Home » படித்ததில் பிடித்தது » மாயூரம் வேதநாயகம்பிள்ளை!!!
மாயூரம் வேதநாயகம்பிள்ளை!!!

மாயூரம் வேதநாயகம்பிள்ளை!!!

கீர்த்தனைகள், செய்யுள்கள் செய்வதிலும் புகழ்பெற்ற வரான மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நாவலுக்குரிய அடிப்படை இயல்பாகிய உரைநடையைப் பயன்படுத்தி மேற்கத்திய பாணியும் நாட்டுப்புறக் கதை சொல்லல் மரபும் இணைந்த வடிவத்தில் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார்.

நாவல் என்பதற்குச் சில கறாரான வரையறைகளை வைத்திருப்போர் பிரதாப முதலியார் சரித்திரத்தில் நாவலுக்குரிய அம்சங்கள் குறைவு என்று கூறினாலும் இன்றைய வாசகரும் சுவாரஸ்யமாக வாசிக்கக்கூடிய அளவுக்கு வாசிப்புத்தன்மை கொண்டதாகவே அந்நாவல் விளங்குகிறது.

நாவல் வாசிப்போர் சிரிக்கவே கூடாது என்று திட்டமிட்டு எழுதப்படாததாலோ என்னவோ அந்நாவலில் வாய்விட்டுச் சிரிக்கும் வகையில் பல்வேறு சம்பவக் கோவைகள் இயல்பாக அமைந்துள்ளன.

சம்பவங்கள் கொடுக்கும் சுவைக்காகவும் அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்தும் தொழில்முறை நோக்கத்திற்காகவும் அவ்வப்போது நான் இந்நாவலைப் படிப்பதுண்டு. இப்போதும் புத்தகச் சந்தையில் நான்கைந்து பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள இந்நாவலின் அச்சுப்படிகள் கிடைக்கின்றன.

ஆனால் ஓரளவு பதிப்புணர்வும் அழகுணர்ச்சியும் கொண்டவர்கள் இந்த அச்சுப்படிகளை நிராகரிக்கவே செய்வர். இந்நாவலையும் சுகுணசுந்தரியையும் சேர்த்து, ஒருபுறம் தொடங்கினால் பிரதாப முதலியார் சரித்திரம், மறுபுறம் தொடங்கினால் சுகுணசுந்தரி என்னும் முறையில் நூலுக்கான பின்புறமே இல்லாமல் சக்தி காரியாலயம் மலிவு விலையில் வெளியிட்ட பதிப்பு சிதிலமடைந்த நிலையில் என்னிடம் உள்ளது.

எனினும் அதைப் பயன்படுத்தவே என் உள்ளம் விரும்பும். அதையும்கூட முழுமையானதும் சிறந்ததுமான பதிப்பு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இன்றைய வாசகருக்கு அதுகூடக் கிடைப்பதில்லை. அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்த அளவு பதிப்பு நுட்பங்களை வளர்த்தெடுக்காத செம்மொழிக்காரர்கள் நாம்.

பிரதாப முதலியார் சரித்திரம் நாவல்போலவே அதன் பதிப்பு வரலாறும் வெகுவான சுவாரஸ்யம் கொண்டதுதான். அனேகமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட முறை அந்நாவல் அச்சிடப்பட்டிருக்கக்கூடும். 1879இல் முதல் பதிப்பு வெளியாயிற்று. அப்பதிப்பு இப்போது பார்ப்பதற்கு எங்காவது இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் அவருடைய பார்வையிலேயே 1887ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்புப் பிரதி சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளது. ‘The Life and Adventures in Tamil of Pradapa Mudalliar’ என்னும் ஆங்கிலத் தலைப்பை முன்பக்கத்தில் கொண்ட இந்நூலில் ‘முதற்பதிப்பு’ என்று குறிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் முகம்மது ஸமதானி பிரசில் பதிப்பிக்கப்பட்ட இது இரண்டாம் பதிப்பு என்பதுதான் சரியானது.

இந்நாவலுக்குத் தமிழில் இரண்டு தலைப்புகள் வைக்கப்பட்டிருந்ததையும் இப்பதிப்பு மூலமாகவே அறிகிறோம். ‘பிரதாபம் என்னும் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்று தலைப் புள்ளது. ‘காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சுக் கூடத்திற் பதிப்பித்த பிரதிக்கிணங்க’ நகரி சுப்பராயப் பிள்ளை என்பவர் 1907இல் வெளியிட்ட பதிப்பு இந்நாவலின் மூன்றாம் பதிப்பாக இருக்கக்கூடும். இதிலும் ‘பிரதாபம் என்னும் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்றே தலைப்பு காணப்படுகின்றது. ஆனால் ‘பிரதாபம்’ என்னும் பெயரை இப்போது வரும் எந்தப் பதிப்பக வெளியீட்டிலும் காண முடியாது. இதற்குக் காரணம் 1910களில் வேதநாயகப்பிள்ளையின் குடும்பத்தாரால் வெளியிடப்பட்ட பதிப்புகளே ‘பிரதாபம்’ என்பதை உதிர்த்துவிட்டுப் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டன என்பதுதான்.

1910களில் பிரதாப முதலியார் சரித்திரத்திற்குப் பாடத்திட்ட அந்தஸ்து கிடைத்திருக்கிறது. மெட்ரிகுலேசன் தமிழ்ப் பாடநூல்களில் இந்நாவலின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டன. சென்னைப் பல்கலைக்கழக இன்டர் மீடியட் வகுப்புக்குப் பாடநூலாகவும் இந்நாவல் வைக்கப்பட்டிருந்தது. ஆகவே இந்நாவலுக்கு விற்பனை மதிப்பு கூடியது. அவ்வருவாயில் அவர் எழுதிய அனைத்து நூல்களையும் அச்சிட முடியும் என்று கருதியதோடு அவரது பிற நூல்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் முயற்சி நடைபெற்றிருக்கிறது.

வேதநாயகம்பிள்ளையின் மகன் வீ. ஞானப்பிரகாசம்பிள்ளை எழுதியுள்ள முன்னுரை ஒன்றில், ‘எப்போதும் போல் தாலுகா போர்டார்களும் டிஸ்டிரிக்ட் போர்டார்களும் இத்தகைய வசன நூல்களைத் தம் பார்வையிலுள்ள பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகங்களாக ஏற்படுத்தி உதவிபுரிவாரேல், இக்கிரந்தகர்த்தார் உரைநடையிட்ட ‘சுகுணசுந்தரி’ போன்ற நூல்களை வெளிக்கொணரவியலும்’ என்று வேண்டுகோள் விடுக்கின்றார். அதன்பின்னர், வேதநாயகம் பிள்ளையின் பெண்மதி மாலை நூலும் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பாடத்திட்ட நூலானதால் வேதநாயகம்பிள்ளையின் குடும்பத்தினர் இந்நாவலை வெளியிடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டியுள்ளனர். வேதநாயகம்பிள்ளையின் மகன் வீ. ஞானப்பிரகாசம்பிள்ளை, மருமகள் வி.ஜி. ஆச்சியம்மாள், பேரன் வி.ஜி. ஆரோக்கியசாமி ஆகியோர் பெயர்களில் இந்நாவல் பதிப்புகள் தொடர்ந்து வெளியாகி வந்துள்ளன.

நூலின் முன்பக்கத்தில் ‘இந்நூலாசிரியர் மருமகள் வி.ஜி. ஆச்சியம்மாள் அவர்களால் பிரசுரிக்கப்பட்டது’ என்பது போன்ற குறிப்பு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இப்பதிப்புகளின் பின்னிணைப்பில், இந்நாவல் குறித்து இதழ்களில் வெளியான மதிப்புரைப் பகுதிகள், அறிஞர்களின் கருத்துகள் ஆகியன தொகுத்துத் தரப்பட்டிருந்தன. வேதநாயகம்பிள்ளை 1889ஆம் ஆண்டு காலமானபோது பலர் அனுப்பிய இரங்கல் கடித வாசகங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் மிக முக்கியமான ஆவணங்கள்.

பாடநூல் விற்பனை மதிப்பு இந்நாவலுக்கு இருந்தமையால் நாவலை வெளியிடுவதில் போட்டியும் வாரிசுரிமைப் போராட்டங்களும் நடந்துள்ளன. வேதநாயகம் பிள்ளை பற்றி எழுதப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள் எவையும் அவரது குடும்பம் குறித்த விரிவான தகவல்களைத் தரவில்லை. பெரும்பாலானவற்றில் குடும்பம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் வேதநாயகம்பிள்ளை பற்றி அ. பாண்டுரங்கன் எழுதிய நூலில் அவரது குடும்பம் பற்றிச் சிறுபகுதி உள்ளது. அது வருமாறு-

நீதிமன்றப் பணிகளில் வேதநாயகருடைய வாழ்க்கை ஒரு சோதனைக் களமாக இருந்ததுபோல அவருடைய குடும்ப வாழ்க்கையும் சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. இல்லற வாழ்வில் அவர் மணந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்துக் காலமாகிக் கொண்டிருந்ததால் அவர் ஐந்து பெண்களை மணக்க நேரிட்டது. மூன்றாவது மனைவி மாணிக்கத்தம்மாளுக்கு மட்டுமே ஓர் ஆணும் இரண்டு பெண்களும் பிறந்தனர். (ப.26)

இதில் குறிக்கப்படும் ஆண் குழந்தைதான் பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பிற்காலத்தில் முன்னுரை எழுதிப் பதிப்பித்த வீ. ஞானப்பிரகாசம்பிள்ளை ஆவார். ஆனால் 1910களில் வேதநாயகம்பிள்ளையின் மகன் எனக் கூறி வேறொருவர் வெளியிட்ட பதிப்புகளும் விற்பனையில் இருந்துள்ளன. ‘பிரதாபம் என்னும் பிரதாப முதலியார் சரித்திரம், மாயூரம் முன்சீப் ச. வேதநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டு, மேற்படியார் குமாரர் வி. துரைப்பிள்ளையினால் … பதிப்பிக்கப்பெற்றது’ என்னும் குறிப்புடன் வெளியான பதிப்புகளும் இருந்துள்ளன. மேற்படியார் குமாரர் வீ. துரைப்பிள்ளையினால் என்பதும் ஆங்கிலத்தில் ‘Published by the author’s son V. Doraipillai’ என்பதும் முறையாக முத்திரையாக வைக்கப்பட்டுள்ளன. ‘வீ. துரைப்பிள்ளை’ என்பவர் வாரிசுரிமை கொண்டாடியிருக்கிறார் என்பது தெரிகிறது. மற்றபடி வேதநாயகம்பிள்ளைக்கு அவர் எவ்வகையில் மகனாவார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இந்தப் போட்டியின் காரணமாகச் சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து ‘வீ. ஞானப்பிரகாசம் பிள்ளையின் பதிப்பே பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது’ என ஆணை பெற்றுள்ளனர். அத்தோடு ஞானப்பிரகாசம்பிள்ளை பதிப்புப் பற்றி விதந்து எழுதப்பட்ட மதிப்புரைகளும் அப்போது வந்துள்ளன. ஒரு மதிப்புரை, ‘பழம் பிரதிகள் போலும், புஸ்தகச் சொந்தக்காரர் அல்லாத மற்றவர் பதிப்புகள் போலுமல்லாது, பிழைகள் களையப்பட்டு, கிளேஸ் கடிதத்தில் சுத்தமாய் அச்சியன்ற இப்புத்தகத்தின் விலை அணா 10. வேண்டியவர்கள் மாயூரம் ஞானப்பிரகாசம்பிள்ளையவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்’ எனக் குறிப்பிடுகின்றது.

ஒப்பீட்டளவில் பார்த்தால், வீ. ஞானப்பிரகாசம் பிள்ளையும் அவரது வகையறாக்களும் வெளியிட்ட பதிப்புகளைவிட, வீ. துரைப்பிள்ளையின் பதிப்பு சிறப்புடையதாகத் தோன்றுகின்றது. 1887, 1907 ஆகிய ஆண்டுகளில் வெளியான முந்தைய பதிப்புகளை வீ. துரைப்பிள்ளையின் பதிப்பு பின்பற்றியுள்ளது. ‘பிரதாபம்’ என்னும் பெயரும் தலைப்பில் இருப்பதோடு அதிகார அட்டவணையும் இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது. பாடத்திட்ட நோக்கிலான இத்தகைய பதிப்புகளே 1950கள் வரை விற்பனையில் இருந்துள்ளன.

1950களுக்குப் பின் வெளியான பதிப்புகள் இந்நாவலிலும் நாவல் பற்றிய செய்திகளிலும் பல்வேறு சிதைவுகளை உண்டாக்கின என்று சொல்லலாம். சுருக்கப் பதிப்பு, மலிவு விலைப் பதிப்பு, திருத்தப் பதிப்பு எனப் பெயரிட்டுப் பலவகைப் பதிப்புகள் வெளியாகின. தென் மொழிகள் புத்தக டிரஸ்ட்டின் ஆதரவில் பதிப்பிக்கப்பட்ட சுருக்கப் பதிப்பை இ.மு. சுப்பிரமணிய பிள்ளை செய்தார். மலிவு விலைப் பதிப்பைச் சக்தி காரியாலயம் வெளியிட்டது. பல்வேறு சொற்களைத் திருத்தம் செய்து சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. முதல் நாவல் என்னும் பெருமையுடைய நூலுக்கு இவ்வாறு பல்வேறு பதிப்புகள் வெளியாவது இயல்புதான்; தேவையும்கூட. ஆனால் மூலப்பிரதிக்குச் சிதைவு நேராமல் இருப்பது முக்கியம்.

சக்தி காரியாலயம் மலிவுப் பதிப்பாகப் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி ஆகிய இரண்டு நூல்களையும் இணைத்து ரூ. 1.25 விலையில் 1957இல் வெளியிட்டது. இதன் முன்னுரையில், ‘… இந்தப் புத்தகத்தை வெளியிடும்போது ஆசிரியர் எழுதியபடியே கூடுதல் குறைச்சல் இல்லாமல் அப்படியே வெளியிடத் துணிந்தோம். அவர்கள் எழுதிய சொற்களை மாற்றியோ கூட்டியோ குறைத்தோ வெளியிடுவது ஆசிரியரை அவமதிப்பதாகும் என்றுகூட எண்ணுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மிகச் சரியான முடிவுதான். இப் பதிப்பு வேதநாயகம்பிள்ளையின் பேரர் ஆரோக்கியசாமியின் ஒப்புதலோடும் உதவியோடும் வந்தது. இப்பதிப்பில் நேர்ந்த மிக முக்கியமான குறைபாடு ‘தமிழ்மொழியிலே முதன் முதலாக 1876 வருடத்தில் தோன்றிய நாவல்’ என்னும் குறிப்பு முதல் பக்கத்தில் இருப்பதுதான். இப்பதிப்பில் உள்ள வேதநாயகம் பிள்ளையின் முன்னுரையிலேயே 1879 என ஆண்டு இருக்க, ‘1876ஆம் ஆண்டு தோன்றிய நாவல்’ என்று பிழையாகக் குறிப்பிட்டது இப்பதிப்பின் சிறப்பையே குறைத்துவிட்டது.

இந்தக் குறிப்பைக் கொண்டே சாகித்ய அகாதமி வெளியிட்ட மு. வரதராசனின் தமிழ் இலக்கிய வரலாறு உள்ளிட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் பலவற்றிலும் 1876 எனத் தொடர்ந்து பிழையாகவே எழுதப்பட்டுள்ளன. சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோர் எழுதிய தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்னும் நூலில் அவர்கள் 1879 என்பதை நிரூபித்து எழுதிய பின்னும் பல இலக்கிய வரலாறுகளில் ஆண்டு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மு. வரதராசனின் இலக்கிய வரலாற்று மறு பதிப்புகளிலும் இன்றுவரை 1876 என்றே உள்ளது.

வேதநாயகம்பிள்ளை முதல் பதிப்புக்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரை முதன் முதலாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதும் சக்தி காரியாலயம் பதிப்பில்தான். ஆங்கில முன்னுரை கொடுக்கப்படவில்லை. ‘இம்முன்னுரை ஆங்கிலத்தில் எழுதப்பட்டது’ என்னும் குறிப்பு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்பது தெரியவில்லை. ஆங்கில முன்னுரையையும் தமிழ் மொழி பெயர்ப்பையும் ஒப்பிட்டு யாரும் பார்த்ததாகவும் தெரியவில்லை. Fiction, novel ஆகிய இரண்டு சொற்களையும் வேதநாயகம்பிள்ளை தம் முன்னுரையில் கையாள்கிறார். மொழிபெயர்ப்பில் இரண்டு சொற்களுமே ‘நவீனம்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வேதநாயகம்பிள்ளையின் அம்முன்னுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அவர் கையாண்டுள்ள சொற்கள் தமிழ் நாவல் தோற்றம் பற்றிய ஆய்வுக்குப் பெரிதும் பயன்படுபவை. இன்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடுவரை சக்தி காரியாலயப் பதிப்பின் மொழிபெயர்ப்பு முன்னுரைதான் அப்படியே தொடர்கிறது. ஆகவே இம்மொழிபெயர்ப்பைப் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

பிரதாப முதலியார் சரித்திரத்தில் வேதநாயகம் பிள்ளை பயன்படுத்தியுள்ள பிறமொழிச் சொற்களை எல்லாம் தனித்தமிழ்படுத்திச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்ட பதிப்பு (இதன் ஆண்டு என்னிடம் உள்ள பிரதியில் சிதைந்துள்ளது). ஒரு மூலநூலைப் பிற்காலத்தார் எப்படியெல்லாம் சிதைக்க முடியும் என்பதற்கு இந்நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ‘காலவியல்பால் ஆசிரியர்கள் ஆங்காங்குச் சேர்த்துள்ள பிறமொழிச் சொற்களைக் களைந்து தூய தனித் தமிழ்ச்சொற்களைக் கருத்தும் பொருளும் இனிமையும் எளிமையும் மாறுபடாமல் பெய்துள்ளோம்’ என்று பதிப்புரை கூறுகிறது.

வைது, ஒறுத்தல், பூம் பொழில், இன்னாமொழி போன்ற இன்று புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ்ச் சொற்களைப் போட்டும் அத்தியாயத் தலைப்புகளை எல்லாம் இஷ்டப்படி மாற்றியும் பத்திப் பிரிப்பு, உட்தலைப்புக் கொடுத்தல் ஆகியவற்றால் நாவலைக் கட்டுரைபோல் ஆக்கியும் உருவாக்கப்பட்டது இப்பதிப்பு. சரியாகப் பொருள் புரிந்துகொள்வதற்குக்கூட இயலாத யாரோ ஒருவர் கண்டபடி திருத்தம் செய்த இப்பதிப்பு நவீன இலக்கியப் பதிப்பு பற்றிய கண்ணோட்டத்திற்கு மிக மோசமான வழிகாட்டியாக விளங்குகிறது. ‘அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம் வரும்படியாக, அவனுக்கு அடிவாங்கிக் கொடுக்க அட்சரங்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?’ என்று வேதநாயகம் பிள்ளை எழுதியுள்ளார்.

‘அவன் உயிருக்கும் உடலுக்கும் ஊறு வரும்படியாக, அவனுக்கு அடிவாங்கிக் கொடுத்த எழுத்துக்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து என்று பெயர் வந்தது முறையாகுமா?’ என்று கழகப் பதிப்பு தனித்தமிழ்படுத்தியிருக்கிறது. ‘கிரமமல்லவா’ என்பதை முறையல்லவா, முறைதானே என உடன்பாடான பொருளில் வேதநாயகம்பிள்ளை எழுதியுள்ளார். ‘முறையாகுமா?’ என எதிர்மறைப் பொருளில் கழகப் பதிப்புக் கூறுகிறது. இப்படி அனர்த்தங்கள் நிறைந்தது இப்பதிப்பு.

இன்று புத்தகச் சந்தையில் கிடைக்கும் பதிப்புகள் பலவும் அச்சுப் பிரதிகள் என்று சொல்லத்தக்கவையே. அத்தியாயத் தலைப்புகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டன. ‘பிரதாபம்’ என்னும் பெயரும் போய்விட்டது. நூலுக்குள்ளே எத்தகைய குளறுபடிகள் நேர்ந்திருக்கின்றன என்பதைப் பொறுமையாக ஒப்பிட்டுப் பார்த்தால் அறியலாம். தமிழின் முதல் நாவல் எழுதப்பட்டு 127 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அந்நாவலுக்கான செம்பதிப்பு ஒன்றை இதுவரை கொண்டுவர இயலவில்லை.

நாவலில் பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு உள்ள முக்கியத்துவம் போலச் சிறுகதையில் வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் தொகுப்பு நூலுக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ்ச் சிறுகதை எப்போது தோன்றியது என்னும் வினாவுக்குத் ‘தமிழில் எல்லாம் உள்ளது’ என்று மனநிறைவு பெற்றுச் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனநிலையில் வாழ்வோர், ‘சங்க இலக்கியப் பாடல் ஒவ்வொன்றும் சிறுகதைதான்’ என்று சொல்வர்.

சிறுகதை வரலாற்று ஆசிரியர்கள் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதையில் தொடங்கி அ. மாதவையாவின் குசிகர் குட்டிக் கதைகள், பாரதியார் கதைகள் எனக் கடந்து வ.வே.சு. ஐயரில் வந்து நிற்பதும் அவரது தொகுப்பையே முதல் சிறுகதைத் தொகுப்பு என அங்கீகரிப்பதும் இயல்பாக உள்ளது. சிறுகதை பற்றிய உருவ உணர்வு வ.வே.சு. ஐயருக்கு இருந்துள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் வரலாற்றுச் சிறப்புடையதாகவும் சிறுகதை ஆய்வுக்கு முதன்மை ஆதாரமாகவும் விளங்கத்தக்கது. இதன் முதல் பதிப்பு 1927இல் வெளியாகியுள்ளது. நூல் தொகுப்பு வேலை முடிந்து, வ.வே.சு. ஐயர் முன்னுரையும் எழுதிவிட்டார். ஆனால், நூல் வெளியாகும் முன்னர் 1925இல் அவர் இறந்தார். அவர் மனைவி ஸ்ரீமதி பாக்கியலக்ஷ்மி அம்மாள் முயற்சியால் நூல் வெளியாகியுள்ளது. இத்தகவல் அந்நூலுக்கு இராஜாஜி எழுதியுள்ள முகவுரை மூலமாகத் தெரிகிறது.

மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பை இரண்டாம் பதிப்பாக 1939இல் அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டுள்ளது. 1942, 1987, 2002 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்புகள் வந்துள்ளன. 2002இல் வந்துள்ள ஐந்தாம் பதிப்பு, ‘ஜெனரல் பப்ளிஷர்ஸ்’ என்னும் பதிப்பகம் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. 1953இல் அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடாக இந்நூல் வந்திருப்பதாக ஒரு தகவலை கா. சிவத்தம்பி, தம் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் குறிப்பிடுகிறார். 1953 வெளியீடு பற்றி இப்போதைய ‘ஜெனரல் பப்ளிஷர்ஸ்’ நூலில் குறிப்பு எதுவுமில்லை. 1942க்குப் பின் 1987இல்தான் அடுத்த பதிப்பு வந்ததாக உள்ளது. எது சரியான தகவல் எனத் தெரியவில்லை.

ஜெனரல் பப்ளிஷர்ஸ் பதிப்பை மேலோட்டமாகக் கவனித்தாலே பல குறைகள் தென்படுகின்றன. அட்டையில் தலைப்பு மங்கையர்க்கரசியின் காதல் எனவும் முகப்புப் பக்கத்தில் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் எனவும் உள்ளது. ‘மஹரிஷி’ வ.வே.சு. ஐயர் எழுதியது’ என அவருக்கு ‘மஹரிஷி’ பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய முகவுரையின் இறுதியில் ‘வ.வே. ஸுப்ரமண்ய ஐயர்’ எனப் பெயர் காணப்படுகின்றது.

வ.வே.சு. ஐயர் 1925இல் இறந்தார். இத்தொகுப்பு 1927இல் முதலில் வெளியானது. எப்போது அவர் முன்னுரை எழுதினார் என்பது தெரியவில்லை. நூலின் முக்கியத்துவம் பற்றிய பதிப்புரை எதுவும் இல்லை. தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இந்நூலுக்குரிய இடம் குறித்து வாசகருக்கு விளக்கும் முன்னுரையும் கிடையாது. ஏதோ ஒரு வகையில் வாசகருக்கு இந்நூல் கிடைக்கச் செய்துவந்தமைக்காக அல்லயன்ஸ் கம்பெனியைப் பாராட்டலாம்.

இதுவன்றி 1997இல் திருச்சி, இந்திரா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலின் பதிப்புரை, ‘இந்த நூலை நவம்பர் 2 ஆம் தேதி 1927இல் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி முகவுரையுடன் சென்னை திருவல்லிக்கேணி எஸ். கணேசன் வெளியிட்டுள்ளார். அதை அப்படியே மறுபதிப்பு செய்துள்ளேன்’ என்று குறிப்பிடுகிறது. ‘அதை அப்படியே மறுபதிப்பு’ செய்துள்ளாரா என்பதைப் பழைய பதிப்பைக் கண்டடைந்து ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அறிய முடியும்.

இந்திரா பதிப்பக வெளியீட்டைக் கொண்டே இது சிறந்த பதிப்பில்லை என்று சொல்லிவிடலாம். வ.வே.சு. ஐயரின் பெயரிலேயே குழப்பம் வந்துவிடுகிறது. ‘வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்’ என்பது அவர் பெயருக்கான விளக்கம் எனப் படித்திருக்கிறேன். நூல் முன்னட்டையில் ‘வ.வெ.சு. ஐயர்’ என்றுள்ளது. முதல் பக்கத்தில் ‘வ.வெ. சுப்பிரமணிய ஐயர்’ எனவும் அவரே எழுதிய முன்னுரை முடிவில் ‘வ.வெ. ஸுப்ரஹ்மண்ய ஐயர்’ எனவும் இராஜாஜியின் முகவுரைக்குள் ‘வ.வெ.சு. ஐயர்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

அவரது பெயர் மட்டும் நான்கு விதமாகக் காணப்படுகின்றது. நூலின் முதல் பதிப்பிலும் இப்படிப்பட்ட குழப்பம் இருந்துள்ளதா, இந்திரா பதிப்பகம் செய்துள்ள குளறுபடி இதுவா என்பது தெரியவில்லை. இந்நூலுக்கு வ.வே.சு. ஐயர் எழுதியுள்ள முன்னுரை ‘முடிவுரை’ என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இது அச்சுப்பிழையா, முதல் பதிப்பின் முடிவில் ‘முடிவுரை’ என இருந்து அதை இந்திரா பதிப்பகம் இப்போது நூலின் முன்பகுதிக்குக் கொண்டு வந்துள்ளதா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள எந்தக் குறிப்பும் இல்லை.

இந்நூலுக்கு இராஜாஜி எழுதியுள்ள முகவுரை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழி வடிவங்களிலும் உள்ளது. தமிழ் வடிவமும் அவருடையதேவா மொழிபெயர்க்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆங்கில முகவுரையில் வ.வே.சு. ஐயரின் மனைவி பெயர் இல்லை. ‘Widow’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் முகவுரையில்தான் ‘ஸ்ரீமதி. பாக்கியலட்சுமி அம்மாள்’ எனப் பெயர் இடம்பெற்றுள்ளது.

இராஜாஜியின் முகவுரையில்தான் வ.வே.சு. ஐயரின் இறப்புச் செய்தி வருகிறது. ஆனால் நூலில் அவரது வாழ்க்கைக் குறிப்பு எதுவும் இல்லை. சாவர்க்கர், பரலி சு. நெல்லையப்பர் ஆகியோர் எழுதிய மதிப்புரைகளும் நூலில் உள்ளன. இவையும் முதற்பதிப்பில் உள்ளனவாக இருக்கலாம். அவற்றில் உள்ள ஆண்டுக் குறிப்புகள் மூலமே இதனை உறுதிப்படுத்த முடிகிறது.

வ.வே.சு. ஐயர் தம் சிறுகதைகள் சிலவற்றுக்குச் ‘சூசிகை’ எழுதுவார். ‘இவைகளின் தலைப்பில் எழுதியிருக்கும் சூசிகைகளைப் படிக்காமல் கதைகளையே துவக்கிப் படித்தால் சுவை அதிகமாகத் தெரியும். ஆனால் ரீதி புதிதாகையால் சிலருக்கு விளங்காமற் போனாலும் போகலாம் என்று சூசிகையைச் சேர்த்திருக்கிறேன்’ எனத் தம் உரையில் எழுதியுள்ளார். சூசிகை முடியும் இடத்திற்கும் கதை தொடங்கும் இடத்திற்குமான பிரிப்பு இப்பதிப்பில் தெளிவாக இல்லை.

சிறுகதையின் தொடக்கநிலையிலேயே தமிழ்ப் பேச்சு வழக்கை எழுத்தில் கொண்டு வருவது குறித்த சிக்கல் உருவாகியுள்ளதையும் வ.வே.சு. ஐயரின் முன்னுரை காட்டுகிறது. குளத்தங்கரை அரச மரம் கதையைப் பற்றி எழுதும் போது, ‘… முற்றிலும் அது பேசியபடியே எழுதினால் இன்று, போதும் என்பன போன்ற வார்த்தைகளை இன்னு, போறும் என்று எழுத வேண்டி வரும். படிப்போர் பொருள் கண்டுபிடிப்பது கஷ்டமாய்ப் போய்விடும் என நினைத்து அவை போன்ற மொழிகளை இலக்கணப்படுத்தியே எழுதியிருக்கிறேன்’ என்கிறார். பேச்சு வழக்கு, வட்டார வழக்கு ஆகியவற்றைக் கதைகளில் பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள் இன்றும் தீர்ந்தபாடில்லை.

இது சிறுகதை இலக்கியம் தொடங்கியபோதே தொடங்கிய சிக்கலாகையால் மொழி பற்றிய இத்தகைய ஆய்வுக்கும் இத்தொகுப்பு பயன்படும். சில புதிய சொற்களையும் இத்தொகுப்புக் கதைகளில் காணலாம். பதிவுக்காரர், கண்காட்சிச் சாலை போன்றவை வ.வே.சு. ஐயரின் சொல்லாக்க முயற்சிகளுக்குச் சான்று. இவ்வாறு பல வகைகளில் முக்கியத்துவம் கொண்ட இத்தொகுப்பின் தலைப்பிலும் கூடத் தெளிவில்லை. முன்னட்டையில் மங்கையர்க்கரசியின் காதல் எனவும் முதல் பக்கத்தில் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் எனவும் உள்ளன.

இந்திரா பதிப்பகம் வெளியீடு, ஜெனரல் பப்ளிஷர்ஸ் வெளியீடு ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பல பாட வேறுபாடுகள் தெரியவருகின்றன. சொல் மாற்றம், புணர்ச்சிப் பிரிப்பு, தொடர் அமைப்பு மாற்றம் ஆகியவை ஜெனரல் பப்ளிஷர்ஸ் வெளியீட்டில் உள்ளன. இந்திரா பதிப்பக நூலில், உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ‘ஒரு’ பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜெனரல் பப்ளிஷர்ஸ் நூலில் அவ்விடங்களில் எல்லாம் ‘ஓர்’ என உள்ளது. மனதை – மனத்தை, திரிச்சி – திருச்சி, முற்றிலும் – முற்றும், அழியாத புகழ் – அழியாப் புகழ் எனப் பல சொற்கள் வேறுபடுகின்றன. ‘சிற்றப்பன் மார்த்தாண்டனை மணக்கும்படி வற்புறுத்துகிறான்’ என இந்திரா பதிப்பக வெளியீட்டில் உள்ள தொடர்பு அமைப்பு, ‘மார்த்தாண்டனை மணக்கும்படி சிற்றப்பன் வற்புறுத்துகிறான்’ என உள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு மாற்றங்களில் வ.வே.சு. ஐயரின் மூலபாடம் எதுவெனத் தீர்மானிக்க முடியவில்லை. எந்தப் பதிப்பக வெளியீட்டில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாகவில்லை.

இவை சிறுசிறு மாற்றங்கள்போலத் தோன்றினாலும் வ.வே.சு. ஐயரின் மொழிநடையை அறியவும் ஆராயவும் பெரும் இடையூறு தருவன. 1927இல் வந்த முதல் பதிப்பை அப்படியே மறுபதிப்பு செய்திருப்பதாகக் கூறினாலும் ஆசிரியர் பெயரையே தவறாகவும் பலவிதமாகவும் அச்சிட்டுள்ள இந்திரா பதிப்பக நூலையும் நம்ப முடியவில்லை. மெய்ப்புத் திருத்தம் செய்தவர் தமிழ் இலக்கண விதிகளுக்கேற்ப மொழிநடையில் மாற்றம் செய்திருப்பாரோ என்னும் சந்தேகத்தை ஜெனரல் பப்ளிஷர்ஸ் நூல் தோற்றுவிக்கிறது. ஆகவே முதற்பதிப்பைக் கண்டறிந்து மூல பாடத்தைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. ஐயரின் சிறுகதைகள் வெளியான இதழ்களைக் காணமுடிந்தால் இன்னும் சிறப்பான பதிப்பைக் கொண்டுவர முடியும்.

தமிழில் இலக்கிய வடிவம் ஒன்றின் தோற்றத்திற்குக் காரணமானதும் வரலாற்றுச் சிறப்புடையதுமான இத்தொகுப்புக்கும் நம்பகமான, சிறந்த பதிப்பு இல்லை. தமிழ்ச் சிறுகதை முன்னோடி வ.வே.சு. ஐயர் என்று பலவிடங்களில் சொல்லப்படுகின்றது. ஆனால் அவர் கதைகளை வாசிக்க விரும்புவோருக்கு உவப்புடன் வாசிக்கும் அனுபவத்தை வழங்கும் பதிப்பு எதுவுமில்லை.

நாவல், சிறுகதையைப் போலப் புதுக்கவிதை வரலாற்றில் முதல் தொகுப்பு நூல் என்னும் பெருமை உடையது, சி.சு. செல்லப்பாவால் தொகுக்கப்பட்டு 1962 அக்டோ பரில் வெளியிடப்பட்ட புதுக்குரல்கள் என்னும் தொகுப்பாகும். ந. பிச்சமூர்த்தியின் காட்டு வாத்துதான் முதலில் வந்த புதுக்கவிதை நூல் (1962). இதை எழுத்து பிரசுரத்தில் சி.சு. செல்லப்பா வெளியிட்டார். அதையடுத்துப் புதுக்குரல்கள் தொகுப்பை அவரே வெளியிட்டார். ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. ஆகியோரின் சில கவிதைகளும் எழுத்து இதழில் வெளியான கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவையும் சேர்ந்த தொகுப்பு இது. அந்நூலின் முன்னுரையில் ‘சுமார் 200 கவிதைகளிலிருந்து 63 கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருப்பதாக’ சி.சு. செல்லப்பா தெரிவித்துள்ளார்.

இவற்றை எழுதிய கவிஞர்களின் எண்ணிக்கை 24. இத்தொகுப்பின் இரண்டாம் பதிப்பை 1973 ஜூலையில் சி.சு. செல்லப்பாவே வெளியிட்டார். இது ‘திருந்திய பதிப்பு’. முதல் பதிப்பில் சேர்க்கப்பட்டிருந்த சில கவிஞர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டனர். சிலரது கவிதைகளில் ஒருசில நீக்கப்பட்டன. புதிதாகச் சிலர் சேர்க்கப்பட்டனர். எக்காரணத்தால் இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரியவில்லை.

1962க்குப் பின் எழுத்துவில் எழுதிய கவிஞர்களுக்கும் இத்தொகுப்பில் பிரதி நிதித்துவம் தர வேண்டும் என்பதாலா? கவிதைகளின் தரம் பற்றிய மதிப்பீடு மாறியதாலா? 1973இல் மதுரைப் பல்கலைக் கழக எம்.ஏ. மாணவர்களுக்குப் பாடத் திட்டத்தில் இத்தொகுப்பு வைக்கப்பட்டது. ஆகவே பாடத்திட்டத்திற்கு ஒத்துவராது என்பதால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? இந்த இரண்டாம் பதிப்புக்குப் பேராசிரியர் சி. கனகசபாபதியின் ஆலோசனையும் உதவியும் பெறப்பட்டதாக வல்லிக்கண்ணன் தெரிவிக்கிறார். எனவே பாடத்திட்டத்திற்கு ஏற்ற பதிப்பை உருவாக்கும் நோக்கத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கலாம்.

புதுக்குரல்களின் மூன்றாம் பதிப்பு 1994 நவம்பரில் பீகாக் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சி.சு. செல்லப்பாவின் படைப்புகளை வெளியிடுவதற்கெனவே இப்பதிப்பகம் தொடங்கப்பட்டதாகப் பதிப்புரை கூறுகிறது. புதுக்குரல்களின் மூன்றாம் பதிப்பு என்னும் விவரம் நூலில் இல்லை. நூலின் முதல் பதிப்புக்கு 1962இல் சி.சு. செல்லப்பா எழுதிய முன்னுரை அப்படியே இப்பதிப்பிலும் உள்ளது. அதில் ‘சுமார் 200 கவிதைகளிலிருந்து 63 கவிதைகளைத் தேர்ந்தெடுத்த’தாக செல்லப்பா கூறியுள்ளார். நூலின் பதிப்புரை, ‘எழுத்துவில் நாற்பது கவிஞர்கள், ஐநூறு புதுக்கவிதைகள் எழுதியுள்ளனர்.

அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து ‘புதுக்குரல்கள்’ எனத் தொகுத்து வெளியிட்டார்’ எனக் கூறுகிறது. இந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது? நூலின் உள்ளடக்கத்தைப் பார்த்தால் 1973இல் வந்த இரண்டாம் பதிப்பை மூலமாகக்கொண்டு இப்பதிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் பதிப்புரையில் ‘அதையேதான் முப்பதாண்டுகள் கழித்து மீண்டும் வெளியிடுகிறோம்’ என்றுள்ளது. அப்படியானால் முதல் பதிப்பை மூலமாக எடுத்துக்கொண்டதாகிறது.

நூலைப் பற்றிய தகவல்களிலேயே இத்தகைய குளறுபடிகள். இரண்டாம் பதிப்புக்கு சி.சு. செல்லப்பா முன்னுரை எதுவும் எழுதினாரா என்பது தெரியவில்லை. இருந்தால், அதில் திருத்தம் தொடர்பாக அவர் எழுதியிருக்கக்கூடும். பீகாக் பதிப்பக மூன்றாம் பதிப்பு சி.சு. செல்லப்பா இருந்தபோதே வெளியாகியுள்ளது. அவருக்கு அப்போது வயது எண்பதுக்குமேல் ஆகிவிட்டமையால் இப்பதிப்பு தொடர்பாக அவர் எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பது தெரிகிறது. எழுத்து பிரசுர வெளியீடுகளின் அழகும் நேர்த்தியும் சிறிதும் இல்லாத இந்த மூன்றாம் பதிப்புத்தான் இப்போதைய வாசகருக்குக் கிடைக்கிறது.

வெளிவந்து ஐம்பது ஆண்டுகள்கூட முடிவடையாத, புதுக்கவிதையின் முதல் தொகுப்பு நூலுக்குச் சரியான தகவல்களுடன்கூட ஒரு பதிப்பு இல்லை. இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் தனித்தொகுப்புகள் பின்னர் வெளிவந்துள்ளன. எழுத்துவில் வந்த கவிதையின் பாடமும் தனித் தொகுப்பில் வந்த பாடமும் ஒன்றா என்று பார்ப்பதற்கும் புதுக்குரல்கள் பயன்படும்.

சுந்தர ராமசாமியின் கவிதைகள் பத்து இத்தொகுப்பில் உள்ளன. இவற்றில் சில திருத்தங்களைச் சுந்தர ராமசாமி மேற்கொண்டுள்ளார் என்பது அவர் கவிதைத் தொகுப்பைப் பார்த்தால் தெரிகிறது. ‘துடை’ என்று பயன்படுத்திய சொல்லைத் ‘தொடை’ என்று மாற்றியுள்ளார். ‘அக்கினி தேடியலைந்த என் மனசு’ என்பதை ‘அக்கினியைத் தேடியலைந்த என் மனசு’ என்றாக்கியுள்ளார்.

‘காலாவதி’ என்றிருந்ததைக் ‘கால அவதி’ எனப் பிரித்துள்ளார். கவிதையில் தெளிவுக்காக இத்தகைய திருத்தங்களை சுந்தர ராமசாமி செய்துள்ளார். புதுக்குரல்களில் ‘கடலில் ஒரு கவிஞன்’ என்றுள்ள கவிதைத் தலைப்பு சுந்தர ராமசாமி கவிதைகளில் ‘கடலில் ஒரு கலைஞன்’ என்றிருக்கிறது. சுந்தர ராமசாமியின் மொழிநடை பற்றிய ஆய்வுக்கு இவையெல்லாம் பயன்படக்கூடிய தரவுகள். பிற கவிஞர்களின் கவிதைகளையும் புதுக்குரல்கள் தொகுப்போடு இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கவிஞர்களின் புனைபெயர் ஆராய்ச்சிக்கும் இத்தொகுப்பு பயன்படுகின்றது. சுந்தர ராமசாமி எழுத்து இதழில் ‘பசுவய்யா’ என்னும் புனைபெயரில்தான் கவிதைகள் எழுதியுள்ளார். அவரது கவிதைத் தொகுப்புகள் அனைத்தும் ‘பசுவய்யா’வின் பெயரிலேயே வந்திருக்கின்றன. சமீபத்தில் (2005) வந்த ஒட்டுமொத்தக் கவிதைத் தொகுப்புதான் ‘சுந்தர ராமசாமி’யின் பெயரில் உள்ளது.

ஆனால் புதுக்குரல்கள் தொகுப்பில் அவரது கவிதைகள் ‘சுந்தர ராமசாமி’ என்னும் பெயரிலேயே இடம்பெற்றிருக்கின்றன. சி.சு. செல்லப்பாவின் முன்னுரையில் சுந்தர ராமசாமி பெயரைக் குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் ‘பசுவய்யா என்ற புனைபெயரில்’ என்னும் குறிப்பும் உள்ளது. புதுக்குரல்கள் முதல் பதிப்பில் ‘சுந்தர ராமசாமி’ பெயரில்தான் கவிதைகள் இடம்பெற்றனவா என்பது தெளிவாகவில்லை.

‘பசுவய்யா’ என்னும் பெயரில் எழுதியிருக்க எக்காரணத்தால் ‘சுந்தர ராமசாமி’ எனப் பெயர் மாற்றம் நேர்ந்தது? நகுலனின் கவிதைகள், டி.கே. துரைஸ்வாமி என்னும் பெயரிலேயே இத் தொகுப்பில் உள்ளன என்பதையும் கருதிப் பார்க்கலாம். இவ்வாறு பலவகைப் பயன்பாடுடைய, வரலாற்றின் தொடக்கமாக விளங்குகின்ற ஒரு தொகுப்பு நூலுக்கு நம்பகமான பதிப்பு இல்லை என்பதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியுள்ளது.

பதிப்பு பற்றிப் பொதுமனத்தில் பதிந்துள்ள பார்வை, முழுக்க முழுக்கப் பழந்தமிழ் இலக்கியம் சார்ந்தது பதிப்பு என்பதுதான். பதிப்பைப் பொருத்தவரை பழமை, நவீனம் என்னும் பாகுபாடெல்லாம் இல்லை. பதிப்பின் முதல் அடிப்படை, படைப்பின் நம்பகமான மூலப் பிரதியை வாசகருக்கு வழங்குவதுதான். அடுத்து, படைப்பை வாசகர்கள் எளிமையாக அணுகுவதற்கேற்ற வழிமுறைகளை உருவாக்கித் தருவதாகும். இவ்விரண்டு நோக்கங்களுடன்தான் பதிப்பாசிரியர் செயல்படுகிறார். பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு இன்று கிடைக்கும் பதிப்புகள் நம்பகமான மூலப்பிரதி என்று சொல்வதற்கில்லை. தலைப்புகள் விடுபட்டும் மாற்றப்பட்டும் சொற்கள் சிதைக்கப்பட்டும் ஏனோதானோவென்று அச்சிடப்பட்ட பிரதிகள் என்று சொல்லலாம்.

இவை பதிப்பு உணர்வின்றி விற்பனை ஒன்றையே நோக்கமாகக் கொண்டவை. இன்றைய பதிப்பு முதலில் பிரதாப முதலியார் சரித்திரத்தின் நம்பகமான மூலத்தை வழங்க வேண்டும். நூலைப் பற்றியும் நூலாசிரியர் குறித்தும் ஆதார பூர்வமான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். நூலில் உள்ள வழக்கிழந்த சொற்களுக்கு அடிக்குறிப்பிலோ பின்னிணைப்பிலோ பொருள் கொடுக்க வேண்டும். நூலில் உள்ள அக்கால வழக்கங்கள், நடைமுறைகள் முதலியவற்றிற்குக் குறிப்புரை அல்லது விளக்கம் தரப்படலாம்.

ஒரு நூல் தொடர்ந்து வழங்கிவந்தாலும் குறிப்பிட்ட காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். அந்த உணர்வு பதிப்பில் செயல்பட வேண்டும். மங்கையர்க்கரசியின் காதல், புதுக்குரல்கள் ஆகிய நூல்களுக்கும் இத்தகைய பதிப்புகள் அவசியம். இவற்றிற்கு மட்டுமல்ல, நவீன இலக்கியங்கள் அனைத்திற்கும் நம்பகமான பதிப்பை வாசகர்கள் கோரும் நிலை ஏற்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top