என்னடா வாழ்க்கை இது..? – நிறைய விமர்சங்கள் வந்தன… அது ஏனோ நம் மக்களுக்கு பொது இடங்களில் விமர்சனம் செய்வதில் விருப்பமில்லை போலும். அதிகமாக வந்த விமர்சனங்கள்…
1) வாழ்க்கையை நீ தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறாய்…
2) படிக்க மிகவும் பெரியதாக இருக்கிறது.
3) இது பருவக் கோளாறு, திருமணம் முடிந்தால் சரியாகிவிடும்.
கிட்டத் தட்ட எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால், இவை எல்லாம் சரி தான் போல.
ஆமாம் வாழ்க்கை என்பதே ஒரு அற்புதம் தான். (அரிது.. அரிது.. எனத் தொடங்கும் அவ்வைப் பாட்டியின் பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது). உண்மைதான், மனிதனைப் பிறந்து அதில் எந்தக் குறை இன்றி நன்றாக இருப்பதே ஒரு பாக்கியம் தான். கண்ணைக் கட்டிக் கொண்டோ, பேசாமலோ, நடக்காமலோ ஒரே ஒரு நாள் மட்டும், முழுவதும் உங்களால் இருக்க முடியுமா? கண்டிப்பாய் என்னால் முடியாது.
பிறக்கிறோம், 10 வயது வரை வாயில் அதிகமாக பேசும் மொழி புன்னகை தான். புன்னகையிலும் சிரிப்பிலும் வளர்கிறோம். பின்னர் பள்ளி…! படித்துக் கொண்டு இருந்த ஞாபகங்களை விட, பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்த ஞாபகங்கள் தான் அதிகம்.
சந்தோசமான பொழுதுகள். பள்ளி முடிந்ததும் கல்லூரி, சொல்லவே தேவை இல்லை. கல்லூரி நாட்களை, ரசித்துப் பார்க்காத, ருசித்துப் பார்க்காத, மனிதர்கள் யாரும் உண்டா? நிறைய பேரிடம் இன்று வரை கேட்டால், வாழ்க்கையில் சந்தோசமான பொழுதுகளே என் கல்லூரி நாட்கள் தான் என்பார்கள்.
பின்னர் வேலைக்கு சேர்வது… மனிதன் தன்னாலும் சம்பாதிக்க முடியும் என்று உணரும் நாட்களே இது தான். முதல் மாத சம்பளம் வாங்கும் பொழுது, மனிதன் படும் சந்தோஷங்களுக்கு அளவே கிடையாது.
சம்பளத்தை எடுத்து தாயிடம் நீட்டும் போது, நானும் பெரியவன் ஆகிவிட்டேன் என்றொரு உள்ளுணர்வு. தாய்க்கோ என் பிள்ளை இவன், மிகப் பெரிய ஆளாக வருவான் என்றொரு உள்ளுணர்வு. பணத்தை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால் பல இடங்களில், சந்தோஷம் வரக் காரணமே பணம் தான்.
எல்லோருக்கும் அவரது தந்தை தான் தனது முதல் ஹீரோ. அவரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைக்க முயற்சிப்போம் சிறு வயதில்… தாய் என்ற ஒரு அற்புத பந்தத்தையும் அறிமுகப் படுத்தி… அதை உணரச் செய்வதும் வாழ்கை தான்…! பின்னர் துணை.
ஆணாகட்டும், பெண்ணாகட்டும், தனக்கென்று ஒரு துணை, நீங்கள் என்ன மொக்கை ஜோக் சொன்னாலும் அதையும் கேட்டு சிரிக்க ஒரு ஆள் உங்கள் அருகே எப்போதும்… புதிதாய் ஒரு உலகை உணர்வீர்கள்.
அந்த புன்னகை, ஸ்பரிசம், காதல், அன்பு, வம்பு, சண்டை, மன்னிப்பு, கண்ணீர், கோபம், அக்கறை, பாசம், நேசம், கண்டிப்பு, எல்லாவற்றையும் நன்றாக உணர்த்தக் கூடிய ஒரு பந்தம் தான் துணை.
அடுத்து என்ன சொல்ல வருகிறேன் என்று நீங்கள் நன்றாக யூகித்து இருப்பீர்கள், ஆமாம், குழந்தை. உங்கள் குழந்தையை முதன் முதலாய் முகம் பார்த்து, தொட்டுப் பார்த்த அனுபவத்தை உங்களால் விவரிக்க முடியுமா? கண்டிப்பாய் முடியாது…!
அந்த குழந்தை பார்ப்பதையும், கண் சிமிட்டுவதையும், அழுவதையும், கொட்டாவி விடுவதையும், பார்க்க பார்க்க ஆனந்தம் தான். அதுவரை, யார் யாருக்கோ கடைக்கு சென்று ஏதேதோ வாங்கி இருப்பீர்கள். உங்கள் குழந்தைக்கு, ஓடிச் சென்று cerelac, pumpers வாங்கும் போது தான் நானும் தந்தை ஆகிவிட்டேன். என் குழந்தையை எப்படி வளர்க்கிறேன் பார், என்று உள்ளூர ஒரு பெருமிதம்.
சிறு குழந்தைகள் வளர்வதைப் பார்த்துக் கொண்டு இருப்பதே… ஒரு சுகம் தான். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொண்டு செய்யும். அதிலும், முதன் முதலாக சிரிப்பது, நடப்பது, பேசத் தொடங்கி, அம்மா, அப்பா என்று அழைக்கத் தொடங்குவது… நீங்கள் செய்வதை எல்லாம் திரும்பவும் செய்வது… என்று தினந்தோறும் தீபாவளி தான் வீட்டில்.
ஆகவே நண்பர்களே, வாழ்கை என்பதே அடுக்கடுக்காய் அற்புதங்களும், மகிழ்வுகளும் நிறைந்த பேழை தான். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வார்கள்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று ஒரு போதும் எண்ண வேண்டாம். நம்மை விட கண்டிப்பாய் தாழ்ந்தவர்கள், எளியவர்கள், வாழ்வில் நொடித்துப் போனவர்கள் ஏராளம் பேர். அவர்களைப் பார்த்து, நாம் நம் வாழ்கையை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறி, யாருக்கும் தொந்தரவு இன்றி வாழ்ந்தாலே, அதுவே போதுமானது…!
ஒரு தந்தை தன் பிள்ளையை அழைத்து நீ ஆங்கிலம் படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் மோட்சத்தில் நல்லாயிருக்கலாம். ”என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.
உடனே அந்தப் பிள்ளை, ”ஆங்கிலம் படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம் என்கிறீர்கள். சமஸ்கிருதம் படித்தால் அங்கே நல்லாயிருக்கலாம் என்கிறீர்கள். இங்கே அங்கே என்றில்லாமல் எங்கும் நன்றாக இருக்க நான் தமிழைப் படிக்கிறேன் என்றான்.
அந்தப் பிள்ளை யார் தெரியுமா? ஊ.வே.சா. என்கிற தமிழறிஞர்.
நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று தன் மகனை பார்த்து சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
மகனும் அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள பொருட்களை பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
“மகனே! என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள் புத்தக்தைப் பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.
அப்பா! நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது, நானாவது அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து இருக்கிறோமா? பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான் அப்படிச் செய்தேன் என்றான்.
மழைக்காலத்தில் சூல்கொண்ட கரு மேகங்கள் வானத்தில் உலாவரத் தொடங்கின.
மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி வந்தது. பரந்துக் கிடந்த கடலைப் பார்த்தது.
‘ஆ! இந்தக் கடல் எவ்வளவு பெரியது. இதைப் பார்க்கும்போது நான் ஒரு
பொருளாகவே இல்லையே. எவ்வளவு சிறுமையாக இருக்கிறேன்’ என்று பணிவுடன் நினைத்துப் பார்த்தது.
அந்த கடலிலிருந்து சிப்பி ஒன்று மழைத்துளியின் அடக்கத்தையும் பணிவையும் பார்த்தது. அதற்குப் பெருமை நினைத்தது. தன் வாயைத் திறந்து அந்த மழைத்துளியை வாங்கிக்கொண்டது. சில நாட்களில் அந்த மழைத்துளி நல்ல முத்தாக மாறியது. அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.
ஓர் ஆசிரியரிடம் ஓர் இளைஞன் ‘கடவுள் என்பவன் யார்’ என்று கேட்டான்.
முதலில் ‘நீ யார் என்றார் ஆசிரியர்.
அதற்கு அவன் ‘நான் வேலன்’ என்றான்.
அது உனது பெயர். உண்மையில் நீ யார்?
நான் ஒரு மனிதன்.
அது உனது மனித உடம்பு. நீ யார்?
இது என்ன கேள்வி? எனது பெயரைச் சொன்னாலும் உடம்பைச் சொன்னாலும் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்களே ?
இந்த உடல் உனது பெற்றோர் தந்தது. பெயரும் அவர்கள் வைத்ததே. அப்படியானால் நீ யார்?
‘எனக்கு குழப்பமாக உள்ளது…நான் யார் என்று தெரியவில்லை?
‘உனக்கே நீ யார் என்பது தெரிவில்லை அப்படியிருக்க கடவுள் யார் என்பது எப்படித் தெரியும்?’
‘முதலில் உன்னை நீ அறிந்து கொள். பிறகு கடவுளை அறிந்து கொள்ள இயலும்’ என்றார் ஆசிரியர்.
இங்கு தன்னை அறியாமல் வெற்றி என்பது சாத்தியமில்லை. தன்னை அறிந்து கொண்டால் வெற்றிக்கு எல்லை என்பதில்லை.
கோபப்படாதீர்கள்..
யாராவது உங்களை குறை சொன்னால் கோபப்படாதீர்கள்..
அதனை கூர்ந்து கவனியுங்கள்..
நீங்கள் உங்களுக்காக சிந்திக்கவேண்டியதை அவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள்..
உங்கள் நேரத்தை மிச்ச படுத்தியிருக்கிறார்கள்..
தங்களை பற்றி சிந்திக்காமல் உங்களை சிந்திக்கும் மனிதர்கள் மீது கோபம் எதற்கு…?