உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?
கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? தன் நண்பணுக்காக உயிரையே தந்தானே?.
மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா?
துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்… அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..
அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டுச் சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம்
இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.
கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர். அப்படியானால் ஏன் பீஷ்மர் அவனை அவமானப்படுத்தியபோது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக் கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக எண்ணினான். அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்களைக் கொடுத்தான். இதையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் கூட கர்ண துரியோதன நட்பை உயர்ந்ததாகக் கருத முடியாது. அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.
கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப் பேசுகிறோம்.
அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான். நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான். அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான். அவனுடைய அண்ணன் தம்பிகள் மனைவி மக்கள் என அனைவருக்கும் வழிகாட்டினான்.
அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்…
கண்ணன் – அர்ஜூனன் உறவு, நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.