Home » சிறுகதைகள் » உலகம் யாரை கொண்டாடும்?
உலகம் யாரை கொண்டாடும்?

உலகம் யாரை கொண்டாடும்?

அந்த ஊரில் ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனது கருமித்தனத்தால் ஊரார் அவனை அடியோடு வெறுத்தனர். ஒரு நாள் ஊராரிடம் அவன் சொன்னான்…. “உங்களுக்கு என்னை பற்றி இப்போது தெரியாது. கடவுளுக்கு தெரியும். நான் போகும்போது எதுவும் கொண்டுபோகப் போவதில்லை. அது எனக்கு தெரியும். எனவே என் சொத்துக்களில் கணிசமான ஒரு பகுதியை இந்த ஊருக்கும் பல தர்மகாரியங்களுக்கும் உயில் எழுதி வைத்துவிட்டுத் தான் செல்வேன்!” என்றான்.

அவன் இப்படி சொன்னதும்… ஊராரின் கேலி அதிகமானது. இவன் எரிச்சலடைந்தான். “பொறுத்திருந்து பாருங்க… நான் சொன்னதை செய்யத் தான் போறேன். அன்னைக்கு தான் உங்களுக்கு என்னைப் பத்தி புரியும்….”

ஒரு நாள் கோவிலுக்கு சென்றான். ஆண்டவனிடம் பிரார்த்தித்தான். “ஆண்டவனே, நான் உண்மையில் ஊராருக்கு உதவ நினைக்கிறேன். ஆனால் அவர்களோ என்னை புரிந்துகொள்ளாமல் வெறுக்கிறார்கள். நீ தான் புரியவைக்கவேண்டும்!!” என்று பிரார்த்தனை செய்துவிட்டு வீடு திரும்புகிறான்.

வழியில் கடும் மழை பிடித்துக்கொள்கிறது. மழையிலிருந்து தப்பிக்க சுற்றும் முற்றும் பார்த்தவன் ஒரு மரத்தின் ஓரமாக ஒதுங்குகிறான். அங்கு ஒரு ஆடும் பசுமாடும் நின்றுகொண்டிருந்தன.

ஆடும் பசுமாடும் பேசிக்கொள்வது இவனுக்கு கேட்டது.

ஆடு சொன்னது, “ஏ… பசுவே…. நான் இறந்த பிறகு, எனது தோல், கொம்பு, இறைச்சி உட்பட பல பொருட்களை தருகிறேன். என் உடலின் அனைத்தையும் மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் என்னை யாரும் மதிப்பதில்லை. ஆனால் நீ பாலை மட்டும் தான் தருகிறாய்… உன்னை மட்டும் இந்த உலகம் கொண்டாடுகிறதே… ஏன் ?”

பசு சொன்னது : “நான் உயிரோடு இருக்கும்போதே பாலை தருகிறேன். என்னிடம் உள்ளதை மகிழ்ச்சியாக மனப்பூர்வமாக கொடுக்கிறேன். ஆனால், நீ உயிரோடு இருக்கும்போது எதுவும் தருவதில்லை. இறந்த பின்னர் தான் தருகிறாய். மக்கள் எப்போதும் நிகழ்காலத்தை தான் பார்ப்பார்கள். எதிர்காலத்தை அல்ல. நீ உயிரோடு இருக்கும்போதே கொடுக்க கற்றுக்கொண்டால் மக்கள் உன்னையும் போற்றுவார்கள். இது தான் வாழ்க்கை!” என்றது.

பசுவும் ஆடும் பேசியது ஏதோ தனக்கே பேசியது போல உணர்ந்தான் அந்த செல்வந்தன். வீட்டுக்கு திரும்பியவுடன், தான் இறந்தவுடன் செய்ய நினைத்ததை அப்போதே செய்ய ஆரம்பித்தான். பல தான தருமங்கள் செய்தான். ஊரார் அவனை இம்முறை வாயார புகழ்ந்தனர். மனமார வாழ்த்தினர்.

நேற்று நீங்கள் நல்லவனா கெட்டவனா என்றோ அல்லது நாளை நீங்கள் நல்லவனாக இருப்பீர்களா கெட்டவனாக இருப்பீர்களா என்பது பற்றியெல்லாம் இந்த உலகத்திற்கு கவலை இல்லை. இன்று உங்களால் ஏதேனும் நன்மை உண்டா? உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்! இல்லையா…. போய்க்கொண்டே இருப்பார்கள்!! – இத்தனை ஆண்டு உலக வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்ட மிகப் பெரிய நீதிகளுள் இது ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top