மஹாபாரதத்திலிருந்து ஒரு சின்ன சம்பவம்..
கெளரவர்களுக்கு பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் மேல் எப்போதும் பொறாமை உண்டு. பொறாமைக்கு காரணம் அவர்களுடைய குரு துரோணாச்சாரியர் அர்ஜுனன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதே. இதனை அவர்களின் குருவும் அறிவார். கௌரவர்களின் இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்கு உணர்த்த ஒரு உபாயம் கண்டு பிடித்தார்.
துரோணர் எப்பொழுதும் மாணவர்களுடன் அருகில் உள்ள ஆற்றினில் குளிப்பது வழக்கம். அன்று குளியல் எண்ணையை வேண்டுமென்றே ஆசிரமத்தில் விட்டுச் சென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், அர்ஜுனனை ஆசிரமத்திற்கு சென்று எண்ணையை எடுத்து வர சொன்னார்.
அர்ஜுனன் சென்றவுடன் துரோணர் ஒரு மந்திரம் சொல்லி ஓர் அம்பினை எய்தினார். அந்த அம்பு அருகில் இருந்த ஓர் அரச மரத்தில் உள்ள அனைத்து இலைகளிலும் துளையிட்டு துரோணரிடமே வந்து சேர்ந்தது. அனைவரும் வியப்புடன் பார்த்து கொண்டிருக்கையில், துரோணர் அந்த மந்திரத்தை ஓர் ஓலைச் சுவடியில் எழுதி வைத்தார்.
அர்ஜுனன் திரும்பி வர நேரம் ஆனதால், மாணவர்கள் அனைவரும் விளையாடச் சென்றனர். சிறிது நேரம் கழித்து அர்ஜுனன் எண்ணையுடன் திரும்பி வரவே, அனைவரும் எண்ணையை எடுத்துக் குளிக்கச் சென்று விட்டனர்.
குளித்தவுடன் குரு தியானத்தில் இருந்தார். மாணவர்கள் அனைவரும் மறுபடியும் விளையாடச் சென்றனர். சிறிது நேரம் கழித்து ஆசிரமத்திற்கு செல்லலாம் என்று கிளம்பும்போது, அந்த அரசமர இலையில் இரண்டு துளைகள் இருப்பதை பார்த்தார் துரோணர்.
இன்னொரு துளையினை யார் செய்தது என்று கேட்டார். அர்ஜுனன் முன் வந்து, “குருவே, குளித்து வந்தவுடன், அரச மர இலையில் துளை இருப்பதை பார்த்தேன், உங்களுடய வில் மற்றும் அம்பு அருகில் ஓர் ஓலை சுவடியில் மந்திரம் எழுதி இருப்பதைப் பார்த்தேன். நான் இல்லாத சமயத்தில் நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லி கொடுத்திரூப்பீர்கள் என்று எண்ணி நானும் முயற்சி செய்தேன்” என்றான்.
துரோணர் சிரித்துக்கொண்டே “இது தான் ஓர் நல்ல மாணவனுக்கு அடையாளம். எந்த ஒரு விஷயத்தையும் இன்னொருவர் சொல்லி தர வேண்டிய கட்டாயம் இல்லை. மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட மாணவர்களை அனைவரும் விரும்புவார்” என்றார்.