்தியும் ஐம்பது ஆண்டுகள் மொகாலய பேரரசினை ஆட்சிசெய்த பெருமை அக்பரையே சாரும்.
மொகலாய பேரரசர்களில் யாரை பிடிக்கும், யாருடைய ஆட்சி பிடிக்கும் என்று வரலாறு படித்தவர்களை கேட்டோமானால், அவர்கள் பதில் பெரும்பாலும் அக்பர் என்று தான் இருக்கும். இவருடைய இயற் பெயர் ஜலால் உத் தின் முஹமத் அக்பர்.
முக்கிய போர்கள்
1. அக்பர் அரியணை ஏறும்பொழுது, பேரரசு சிறிய பகுதியாக இருந்தது. அதே சமயம், அரியணைக்கும் நிறையப் போட்டிகள் நிழவின, ஆனால் இவற்றை சமாளிக்கும் திறம் கொண்ட அக்பர் இரண்டாம் பானிபட் போரை துவங்கினார்.
2. இரண்டாம் பானிபட் போரை துவங்கும் பொழுது அவருடைய வயது 14, இவருக்கு பாதுகாவலராக இருந்த பைரம்காண் படைக்கு தலைமை தாங்கி போரை நடத்தினார்.
3. போரானது, அப்பொழுது டெல்லியை கைப்பற்றிய முஹமத் அடில் ஷா (ஆக்ராவிலிருந்து பீகார் வரை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்) வின் தளபதியான ஹெமுவை, அக்பருக்கு எதிராக படையை திரட்டிக்கொண்டு சென்று போர் புரிய செய்ய விளைந்ததே இரண்டாம் பானிபட் போர்.
4. ஆக, இருபடைகளும், 1556 இல் பானிபட்டீல் மோதிக்கொள்ள, வெற்றி காற்று துவக்கத்தில் ஹெமு பக்கம் வீசினாலும், ஹெமு கண்ணில் அம்பு பாய்ந்து இறந்ததாக கேள்விப்பட்டு, அவர் படை வீரர்கள் சிதற, துரத்திச் சென்று வென்றார் பைராம் கான்.
5. இரண்டாம் பானிப்பட் போரில் வென்ற அக்பர் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்ற அக்பரிடம் பின் இந்தியாவே வீழ்ந்தது. இப்போரின் முடிவு, ஆப்கானியர்களையும் முடிவிற்கு கொண்டு வந்தது.
6. அக்பாரின் பேரரசை விரிவுபடுத்தும் கோட்பாடு, அவரை இன்னும் நிறைய படையெடுப்புகளுக்கு வழிவகுத்தது, அவை, மாளவத்தை ஆண்ட பாஸ் பகதூர் மீது படையெடுப்பு, கோண்டுவானாவை ஆண்டு வந்த ராணி துர்க்காவதி மீது படையெடுப்பு, ராஜபுத்திரர்கள் ஆண்டுவந்த ராஜபுதனத்தின் மீது படையெடுப்பு, என பல படியெடுப்புகளை எடுத்து, அனைத்திலும் வெற்றிகண்டார்.
6. ஆனால், ராஜபுதனத்தில், அவர் படையெடுப்பால் மட்டும் கைப்பற்ற முடியும் என்று நினைக்காத அக்பர், தான் ராஜபுத்திரக் கொள்கை மூலம் அவர்களுடன் நட்புறவைக் கொண்டு அங்கு ஆதிக்கம் செலுத்த எண்ணினார்.
முக்கிய நிகழ்வுகள்
1. ரால்ப் பிட்ச் (1585) என்ற ஆங்கிலேயர் தான் அக்பரின் அவைக்கு வருகை தந்த முதல் ஆங்கிலேயர் ஆவார்
2. புனிதப் பயணம் செய்ய விதிக்கப்பட்ட வரி, ஜெஸ்சியா வரி போன்றவற்றை 1564 இல் ஒழித்தார். அதேபோல் பசு இறைச்சிக்கும், உடன்கட்டை ஏறுவதையும் தடை செய்தார்.
3. அனைவருக்கும் அமைதியான வாழ்க்கை என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
4. பதேபூர் சிக்ரி (Fatehpur Sikri) இல் இபாடத்கான் (Ibadatkan) என்ற வழிபாட்டு கூடத்தை நிறுவினார். அங்கு தான் அனைத்து சமயம் சார்ந்தவர்களும் ஒன்றாய் அகபருடன் கலந்தாலோசித்தினர்.
5. இவருடைய நில வருவாய் முறையான, ஜப்தி (Zabti System) முறை அல்லது டோடர் மால் பந்தோபஸ்த் (Todar Mal Bandobast System) முறை, மூன்று முக்கிய அம்சங்களை கொண்டது அவை, நில அளவை, நில பாகுபாடு, விலை நிர்ணயம் ஆகும்.
6. உயர்குடிகளையும் ராணுவத்தையும் ஒழுங்கு படுத்த மான்ஸப்தாரி (Mansabdari System) முறையாயி கொண்டுவந்தது.
சமயக் கொள்கை
1. அக்பர், இந்துக்கள் முஸ்லீம்களிடையே ஒற்றுமையை உருவாக்க எண்ணம் கொண்டார், அவருடைய சமயக் கொள்கைகளும் அது சார்ந்தே அமைந்தன.
2. இவரின் இந்த எண்ணத்திற்கு காரணம், இவர் வளர்ந்த சூழ்நிலை, நட்பு வட்டாரம், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் உணர்வு என பலவற்றைக் கூறலாம். மற்றும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவில் ஆட்சி புரிவதில் தான் கொண்ட நாட்டம்.
3. பல சமயத்தவரை அழைத்து, உண்மைத் தத்துவத்தை அறிய முற்பட்டார், ஆனால், எச்சமயமும் அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், தன்னை இஸ்லாம் மாதத்தின் கொள்கைகளுக்கு விளக்கம் கூறும் நீதிபதி என்று கூறிக்கொண்டார், அதுமட்டுமின்றி “தவறுபடா ஆணை” என்ற ஒன்றையும் பிரகடனப் படுத்தினார்.
4. அக்பர் தான் சொந்த சமயத்தை துவக்கியது, அது தீன் இலாஹி (Din – i- ilahi), உலக சகோதரத் துவம் என்ற அடிப்படையில் இச்சமயம் அமைந்திருந்தது.
5. அதாவது, தீன் இலாஹி இல் அனைத்து மாதங்களின், முக்கியமான கோட்பாடுகளும் இடம்பெற்றிருக்கும், ஆனால், இச்ச்மயத்தில், அவருடைய நெருங்கியவர்களை தவிர வேறு யாரும் இணையவில்லை, இதில் இணைந்த ஒரே இந்து பீர்பால் மட்டுமே.
6. இதில் அனைத்து மாதங்களின் கோட்பாடுகளும் இருந்ததால், இந்து கோட்பாடுகள் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் கோட்பாடுகள் இந்துக்களுக்கும் பிடிக்காதால், இச்சமயம், அக்பர் இறப்புடன் இரண்டு போனது.
7. ஆனால, இச்சமயத்தை பின்பற்றி இருந்திருந்தால், மக்களிடையே ஒற்றுமை வலுப்பெற்றிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.