அதிகாலை நேரம். ஒரு வயதானவர் கடற்கரை ஓரமாக நடந்து வருகிறார். அப்போது அங்கே ஒரு பத்து வயது சிறுவன் கரையிலிருந்து, எதையோ கடலுக்குள் வீசி கொண்டு இருக்கிறான். கொஞ்சம் அருகில் வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது, அந்த சிறுவன் கடல் அலையால் கரைக்கு கொண்டு வரப்பட்டு திரும்பிச் செல்ல முடியாமல் கடற்கரை மணலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நட்சத்திர மீன்களை ஒன்று ஒன்றாக எடுத்து கடலுக்குள் வீசி கொண்டு இருந்தான். அவன் அருகில் சென்ற பெரியவர்,
”தம்பி, என்ன செய்கிறாய்?” என்றார்
அந்த சிறுவன், “இந்த மீன்கள் எல்லாம் கரையில சிக்கி விட்டது. சூரியன் உதித்தால் சூடு தாங்க முடியாமல் சிறுது நேரத்தில் இறந்து விடும். அதனால் தான் கடலுக்குள் வீசுகிறேன்” என்றான்.
“என்னப்பா முட்டாள் தனமான வேலையைப் பார்த்து கொண்டு இருக்கிறாய். கொஞ்சம் கரையைப் பார். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான மீன்கள் கரையில் ஒதுங்கி இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னால் எப்படி காப்பாற்ற முடியும்? இன்னும் அரை மணி நேரத்தில் சூரியன் வரப்போகிறது. உன்னால் எவ்வளவு மீன்களை காப்பாற்றி விட முடியும்?” என்றார்.
“தாத்தா.. நீங்கள் சொல்வது சரிதான். என்னால் 30 நிமிடத்தில் கொஞ்சம் மீன்களை மட்டுமே காப்பாற்ற முடியும். உங்களை பொறுத்த அளவில், இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், காப்பாற்றப்பட்ட ஒவ்வொரு மீனுக்கும் இது மிகப்பெரிய விஷயம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் மீன்களை எடுத்து வீச ஆரம்பித்தான்.
பதில் பேச முடியாமல் அந்த சிறுவனை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்த பெரியவர் தன்னையும் அறியாமல் மணலில் சிக்கியிருந்த மீன்களை எடுத்து ஒவ்வொன்றாக கடலுக்குள் வீச ஆரம்பித்தார்.இது எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கதை. ஒரு சின்ன உதவியோ இல்லை தகவலோ மற்றவர்கள் பார்வையில் மிகச் சாதாரணமாகப் பட்டாலும் அந்த உதவியை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு அது மிகப் பெரிய விஷயம்.
ஒரு சின்ன கதை:
ஒரு முறை ஒரு அரசர் தன் அரசவையில் ஒரு மிகப்பெரிய பாராங்கல்லை வைத்துவிட்டு, இதை யார் தூக்குகின்றனரோ அவருக்கு நூறு பொற்காசுகள் வழங்கப்படும். அப்படி தூக்க முயன்று தோற்றுவிட்டால் மூன்று கசையடி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். அனைவரும் அந்தக் கல்லின் அளவைப் பார்த்து பயந்து “இவ்வளவு பெரிய கல்லை எப்படி நம்மால் தூக்க முடியும்?” என்று போட்டியில் கலந்து கொள்ளவே வரவில்லை.
பல நாட்களாக கல் அப்படியே இருந்தது. அப்போது வந்தான் ஒரு இளைஞன் நான் தூக்குகிறேன் என்று. அவனைப் பார்த்து வியந்த அரசர் “இளைஞனே உன்னைப் பார்த்தால் அவ்வளவு பலமுள்ளவனாகவும் தெரியவில்லை. அந்தக் கல்லின் அளவைப் பார்த்தாயா? அதை உன்னால் தூக்க முடியும் என்று நம்புகிறாயா இங்கு யாருக்குமில்லாத தைரியம் உனக்கு மட்டும் எப்படி வந்தது?” என்றார்.
அதற்கு அந்த இளைஞன் “என் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது அரசே. என்னால் இந்தக் கல்லை தூக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படியே முடியாவிட்டாலும் என்ன, மூன்று கசையடிதானே, வாங்கிக் கொள்கிறேன்” என்றான்.
சரி ஆகட்டும் பாராங்கல்லை தூக்கிவிட்டு பொற்காசுகளை வாங்கிக்கொள் அல்லது கசையடி உனக்காக காத்திருக்கிறது என்றார் அரசர். அனைவரும் கூடி நிற்க இளைஞன் அந்தப் பாராங்கல்லை நெருங்கி இரண்டு புறமும் கைவைத்து முழுபலத்தையும் கொண்டுதூக்க, கல் சற்று கூட கனமில்லாமல் இருக்க, டக்கென்று அதை தலைக்கு மேல் தூக்கினான். அப்போது தான் தெரிந்தது அது பாராங்கல் அல்ல வெறும் பாராங்கல் போல வடிவமைக்கப்பட்ட ஒரு பஞ்சுமூட்டை என்று.
மக்கள் அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்க, மன்னர் கைதட்டி சிரித்துக் கொண்டே கீழிறங்கிவந்து இளைஞனைப் பாராட்டினார். “எனது நாட்டுமக்களின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் சோதித்துப்பார்க்கவே இப்படிச் செய்தேன். கல்லின் அளவை பார்த்து பயந்து நம் நாட்டு மக்கள் ஒருவர் கூட இதை தூக்க முயற்சி கூட செய்து பார்க்கவில்லை. நல்ல வேளை நீயாவது தைரியமாக வந்தாயே” என்று கூறி நூறு பொற்காசுகளை அந்த இளைஞனுக்கு அளித்தார்.