ஒரு அலுவலக மேளாளர் ‘A” என்ற பணியாளரை ஒரு மிக அகலமான, வேகமான நீரோட்டம் உள்ள ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, ஆற்றைக் கடந்து சென்று மறுகரையில் இருக்கும் ஒரு பெட்டியை எடுத்துவருமாறு பணிக்கிறார். மேலும் அந்த வேலையை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறார்.
உடனே ‘A” என்பவர் பத்து ரூபாய் செலவு செய்து அங்கிருக்கும் படகுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி மறுகரைக்குச் சென்று பெட்டியை 55 நிமிடத்திற்குள் எடுத்து வந்துவிடவும், மேலாளர் “நன்று” என பாராட்டுகின்றார்.
மறுநாள் மேலாளர் அதே வேலையை ‘B’ என்ற பணியாளனுக்கும் அளிக்க, அவன் ஒரு மோட்டர் படகை 50 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து முப்பது நிமிடத்தில் பெட்டியை எடுத்து வந்து விட, மேலாளர் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்.
அடுத்த நாள் ‘C’ என்ற பணியாளருக்கும் அதே வேலை வழங்கப்பட, அவர் முதலில் ‘A’, ‘B’ என்ற இருவர் இதே வேலையை எப்படிச் செய்தார்கள் என அறிகிறார். அவர்கள் செலவிட்ட நேரத்தையும், செலவிட்ட தொகையையும் அவர்கள் செய்த தவறுகளையும் ஆராய்ந்து பார்த்தபின், இந்த வேலைக்கு (Standard Operating Procedure) நிலையான செயல்பாட்டு முறை அவசியம் என அறிந்து 25 ரூபாய் மதிப்பில் நிலையான செயல்பாட்டு முறையையும் வகுத்து பெட்டியை எடுத்துவந்து மேலாளரிடம் ஒப்படைக்கிறார். மேலாளர் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்.
மறுநாள் அதே வேலையை மேலாளர் ‘D’ என்ற பணியாளனுக்கும் அளிக்கிறார். ஆனால் அவனோ, மேல் கூறியவர்கள் போல் எதுவும் செய்யாமல், அந்த ஆற்றுக்கு குறுக்கே படகு ஓட்டுபவரிடம் பெட்டியை அக்கரையிலிருந்து கொண்டு வர வெறும் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசி முடிக்கிறார். இப்பொழுது செலவும் குறைந்தது. தேவையில்லாமல் ஒரு பணியாளரின் வேலையும் இந்த பெட்டியை எடுப்பதற்காக வீணாகாமல் இருந்தது. மேலாளர் செம ஹேப்பி அண்ணாச்சி.
A, B, C மூவரும் என்ன நினைத்தனர். பெட்டியை நாம் தான் சென்று எடுத்து வர வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் உண்மையில் நாம் செய்யவேண்டிய வேலை பெட்டியை கொண்டு வரவேண்டியது தான். அதனை நாம் தான் சென்று எடுத்து வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட்டவர் D.
இப்பொழுது இன்னொரு சிறு கதை.
ஒரு வயதான பெரியவரிடன் வியாபாரி ஒருவர் பெருந்தொகையைக் கடனாகப் பெற்றுக்கொண்டு திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். பல முறை கேட்டும் வியாபாரி பணம் தராததால், அந்த வயதானவர் ஒரு மாற்று வழி கூறினார். வாங்கிய பணத்திற்கு பதிலாக உன்னுடைய பெண்ணை எனக்கு திருமணம் முடித்துக் கொடுத்துவிடு என வியாபாரியிடம் கேட்க வியாபாரியும் அவரது மகளும் சம்மதிக்க வில்லை.
மாறாக வேறு ஒரு வழியையும் அந்த வயதானவர் கூறினார். அதாவது ஒரு பையில் கருப்புக் கல் ஒன்றையும், வெள்ளைக்கல் ஒன்றையும் எடுத்துப் போடுவேன். உன் மகள் அதிலிருந்து ஒரு கல்லை எடுக்கட்டும். அது கருப்புக்கல்லாக இருந்தால் அவள் என்னை மணம் புரிந்து கொள்ளட்டும். உன் கடனை தள்ளுபடி செய்கின்றேன். ஒரு வேளை வெள்ளைக்கல்லாக இருந்தால் என்னை மணம் முடிக்கத் தேவையில்லை உன் கடனையும் தள்ளுபடி செய்து விடுகின்றேன். ஒரு வேளை உன் மகள் இந்த விளையாட்டிற்கு வரவில்லையென்றால் வாங்கிய பணத்திற்காக நீ சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் கூறினார். பட் அந்த டீலிங் அவங்களுக்கு பிடிச்சிருந்ததால வியாபாரியும் சரி என்றார்.
அந்த குறும்புக்காரப் பெரியவர் வியாபாரியையும் மகளையும் ஒரு ஆற்றங்கரக்கு அழைத்துச் சென்று ஒரு பையில் இரு கூழாங்கற்களை எடுத்துப் போட, அந்த பெண் மட்டும் அவர் ஒரு வெள்ளை ஒரு கறுப்பு கல்லுக்கு பதிலாக இரண்டு கறுப்புக் கற்களையே உள்ளே எடுத்து போடுவதைக் கவனித்து விட்டாள்.
இப்போது என்ன செய்வது? கல்லை எடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் தந்தை சிறை செல்ல வேண்டும். துணிந்து கல்லை எடுத்தால் கண்டிப்பாக அது கருப்புக் கல்லாகத்தான் இருக்கும். உண்மையைக் கூறி பெரியவரின் முகத்திரையை கிழிக்கலாம் என்றாலும், அது அவருக்கு மேலும் கோபத்தை உண்டாக்கும் என எண்ணி யோசித்தாள்.
நன்கு யோசித்து, பின்னர் பைக்குள் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றிற்குள் விட்டெறிந்தாள். பின்னர் பையிலிருந்த கருப்புக் கல்லை பெரியவரிடம் காண்பித்து “பார்த்தீர்களா நான் வெள்ளைக் கல்லைத்தான் எடுத்திருக்கின்றேன்” என கூறிவிட்டு சந்தோஷமாக தந்தையைக் கூட்டிச்சென்றாள்.
முதல் கதைக்கும் இரண்டாவது கதைக்கும் உள்ள ஒரு சிறுவித்யாசம் இரண்டாவது கதையில் அந்தப் பெண் வேறு வழியே இல்லை என்ற தருணத்திலேயே வித்யாசமாக யோசித்து ஒரு முடிவெடுத்தாள். ஒரு வேளை பெரியவர் கல்லை மாற்றியதை பார்த்திராவிட்டால் கண்டிப்பாக அப்படிஒரு யோசனை தோண்றாமல் சிக்கித்தான் இருக்க வேண்டும்.