தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர் குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகிய திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார். தமக்கென்று வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார். அன்பே சிவம் என்ற உண்மையில் வாழ்க்கையெல்லாம் திளைத்திருந்தார். இன்று அன்பிலும் சிவத்திலும் இரண்டறக் கலந்து விட்டார் திரு.வி.க. தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
பிறப்பு:
திரு.வி. கலியாண சுந்தரனார் சென்னை, போரூர் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த துள்ளம் (தற்போது தண்டலம்) என்னும் ஊரில் 1883 ஆகஸ்ட் மாதம் 26 அன்று விருத்தாச்சனார் – சின்னம்மையாருக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் (திரு. வி. க.) (ஆகஸ்ட் 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
கல்வி:
பிள்ளைகளின் எதிர்காலம் கருதி விருத்தாசல முதலியார் 1890 ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டைக்குக் குடியேறினார். திரு.வி.க.வின் கல்வி ராயப்பேட்டை ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடைவராக விளங்கினார். 1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரின் பள்ளிப் படிப்பும் முடிந்தது.
சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். கதிரைவேற் பிள்ளை தீவிர சைவ சித்தாந்தவாதி. தமிழை ஆழ்ந்து பயின்றவர்.
பின் அப்பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றினார். தேசப்பிதா காந்தியை, காந்தியடிகள் என்று முதலில் அழைத்த பெருமைக்குரியவர் திரு.வி.க., ஆங்கிலேயர்களை எதிர்த்து, “தேசபக்தன்’ என்ற பத்திரிகையை நடத்தினார்.
கதிரவேற்பிள்ளையின் இறப்பிக்குப் பிறகு மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களை கற்றார்.
கதிரைவேற் பிள்ளை செல்வாக்கின் கீழ் தமிழ் கற்ற கலியாண சுந்தரனார் இயல்பாகவே சைவசிந்தாந்தத்தின் பால் ஈடுபாடு கொண்டார். இளம் பருவத்தில் அவரே சொல்வதுபோல “உடல் தடித்தவன்” மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தந்ததில்லை. சைவத்துக்கு எதிரான கருத்துக்களை ஆதரித்ததும் இல்லை.
ஆசிரியர் பணி:
1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனிமையானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.
பத்திரிக்கை பணி:
தேசபக்தன் பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகவும், அதன் பிறகு திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்காக பெரும் தொண்டாற்றினார். பத்திரிகையில் பணியாற்றிய காலங்களில் தினந்தோறும் வெளியான தலையங்கங்களிலிருந்து தமிழ் மொழியின் வன்மை இத்தகையது என்பதைத் தமிழர்கள் கண்டு கொண்டார்கள். திரு.வி.க வின் தலையங்கங்கள் ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்களின் உள்ளங்களில் தேச பக்திக் கனலை மூட்டியது. அத்துடன் தமிழ் ஆர்வமும் பொங்கிப் பெருகச் செய்தது. தூய தமிழில் சொல்ல முடியாத பொருள் ஒன்றுமில்லையென்பது பலருக்கும் தெளிவாயிற்று. பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து திரு.வி.க பற்பல அழகிய சொற்களைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்து தற்கால அரசியலில் விவாதங்களில் உபயோகப்படுத்தினார். “அடடா! தமிழ் இத்துணை வளமுள்ள மொழியா?” என்று அனைவரும் வியந்தார்கள்.
அரசியல் பணி:
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் அரும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டும், பல நூல்களை எழுதியும் சிறப்படைந்தார்.
திரு.வி. கல்யாண சுந்தரனார் கடவுள் வழிபாட்டில் அதிக ஈடுபாடுடையவர்.
அவர் ஒரு முறை கடவுள் மறுப்புக் கொள்கையுடைய பெரியார் ஈ. வே. ராமசாமியைச் சந்தித்தார். திரு. வி. க. தான் கொண்டு வந்திருந்த திருநீற்றைப் பெரியாரிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட பெரியார், அதைத் தன் நெற்றியில் பூசிக் கொண்டார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். ஆச்சரியப்பட்டனர்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் திரு. வி. க. விடைபெற்றுச் சென்றார்.
அவர் சென்றவுடன் அவருடனிருந்தவர்கள், “உங்கள் நெற்றியிலிருக்கும் திருநீற்றை அழித்து விடுங்கள்” என்று வற்புறுத்தினார்கள்.
ஆனால் பெரியார் அதற்கு மறுத்து விட்டார்.
பின்னர் அவர்களிடம், “திரு. வி. க. எந்த உணர்வோடு எனக்கு இந்த திருநீற்றைக் கொடுத்தாரோ, அந்த உணர்வை அவமதிக்கக் கூடாது. நான் அதை அழித்து விட்டேன் என்று அவர் கேள்விப்பட்டால், மனம் வருந்துவார்.
அவர் மனம் வருந்தக் கூடாது என்பதற்காகவே நான் இந்தத் திருநீற்றை என் நெற்றியில் பூசியிருக்கிறேன். அதனால் இதை நான் அழிக்க மாட்டேன். அது தானாக அழியும் போது அழியட்டும். இதுவே நான் திரு. வி. க விற்கு நான் காட்டும் நிறைவான மரியாதை ஆகும்” என்றார்.
இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை.
பெரியார், தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருந்தாலும், தன் மீது மற்றவர்கள் கொண்டிருக்கும் மதிப்புக்கு மரியாதை அளிப்பவர் என்பதையும் இதன் மூலம் உணரலாம்.
படைப்புகள்: மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை என்ற நூல்களை எழுதியுள்ளார்.
அதன் பின், ‘நவசக்தி’ பத்திரிக்கை மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுப்பட்டார். சிறந்த எழுத்தாளரான இவர், 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தன் எழுத்துக்கள் மூலம் நாட்டின் விடுதலை, தமிழ்மொழி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதா
கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.
ராயப்பேட்டை டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள “ஸ்ரீபால சுப்பிரமணிய பக்த ஜன சபை’ 1903-ம் ஆண்டில் துவக்கப்பட்டது என்று, சுமார் அறுபது வருடங்களாக சபையுடன் தொடர்புடைய சி.வா.கிருஷ்ணமூர்த்தி கூறியதும் அதன் தொன்மையையும், தொடர்புடைய பெரியோர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாயிற்று.
1901-ம் வருடம், ராயப்பேட்டை “வெஸ்லி’ பள்ளியில் “நான்காம் பாரம்’ பயின்று கொண்டிருந்த திரு.வி.கல்யாண சுந்தரனார், அவருடைய நண்பர்களோடு சேர்ந்து, ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர்கள் ஆக வேண்டும் என்று “இராயப்பேட்டை இளைஞர் கல்விக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி பெற்று வந்தனர்.
அடுத்த ஆண்டிலே, பள்ளியில் யாழ்ப்பாணம் சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை, தமிழாசிரியராய் பணியேற்றார். பிள்ளையின் சிறந்த நாவன்மை, எழுத்தாற்றல், வாதத்திறனால் ஈர்க்கப்பட்டு அவரிடம் நெருக்கமான திரு.வி.க., அவர் ஆலோசனையை ஏற்று “கல்விக் கழக’த்தை, 1903-ம் ஆண்டு “ஸ்ரீபால சுப்பிரமணிய பக்த ஜன சபை’யாக மாற்றி அமைத்தார். அதன்பின்பு, ராயப்பேட்டை கணபதிகாலனியில், வாடகை வீட்டில் வசித்து வந்த தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும், ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்த ஜனசபையும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது என்பது சிறப்பான வரலாறு.
1919-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, காந்திஜி நாட்டின் சுதந்திரத்திற்காக “சத்தியாக்கிரக நோன்பு நாள்’ கொண்டாட விருப்பம் தெரிவித்தார். அன்று ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்த ஜன சபையில் யாராலும் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி நடந்தது. அன்று சபையில் எல்லோரும் கூடியிருந்த போது, மகாகவி பாரதியார் சபைக்கு வந்தார். பெரும் மகிழ்ச்சி அடைந்த திரு.வி.க., பாரதியாரை ஒரு பாடல் பாடுமாறு கேட்டுக் கொண்டார். உடனே பாரதியும், சபாமூர்த்தியாகிய ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமியைக் கண்டு,
“முருகா-முருகா-முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்’
-என்று தொடங்கிப் பாடினார். இந்தப் பாடலை, அன்று பாரதியின் குரல் மூலம் கேட்டவர்களின் உணர்ச்சியைப் பற்றி திரு.வி.க. “”பாட்டு-தமிழ்ப்பாட்டு- தேனினும் இனிய முருகன் பாட்டு. படத்திலுள்ள ஓவிய முருகனை நகரச் செய்தது. ஓவிய உருவம் வீறுடன் வெளிவருவது போன்ற தோற்றம் உண்டாயிற்று. அன்பர் மெய்கள் அரும்பின.
விதிர்விதிர்த்தன; சிலர் மயங்கினர்; சிலர் விழுந்தனர்; சிலர் கண்ணீர் உகுத்துத் தம்மை மறந்தனர்; எல்லோரும் ஆனந்தப் பரவசமாயினர்; பாரதியார் சித்திரப் பதுமை ஆனார். பாட்டுக்கும் ஓவியத்துக்கும் உள்ள ஒருமைபாட்டை யான் கண்ணார கருத்தாரக் கண்டேன்” என்று தமது “”வாழ்க்கைக் குறிப்புகள்” நூலில் எழுதியுள்ளார்.
எழுதிய நூல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் – 1908
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – 1927
நாயன்மார் வரலாறு – 1937
முடியா? காதலா? சீர்திருத்தமா? – 1938
உள்ளொளி – 1942
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
உரை நூல்கள்
பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907
பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் – 1923
காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1941
திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939
திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) 1941
அரசியல் நூல்கள்
தேசபக்தாமிர்தம் – 1919
என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921
தமிழ்நாட்டுச் செல்வம் – 1924
தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு – 1928
சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து – 1930.
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935
இந்தியாவும் விடுதலையும் – 1940
தமிழ்க்கலை – 1953
சமய நூல்கள்
சைவசமய சாரம் – 1921
நாயன்மார் திறம் – 1922
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923
சைவத்தின் சமசரசம் – 1925
முருகன் (அல்லது) அழகு – 1925
கடவுட் காட்சியும் தாயுமானவரும் – 1928
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் – 1929
தமிழ் நூல்களில் பௌத்தம் – 1929
சைவத் திறவு – 1929
நினைப்பவர் மனம் – 1930
இமயமலை (அல்லது) தியானம் – 1931
சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933
சமரச தீபம் – 1934
சித்தமார்கக்ம – 1935
ஆலமும் அமுதமும் – 1944
பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி – 1949
பாடல்கள்
முருகன் அருள் வேட்டல் – 1932
திருமால் அருள் வேட்டல் – 1938
பொதுமை வேட்டல் – 1942
கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945
புதுமை வேட்டல் – 1945
சிவனருள் வேட்டல் – 1947
கிறிஸ்து மொழிக்குறள் – 1948
இருளில் ஒளி – 1950
இருமையும் ஒருமையும் – 1950
அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி – 1951
பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் – 1951
சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் – 1951
முதுமை உளறல் – 1951
வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் – 1953
இன்பவாழ்வு – 1925
மறைவு: இயற்கையோடியைந்த இன்பத்தையும் இன்பத்தோடியைந்த இயற்கையையும் பற்றி இடைவிடாது சிந்தித்தும் பேசியும் எழுதியும் வந்த ஞானி திரு.வி.க 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை ராயபேட்டை கணபதி முதலியார் தெருவில் இருந்த வீட்டில் இயற்கையோடு இயைந்து இன்பத்தோடு ஒன்றிவிட்டார்.
அந்நாள்களில் பொதுமேடைகளில் நல்ல தமிழ் பேசுவோர் எவரும் இலர். அயல்மொழியான ஆங்கிலமும் ‘அக்ராசனர் அவர்களே, மகா ஜனங்களே, நமஸ்காரம்’ என்கிற நரகல் நடை சமற்கிருதமுமே கோலோச்சின. தூய தமிழில் இனிக்க இனிக்க ஏடெழுதுவோர் இல்லாதிருந்த காலமது. அந்த நேரத்தில் தான் செந்தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் வரவு வாய்த்தது.
காய்ச்சிவைத்த பசும்பாலில் கழுநீரைக்
கலந்ததுபோல் நன்றில் தீதைப்
பாய்ச்சிவைத்துப் பிழைப்பாரும், பாழ்பட்ட
தமிழர்களும் வாழும் நாட்டில்
பேச்சுவைத்த தோடுகனி பிழிந்துவைத்துச்
சுத்தவாய் பேச வைத்து
மூச்சுவைத்துத் தமிழர்களை முடுக்கியஇத்
தலைமுறையை வாழ்த்துகின்றேன்
என்று மேடைத்தமிழிலும் எழுத்துத் தமிழிலும் புதுப்பாதை தொடங்கி வைத்த திரு.வி.க.வின் தொண்டினைப் பாவேந்தர் போற்றுகிறார்.
இத்துயர் தமிழ்நாட்டில் எனைமகிழச்
செய்தளவாய் இருப்ப வற்றுள்
முத்தமிழ்வாய் உழைப்பாளிக் குழைக்குந்தோள்
அன்புள்ளம், தமிழ் எழுத்தை
வித்தியுயர் விளைக்கும்விரல், தமிழருக்கோர்
தீமைஎனில் விரைந்தோடுங்கால்
இத்தனைகொள் கலியாண சுந்தரனார்
என்ற பொதுச் சொத்தும் ஒன்றே என்று திரு.வி.க.வின் உடல்உறுப்புகள் அனைத்தையும் தமிழ்நாட்டின் பொதுச் சொத்தாக்கிய பெருமை பாவேந்தரையே சாரும்.