Home » சிறுகதைகள் » வாரிசாகத் தகுதியானவன் யார் ?
வாரிசாகத் தகுதியானவன் யார் ?

வாரிசாகத் தகுதியானவன் யார் ?

விக்கிரமாதித்தன் கதை

வாரிசாகத் தகுதியானவன் யார் ?

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து கொண்டுசெல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா? நீவீரமும், பராக்கிரமும் மிகுந்தவன் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு மன்னனுக்கு வீரமும், பராக்கிரமும் எவ்வளவு தேவை என்று உன்னைப்பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஆனால் அறிவில் சிறந்தவர்கள் என்றுகருதப்படுபவர்கள் சிலருக்கு இந்த சாதாரண உண்மை புலப்படுவதில்லை.அவர்களுடைய தவறான ஆலோசனைகளினால் நாட்டிற்கே பெரிய தீங்கு உண்டாகக் கூடும்.

அத்தகைய அறிவிற்சிறந்த ஒருவரின் கதையைக் கூறுகிறேன் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று. மன்னர் சுதட்சிணர் ஆட்சிக்காலத்தில் நாட்டில் சுபிட்சம் நிலவியது. மக்கள் மனநிறைவுடன் வாழ்க்கை நடத்தினார். ஆனால் மன்னருக்கு வாரிசு இல்லாதது ஒரு பெருங்குறையாக இருந்தது. தனக்குப் பிறகு ராஜ்யத்தை ஆளப்போவது யார் என்று பெருங்கவலையில் மூழ்கிய மன்னர் ஒருநாள் தன் முதன்மந்திரி கங்காதரரை அழைத்து அதைப்பற்றி ஆலோசித்தார்.

“மந்திரியாரே! இந்த ராஜ்யத்தை நான் ஒழுங்காக நிர்வாகம் செய்து வருகிறேன். ஆனால் எனக்குப் பிறகு யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள் என்பது எனக்குப் பெரும் கவலையை அளிக்கிறது. எனக்குப்பிறகு சிம்மாசனத்தில் அமரப் போவது யார் என்பதை இப்போதே நாம் தீர்மானித்தால் நல்லது. ராணியைக் கலந்து ஆலோசித்தால் அவள் தன்னுடைய உறவினர்களின் பிள்ளைகள் யாரையாவது தத்து எடுத்துக் கொள்ளுமாறு சொல்கிறாள். அதில் எனக்கு விருப்பமில்லை. எனக்குப் பிறகு முடிசூட்டிக் கொள்பவன் வீரதீரப் பராக்கிரமனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீரனை நாம் எப்படித் தேடுவது?” என்றார்.

அதற்கு மந்திரி, “பிரபு! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நமது தலைநகரில் உள்ள குருகுலத்தில் வித்யாசாகர் அவர்கள் பல க்ஷத்திரிய மாணவர்களுக்கு வில் வித்தை, வாட்போர், மல்யுத்தம் ஆகியவற்றையும், ராஜாங்க நிர்வாகத்தையும், போர்த்தந்திரங்களையும் கற்பித்து வருகிறார். அவரிடம் சென்றால், நம் ராஜ்யத்தின் எதிர்கால வாரிசை நாம் தேர்ந்தெடுக்கலாம்” என்றார். மன்னருக்கு அது சரியான யோசனை என்ற தோன்றவே, இருவரும் மறுநாளே குருகுலத்திற்குச் சென்று, வித்யாசாகரை சந்தித்து, தாங்கள் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினர்.

அதற்கு குரு வித்யாசாகர், “மகாராஜா! நீங்கள் சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறீர்கள். விஜயதசமியையொட்டி, குரு குலத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தப் போட்டிகளைப் பார்வை இட்டால், உங்களுக்குத் தேவையான வீரனை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்” என்றார்.

மறுநாள், போட்டியில் பங்கேற்ற மூன்று பேர் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டும் என குரு உத்தரவிட்டார்.இதன் படி தங்கள் பயணத்தைத் தொடங்கிய மூன்று பேரும் ஒருமாதப் பயணத்திற்குப்பின் குருகுலத்திற்குத் திரும்பினர். அவர்கள் திரும்பி வந்தபோது, குருகுலத்தில் குரு வித்யாசாகருடன், மன்னரும், மந்திரியும் அமர்ந்திருந்தனர்.

அவர்களை வரவேற்ற குரு, மூவரையும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பயண அனுபவங்களைக் கூறும்படிச் சொன்னார். முதலில் முன்வந்த வில்வித்தை நிபுணனான ஜெயன் “குருவே! நான் வடக்குதிசையை நோக்கிப் பயணமானேன். வழியில் எனக்கு எந்தவிதத் தடங்கலும் ஏற்படவில்லை. சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் தென்பட்டனர். ஆனால் நம் ராஜ்யத்து எல்லையில் உள்ள காட்டுப்பிரதேசத்தில் நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. அங்கு சில இளைஞர்கள் இரகசியமாக ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.

மறைந்திருந்துத் தாக்குவது, அரசாங்க ஆயுதங்களைத் திருடுவது, ரகசிய ஆயுதத் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞர்கள் பக்கத்து ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் அந்த இளைஞர்களை யாரோ ஒருவன் சைகாட்டி அவ்வாறு ஆயுதப் பயிற்சி அளிப்பதைப் பார்த்தேன். நமது ராஜ்யத்தில் இவ்வாறு தீயசக்திகள் உருவாவதைப் பொறுக்க முடியாமல், இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற பயிற்சியாளனை அம்பெய்திக் கொன்று விட்டேன். என்னுடைய கடமையை நிறைவேற்றியதற்காகப் பெருமைப்படுகிறேன்” என்றான்.

அடுத்து வந்த விஜயன், “நான் தென்திசை நோக்கிப் பயணம் சென்றேன். தென்திசைப் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு சரியான முறையில் இல்லை என்பதை அறிந்தேன். அங்குள்ள அரசாங்க அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அறிந்தேன். எங்கு பார்த்தாலும் வழிப்பறி கொள்ளைகள் நடந்து கொண்டிருந்தன. அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொள்ளைக்காரர்களை எதிர்த்துப் போரிட தைரியம் இல்லை. அந்த நிலைமையை மாற்ற எண்ணிய நான் அங்கிருந்த இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு வாள் சண்டை கற்றுக் கொடுத்தேன். இப்போது அங்குள்ள இளைஞர்கள் எனது முயற்சியினால் வீரம் மிகுந்தவர்களாக மாறிவிட்டனர்.” என்றான்.

அடுத்து, மூன்றாமவன் கௌதமன் முன் வந்து, “நான் கிழக்கு திசையில் பயணம் சென்றேன். ராஜ்யத்தின் கிழக்குப் பகுதி சுபிட்சமாகவும், அமைதியாகவும் இருந்தது. அதனால் என்னுடைய போர்க்கலைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒருநாள் அங்குள்ள கோயில் ஒன்றில் வடித்திருந்த சிற்பத்தின் விரல்களுக்குள் ஒரு பல்லி சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. எப்படி சிக்கியது என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடத்தை விட்டு மீள முடியாமல் தவித்ததைக் கண்டேன். அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். மற்ற பல்லிகள் தங்கள் வாயில் உணவைக் கவ்விக் கொண்டு வந்து சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு அளித்துக் கொண்டிருந்தன. ஓரறிவு படைத்த சாதாரண பல்லிகளுக்குள் நிலவிய அந்த நல்லிணக்கத்தைக் கண்டு வியந்த நான், ஒரு சிற்பியை வரவழைத்து, சிற்பங்களின் விரல்களை உடைத்து, அது தப்பிக்க வழி செய்தேன்.

திரும்பி வரும் வழியில், ஒரு காட்டில் கிணற்றினுள் ஒரு யானைக் குட்டி விழுந்திருந்ததைக் கண்டேன். நான் காட்டுவாசி மக்களை அங்கு அழைத்து வந்து, அந்த யானைக் குட்டியை கிணற்றிலிருந்து வெளியே மீட்க ஏற்பாடு செய்தேன். பிறகு, அந்த ஆட்களிடம் பல்லிகள், யானைகள் போன்ற மிருகங்கள் தங்களுக்குள் உதவி செய்து கொள்வதை சுட்டிக்காட்டி, மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்தேன். பொறாமை, பேராசை ஆகியவற்றின் காரணமாக, மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது எத்தகைய அறிவீனம் என்பதை எடுத்துரைத்தேன்” என்றான்.

உடனே, மன்னரும், மந்திரியும் தனியே சென்று தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். தாங்கள் தேடிக் கொண்டிருந்த வீரமும், பராக்கிரமும் ஜெயனிடமும், விஜயனிடமும் பரிபூரணமாக இருந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவனையே இளவரசனாகத் தேர்வு செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தபின், குரு வித்யாசாகரின் கருத்தினை அறிய அவரிடம் சென்றனர்.

வித்யாசாகர் மன்னரை நோக்கி, “மகாராஜா! என்னுடைய அபிப்பிராயப்படி மூவரில் கௌதமன்தான் உங்களுடைய வாரிசாகத் தகுதியானவன். அவனிடம் வீரம், பராக்கிரமம் ஆகியவற்றுடன், மனிதகுலத்திற்குத் தேவையான ஜீவகாருண்யமும் நிரம்பியுள்ளது. அத்தகைய ஜீவகாருண்யச் சிந்தனை உள்ளவனே எதிர்கால மன்னனாகத் தகுதியானவன்” என்றார்.
குருவின் கருத்தினைக் கேட்ட மன்னரும், மந்திரியும் மிகுந்த ஆச்சரியப்பட்டனர். நீண்டநேரம் யோசித்த பிறகு மன்னர், “குருதேவரே! உங்கள் கருத்தினை ஏற்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மந்திரியுடன் திரும்பிச் சென்றார்.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! மிகவும் அறிவாளியான குரு வித்யாசாகர் சரியானபடி முடிவு செய்வார் என்று நம்பி அவரை மன்னர் அணுகியது எவ்வளவு தவறாகப் போயிற்று? வீரதீர சாகசங்கள் புரிந்த ஜெயனையும், விஜயனையும் ஒதுக்கிவிட்டு, புத்தரைப் போல் ஜீவகாருண்யத்தை போதித்த கௌதமனைப் போய் யாராவது இளவரசனாக சிபாரிசு செய்வார்களா? இவை யாவும் தெரிந்தும், மன்னர் ஏன் குருவின் முடிவை ஏற்றுக் கொண்டார்? என்

சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “அரசவை ஆட்சி பீடத்தில் அமரப் போகும் இளவரசனுக்கு வீரமும், பராக்கிரமமும் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை! அதைத்தான் மன்னர் சுதட்சிணர் எதிர்பார்த்தார். ஆனால் அவையிரண்டும் மட்டும் ளவரசனிடமிருந்தால் போதாது. மன்னன் என்பவன் யார்? தன் குடிமக்களின் நலத்திற்காக அல்லும் பகலும் பாடுபடுபவனே மன்னன். சட்டம், அமைதியை நிலைநாட்ட எவ்வாறு வீரம் தேவையோ, அவ்வாறு மக்களின் நலம் காக்க நெஞ்சில் ஈரமும் தேவை! ஜெயன், விஜயன் இருவரிடம் வீரத்தை மட்டுமே கண்ட குரு, கௌதமனிடம் வீரத்துடன், ஜீவகாருண்யத்தையும் கண்டார்.

தங்களுக்குள் ஒற்றுமையின்றி சண்டையிடும் மக்களை நல்லிணக்கத்துடன் வாழ, அன்புக்கரம் நீட்டுவதே மேல்! நோய் வந்த பின் சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வருமுன் காப்பது சிறந்ததல்லவா! கௌதமனின் அணுகுமுறையினால் நாட்டில், அமைதியும், நல்லிணக்கமும் நிலவும் என்பதை குரு புரிந்து கொண்டார். மற்றொன்றையும் நோக்க வேண்டும். தனத வீர, தீரப் பராக்கிரமத்தைக் காட்ட கௌதமனுக்குப் பயணத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லையே தவிர, அவனுக்கு வீரமேயில்லை என்று சொல்ல முடியாதே! அவன் சிறந்த மல்யுத்த வீரன்! தேவைப்படும் போது வீரத்தைக் காட்டவும், மற்ற சமயங்களில் அன்பினைப் பொழியவும் அவனால் முடியும் என்பதால் தான் குரு அவனைத் தேர்வு செய்தார். நீண்ட சிந்தனைக்குப் பிறகு, மன்னருக்கு அது விளங்கவே அவரும் குருவின் கருத்தினை ஒப்புக்கொண்டார்” என்றான்.

விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top