Home » சிறுகதைகள் » யார் இங்கே திருடர்?
யார் இங்கே திருடர்?

யார் இங்கே திருடர்?

ஒரு கிராமம். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. பின்பு நிலைமை மாறிப்போய் விட்டது. பஞ்சம் வந்து விட்டது.

அந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு பாழடைந்த குடிசை. அந்தக் குடிசையில் இருவர் அடைக்கலமாகிக் கொண்டனர்.

ஒருவர் பார்வையற்றவர். மற்றவர் கால்கள் அற்றவர். அவர்களுக்கென்று பிழைக்க வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடப்படும் போது அவர்கள் போவார்கள். பழையது, சொத்தை, அழுகல் என்று மிஞ்சிய காய் கனி தானியங்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதை உணவாக்கி அவர்கள் உண்டு வாழ்ந்தனர். பிரச்சினை ஏதும் இல்லாமலிருந்தது.

ஆனால், பஞ்சம் வந்த பிறகு, கடைத்தெரு பெரும்பாலும் அடைந்தே கிடக்கிறது. எப்போதாவது திறந்திருந்தாலும் இந்த இருவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெரும்பாலும் பட்டினி கிடந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்த போது, ஒரு முடிவுக்கு வந்தனர். திருடிச் சாப்பிட்டாவது தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

கண் தெரியாதவரால் எவ்வளவு தூரம் தட்டுத் தடுமாறிப் போக முடியும்? முடமானவரால் ஊர்ந்து ஊர்ந்து எவ்வளவு தூரம் வரை போக முடியும்? போகிற வழியில் வயல்கள் எல்லாம் கருகிக் கிடந்தன.

கொஞ்சம் தூரத்தில் ஊர்த்தலைவரின் தோட்டம். அவருக்கென்று தண்ணீர் வசதிகள். தோட்டம் இன்றைக்கும் செழித்துக் கிடந்தது. அங்கே போவதென்று முடிவு செய்தார்கள்.

முடவரைக் குருடர் சுமந்து கொள்ள வேண்டும். முடவர் வழிகாட்ட, வழிகாட்டக் குருடர் நடக்க வேண்டும். வழிகாட்டுவது சுலபம். நடப்பது கஷ்டம். குருடர் மூச்சு வாங்க நடந்தார்.

ஒரு வழியாய் ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்து விட்டார்கள். ஊருக்குள் யாரும் நெருங்கப் பயப்படும் தோட்டம். பிடிபட்டால், கட்டி வைத்துத் தோலை உறித்து விடுவார்கள். தோட்டத்தில் தானியங்களும், காய் கனிகளும் குவிந்து கிடந்தன. முடவரை வரப்பிலேயே இறக்கிவிட்டுக் குருடர் தட்டுத் தடுமாறி உள்ளே போய் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் குடிசைக்குத் திரும்பி விட்டனர். கொண்டு வந்தது இரண்டு நாட்களுக்கு போதுமானதாகயிருந்தது.

நெடுநாளைக்குப் பிறகு இருவரும் வயிறார உண்டு உறங்கினார்கள். காலையில் எழும்போதே பெருங்கூச்சல் கேட்டது.

ஊர் முச்சந்தியில் நின்று ஊர்த்தலைவர், “எவன் என் தோட்டத்தில் இறங்கித் திருடினவன்? அவனைக் கண்டுபிடித்துத் தண்டனை தராமல் விட மாட்டேன்” கத்திக் கொண்டிருந்தார்.

யாரும் திருட்டை ஒப்புக் கொள்ள முன்வரவில்லை. ஊர்த் தலைவர், ‘நியாய தேவதை’யின் கோயிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி நியாய தேவதையை ஊருக்குள் அழைத்து வந்தார்.

நியாய தேவதையின் முன் வந்து ஒவ்வொருவரும் உண்மையைச் சொல்ல வேண்டும். திருடியவரைத் தேவதை கண்டு பிடித்துவிடும். பொய் சொன்னாலும் கண்டுபிடித்து விடும். தப்பு செய்தவர்களைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும்.

ஊர் மக்கள் ஒவ்வொருவராக நீதி தேவதையின் முன் வந்து திருடவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தனர். யாரையும் நியாய தேவதை கொல்லவில்லை.

கடைசியாக அந்தக் குருடரும், முடவரும் மட்டுமே மிஞ்சியிருந்தனர். யாருக்கும் அவர்கள் ஞாபகம் வரவில்லை.

திடீரென ஊர்த்தலைவர் கத்தினார்.

“அந்தக் குருடனையும், நொண்டியையும் இழுத்துக்கிட்டு வாங்கடா”

இருவரும் சிரமத்தோடு தடுமாறி வந்தார்கள். ஊர் மக்களுக்குக் கண் கலங்கியது.

நியாய தேவதை முன் முதலில் குருடர் வந்து நின்றார். அவர், “தேவதையே! நான் பிறவிக்குருடன். எதையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தை நான் பார்த்ததேயில்லை” என்றார். 

குருடரைத் தேவதை ஒன்றும் செய்யவில்லை.

அடுத்து முடவர் ஆஜரானார். “அம்மா! நான் பிறவியிலேயே முடவன். நடக்க மாட்டாதவன். தலைவர் தோட்டத்தில் என் கால் படவேயில்லை” என்றார்.

முடவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை.

இனி யாரும் மிச்சமில்லை. ஊர் மக்களுக்குத் திகைப்பு.

நியாய தேவதை கோயிலை விட்டு வெளியே வந்த பின் குற்றவாளியைத் தண்டிக்காமல் திரும்பிப் போகாது!

அப்போது யாரும் எதிர்பாராமல் அந்தச் சம்பவம் நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெறித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

‘ஊர்த்தலைவரா… திருடர்!’ என்று எல்லோருக்கும் ஆச்சரியம்! ஊர்மக்கள் நியாய தேவதையிடம் விளக்கம் கேட்டனர்.

“ஆமாம், ஊரில் கடுமையான பஞ்சம் நிலவும் போது தன்னிடம் வசதிகளிருந்தும், தன் தோட்டத்தில் அனைத்தும் நன்றாக விளைந்திருந்தும் மக்களுக்குக் கொடுத்து உதவாமல் இருந்ததே குற்றம். இந்தக் குற்றத்துடன் தன் தோட்டத்தில் திருடு போய் விட்டது என்று அழைத்து வந்த இவனைப் போன்றவர்கள் உயிருடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்றது அந்த நீதி தேவதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top