Home » சிறுகதைகள் » குருவுக்கு காணிக்கை!!!
குருவுக்கு காணிக்கை!!!

குருவுக்கு காணிக்கை!!!

விக்கிரமாதித்தன் கதை

குருவுக்கு காணிக்கை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! உன்னுடைய ராஜ்யத்தின் ஏதோ மிகக் கடினமான பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காண்பதற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறாய் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் மிக அறிவாளிகள் என்று நாம் நனைக்கும் சிலர் சாதாரண பிரச்சினையைக் கூட மிகக் கடினமான ஒன்றாக மாற்றி விடுகின்றனர்.  அத்தகைய குரு ஒருவரின் கதையைக் கூறுகிறேன், கேள்” என்று சொல்லிக் கதை சொல்லத் தொடங்கியது.

அவந்திபுரத்தை ஆண்டு வந்த சூரசேனருக்கு வஜ்ரசேனன், விக்கிரமசேனன் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். முதுமைப் பருவத்தை அடைந்ததும், தன் மூத்த மகன் வஜ்ரசேனனுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, தன் மனைவியுடன் வானப்பிரஸ்தம் மேற்கொண்டு, அடர்ந்த காட்டினில் வாசம் செய்தார்.தன் தந்தையைப் போலவே வஜ்ர சேனனும் செங்கோல் ஆட்சி புரிந்து குடிமக்களின் நலனைப் பேணி வந்தான். அவனுடன் குருகுலத்தில் பயின்ற மணிதரன் என்ற பக்கத்து நாட்டு இளவரசனுடன் சிறு வயது முதல் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

வஜ்ரசேனன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும், மணிதரன் தன் தங்கையை வஜ்ரசேனனுக்குத் திருமணம் செய்து வைத்துத் தானும் அவந்திபுரத்திலேயே தங்கி விட்டான். அவந்திபுரத்தைத் தனதாக்கிக் கொள்ளத் திட்டமிட்ட மணிதரன் சிறிது சிறிதாக வஜ்ரசேனனிடமிருந்து அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டான்.  இசை, சிற்பம், நடனம் என்று அருங்கலைகளில் தன் நேரத்தை செலவிட்ட வஜ்ரசேனன் நாளடைவில் ஆட்சியின் முழு அதிகாரத்தையும் மணிதரனிடமே ஒப்படைத்து விட்டான்.

மணிதரனின் ஆதிக்கத்தில் அவந்திபுரத்தில் அராஜகம் தாண்டவம் ஆடியது.  மணிதரனின் கொடுங்கோலாட்சியைக் கண்டு கலக்கமுற்ற பிரமுகர்கள் பலமுறை வஜ்ரசேனனை சந்தித்து உண்மை நிலவரத்தைத் தெரிவிக்க முயன்றபோது,  மணிதரன் அவர்களைத் தடுத்துவிட்டான். அதனால் இளையவன் விக்கிரமசேனனிடம் சென்று பிரமுகர்கள் நாட்டின் நலைமையை எடுத்துக் கூறி,  அவனை மன்னனாகப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். ஆனால் தன் அண்ணன் ஆட்சி செய்வதுதான் சரியென்றும், மறுத்து விட்டான். வேறு வழியின்றி, அவர்கள் காட்டினை அடைந்து பெரியவரான சூரசேனரை சந்தித்து முறையிட்டனர்.

அனைத்தையும் கேட்ட பிறகு சூரசேனர், “ஒருமுறை ஆட்சிப் பொறுப்பை என் மூத்த மகனிடம் ஒப்படைத்து விட்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிய பிறகு, எனக்கு அரசாங்க விஷயங்களில் தலையிட உரிமை இல்லை. சிறிதுகாலம் பொறுத்து இருங்கள்! உங்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படும்!” என்று சொல்லி அனுப்பினார். ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டாரே தவிர, தன் ராஜ்யத்தின் நலைமை சீர்குலைந்து போனதை அறிந்து சூரசேனன் மிகவும் வருந்தினார்.

இதற்கு வேறு ஏதாவது வழி உள்ளதா என்று தீவிர யோசனை செய்தார். வழி ஏதும் தோன்றாததால், அவர் தன் பிள்ளைகள் பயின்ற குருகுலத்தை அடைந்து அங்கிருந்த வயதில் மூத்த குருவை சந்தித்து, தன் ராஜ்யத்தின் பிரச்சினைகளைக் கூறி, உதவி செய்யுமாறு வேண்டினார். “மகாராஜா! அவந்திபுரத்தில் நடக்கும் ஆட்சியைப் பற்றி நானும் அறிவேன்! அதற்கெல்லாம் மூலகாரணம் வஜ்ரசேனனின் மைத்துனன் மணிதரன்தான்! கவலைப்படாதீர்கள்! இதை நான் தீர்த்து வைக்கிறேன்!” என்று குரு வாக்குறுதி அளித்தார்.

மறுநாள் குரு அவந்திபுரம் தர்பாரை அடைந்தார். தனது குரு தன்னைத் தேடி வந்திருப்பதைக் கண்டு உவகையுற்ற வஜ்ரசேனன் பலத்த உபசாரத்துடன் அவரை வரவேற்றான். பிறகு குரு, “வஜ்ரசேனா! குருகுலத்தில் வித்யாப்யாசம் முடிந்ததும், மாணவர்கள் குரு தட்சிணை  தருவது வழக்கம்! ஆனால், நான் உன்னிடம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. பிற்காலத்தில் எனக்குத் தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன்! அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“ஆகா, ஞாபகம் இருக்கிறது! குருதேவரே! தாங்கள் எதைக் கேட்டாலும், அதை அளிக்க சித்தமாகஇருக்கிறேன்” என்றான் வஜ்ரசேனன் பணிவுடன். “வாக்களித்தபின், மறுக்க மாட்டாயே!” என்று குரு கேட்க, “குருதேவரே! ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? வாக்குத்தவறுவது மரணத்திற்கு சமம்! தயங்காமல் கேளுங்கள்” என்றான் வஜ்ரசேனன்.

“அப்படியானால் உனக்கு சொந்தமான இந்த அவந்திபுர ராஜ்யத்தை எனக்கு குரு தட்சிணையாகக் கொடுத்து விடு!” என்றார்.

ஒரு கணம் திடுக்கிட்டாலும், விரைவிலேயே சமாளித்துக் கொண்ட வஜ்ரசேனன் “கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டேன்! எனது இந்த ராஜ்யம்…” என்று சொல்லி முடிப்பதற்குள், மணிதரன் ஆத்திரத்துடன் அவசரமாகக் குறுக்கிட்டு, “அவசரப்பட்டு ராஜ்யத்தை தானம் செய்யாதே வஜ்ரசேனா! அவருக்குப் பொன், பொருள், நலம் எது வேண்டுமானாலும் கொடு!”  என்று தடுக்க முயன்றான்.

அதற்கு வஜ்ரசேனன் “ஒருமுறை வாக்களித்தப்பிறகு அதிலிருந்து தவறுவது மிகப் பெரிய குற்றம்!” என்றவன், குருவை நோக்கி, “குரு தேவரே! தாங்கள் விரும்பியபடி என்னுடைய ராஜ்யத்தைத் தங்களுக்கு குரு தட்சிணையாக அளிக்கிறேன்!” என்று கூறிவிட்டு, தனது கிரிடத்தை  கீழே வைத்துவிட்டு, சிம்மாசனத்தை விட்டு இறங்கி விட்டான்.

குரு வஜ்ரசேனனை நோக்கி, “வஜ்ரசேனா! உன்னுடைய அபாரமான குருபக்தியை மெச்சுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை.  கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உனக்குள்ள அக்கறையில் பத்தில் ஒரு பங்காவது குடிமக்களின் நலனில் செலுத்தி இருக்கலாம்,”  என்று கூறிய பிறகு, தன் சீடர்களை அனுப்பி காட்டில் வசிக்கும் சூரசேனரை அழைத்து வரச் சொன்னார்.

சூரசேனர் வந்தவுடன், குரு அவரை நோக்கி, “மகாராஜா! உங்கள் மூத்த மகன் தன் ராஜ்யத்தையே எனக்கு தட்சிணையாக அளித்து விட்டான். நான் அதை தங்களிடம் தருகிறேன். நீங்கள் ராஜ்யத்தை இரண்டாகப் பிரிந்து, உங்கள் புதல்வர்கள் இருவருக்கும் சமமாக அளியுங்கள்! இதன்மூலம் நாட்டில் மீண்டும் அமைதி நிலவும்!” என்றார். அவருடைய கட்டளையை சூரசேனரும் அவருடைய இரு பிள்ளைகளும் ஒப்புக் கொண்டனர். விரைவிலேயே சூரசேனர் ராஜ்யத்தை இரு மகன்களுக்கும் சமமாக பிரித்து அளித்து இருவரையும் மன்னர்களாக்கி விட்டார்.

இந்த இடத்தில் கதையை நறுத்திய வேதாளம், “மன்னா! வஜ்ரசேனன் நாட்டை ஆளத் தகுதியில்லாதவன் என்று தெரிந்த பிறகும் அவனுக்கு ஒரு பாதியைக் கொடுத்தது முட்டாள்தனம் இல்லையா? இளையவன் விக்கிரமசேனன் முதலில் அண்ணன் விஷயத்தில் தலையிடமாட்டேன். ஆட்சியில் தான் அமருவது தவறு என்றவன் பாதிராஜ்யம் கிடைத்ததும்  ஒப்புக் கொண்டான். அது ஏன்? சூரசேனரும் தான் நிர்வாகத்தில் தலையிடமாட்டேன் என்று கூறியவர் பிறகு குருவின் மூலமாக நிர்வாகத்தில் தலையிட்டு ராஜ்யத்தை சரிபாதியாக பிரித்து இருவருக்கும் அளித்தது எந்த விதத்தில் நியாயம்? எனது இந்த சந்தேகங்களுக்குப் பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.

அதற்கு விக்கிரமன், மன்னர் ஆட்சிப் பொறுப்பை விட்டு விலகும்போது, மூத்த மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது தொன்றுதொட்டு இருந்து வரும் ராஜபரம்பரை வழக்கம்! ஆகவே, அதற்குப் புறம்பாக நடக்க விக்கிரமசேனன் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் தன் தந்தை, அண்ணன் மற்றும் குரு வற்புறுத்திய பின்னர் பாதி ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டான். வஜ்ரசேனன் சுபாவத்தில் மிகவும் நல்லவன். அதனால்தான் அவன் தன் தந்தையின் கட்டளையை உடனே ஏற்றுக் கொண்டான். மணிதரனை ராஜ்யத்தை விட்டு வெளியேறச் சொன்னால், தானும் தன் தம்பியைப் போல் நல்லாட்சி புரியலாம் என்று எண்ணினான். வனவாசத்திலிருந்து ஆசிரமத்திற்கு வந்த மன்னர் மறுபடியும் தன் ராஜ்யத்தை குருவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அதன்பின் அதை தன் பிள்ளைகளுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கும்படி குரு கூறியதும் அவ்வாறே செய்தார். அவர் மக்கள் நலன் கருதியே இவ்வாறு செய்தார். இதில் அவரது சுயநலம் என்ற பேச்சிற்கே இடமில்லை மக்கள் நலன் கருதி அனைவரின் விருப்பத்திற்கேற்ப மன்னனும் குருவும் சேர்ந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் இருவரும் பாராட்டுக்கு உரியவர்களே!” என்றான்.

விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன், மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top