Home » பொது » தற்கொலை – ஒரு பார்வை!!!
தற்கொலை – ஒரு பார்வை!!!

தற்கொலை – ஒரு பார்வை!!!

தற்கொலை – ஒரு பார்வை

தற்கொலை தொடர்பான பண்பாட்டுப் பார்வைகள் பலவாறாக உள்ளன. மதங்கள் தற்கொலையைக்  கடவுளுக்கு எதிரான செயலாகவும் மரியாதை அற்றதாகவும்  கருதுகின்றன.  தோற்பதனை விடத் தற்கொலை செய்வது ஜப்பானிய சாமுராய்  மரபில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  கணவனை இழந்த பெண்கள் கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இந்தியாவில்இருந்தது. இதனை  உடன்கட்டை ஏறுதல் என்பர்.  தன் கழுத்தை தானே அறுத்துப்  பலியிட்டுக்  கொள்ளும்   மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வந்திருக்கிறது.
இதற்குப் பெயர் : நவகண்டம் .
பொதுவாக, பழங்குடியினர் சமுதாயங்களில் தற்கொலைகள் மிகக் குறைவாகவே நிகழ்கின்றனவாம்.தங்களுடைய பிழைப்புக்கே அவர்கள்  கஷ்டப்படும் போது, வாழ்க்கையை முடித்துக் கொள்வது எப்படி என்று சிந்திக்க நேரமேது.

தன் நாட்டிற்காகவோ  விடுதலைக்காகவோ  தன் உயிரைத் தானே ஒருவன் விருப்புடன் அர்ப்பணிப்பதைத்  “தற்கொலை” என்று கூறாமல் “தற்கொடை” என்று குறிப்பிடுவது பொருத்தமானது என்று வாதிடுபவர்களும் உண்டு.

சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய, வீரமங்கை வேலு நாச்சியாரிடம் பணிப்பெண்ணாக இருந்த  குயிலி என்பவரும், அதை ஒட்டிய கால கட்டத்தில், நெல்லைச் சீமையில் கட்டபொம்மனிடம் தளபதியாகயிருந்த  வீரன் சுந்தரலிங்கம் என்பவரும் நாட்டின் விடுதலைப் போரில் தம்மையே உயிர்த்  தியாகம் செய்தவர்கள்.
பல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியைத்  தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக் கிடங்கில் தூக்கு போட்டுத்  தற்கொலை செய்து கொண்டதாகச்  சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது.

தற்கொலை என்பது உலகத்தில் பொதுவாகக்  காணப்படுகின்ற  மிகவும்  குறைவாக மதிப்பிடப்பட்ட சமூக நலப் பிரச்சனையாகும்.  பிற பிரச்சனைகள் போல இதற்கு  முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.  நோய், விபத்துக்கள்,போர்கள் இவற்றால்  இறப்பவர்களுக்குச் சமனாக அல்லது அதற்கும் அதிகமாகத்   தற்கொலையினால் தற்பொழுது இறப்பவர்களின் எண்ணிக்கை இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் இதயநோய், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் – போன்ற நோய்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க உலக அளவில் ஒரு நாளைத்  தேர்ந்தெடுத்து இருப்பதுப்போல ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் நாள் World Suicide Prevention Day (WSPD)  தற்கொலை தடுப்பு நாள் கொண்டாடப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு துவங்கி ஒவ்வொரு ஆண்டும் “தற்கொலையைத்  தடுப்போம்”,” நம்பிக்கையை விதைத்து உயிர்களைக் காப்போம்”,”விரிவாகச்  சிந்திப்போம், நாட்டளவில்  திட்டமிடுவோம், ஊர்களில் செயல்படுத்துவோம் “, “பலதரப்பட்ட கலாச்சாரங்களில் தற்கொலை தடுப்பு”, “குடும்பங்கள், அமைப்புகள், தற்கொலைகள் “,” உலகளாவிய  அளவில் நம்பிக்கை ஒளி ஏற்றி தற்காப்புகளை பலப்படுத்துவோம்” போன்ற பலபல தலைப்புகளில் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தற்கொலை தடுப்பு அகில உலக அமைப்பு.

மனிதனுக்கு எங்கே இருந்து வருகிறது தற்கொலை எண்ணம்? 
அதிகார நாட்டம், பேராசை, சுயநலம், பொறாமை, பொறுமையின்மை, சிந்தித்துச் செயல்படாமை, மூடநம்பிக்கை, உணர்ச்சி வசப்பட்டு செயல்படல்,  ஓய்வின்மை, தெளிவின்மை, இலக்கின்மை,  சரியான வழிகாட்டலும் அறிவுறுத்தலும் இன்மை, தன்னம்பிக்கை யின்மை, உள்ள உறுதியின்மை, தோல்வியில் துவளல், சோதனைகளை எதிர்கொள்ளும் திடமின்மை, விடாமுயற்சியின்மை, விமர்சனங்களுக்கு அஞ்சுவது, இழப்பைத் தாங்கும் உறுதியின்மை போன்றவை ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.
உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? இவர்கள் நினைக்கின்றார்கள் பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது என்று .  பிரச்சினைக்குத்  தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது  ஏழைக்குப்  பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை.  பெற்ற மக்களால்  சிலருக்குப் பிரச்சினை ; மக்களைப்  பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள் சிலருக்கு .ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது.
நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாகச்  சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. Imipramine receptors  என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது இவை குறைவாக இருப்பது  தெரியவந்துள்ளது. செரடோனின் சுரத்தலைத்  தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணத்தைக்  குறைக்கலாமாம்.உலகத்  தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு,  பத்தில் ஒரு பங்கு ஆகும்.
இந்தியச்  சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில்  ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்குச் சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய் நிகழ்கின்றன. தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் 35 வயதுக்குக் குறைவானவர்கள் –    அதிகமானோர் பெண்கள். ஆனால் உயிர் நீப்போர் அதிகமானோர் ஆண்கள். குடும்ப, சமுதாய, பொருளாதார காரணங்களால் வயது வந்தவர்கள்கூட இம்முடிவை எடுப்பது வேதனை அளிக்கிறது.

இன்றைக்கு ஆரம்பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை  தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர்.  காதல் தோல்வியோ தேர்வில் தோல்வியோ  மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மரணத்தைத்தான்.மதிப்பெண் குறித்த கண்ணோட்டத்துடனேதான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வாங்கினால்தான் மதிப்பு என்று பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம்.
நூறு சதவிகித தேர்ச்சிக்காகப்  பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் அனைத்தும் சேர்ந்துதான் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன .கல்விக் கூடங்களில் தோல்வியைத்  தைரியமாக எதிர்கொள்வது குறித்த  எதார்த்தத்தைக்  கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்குக்  காரணம்.கல்விக் கூடங்களில் சூழ்நிலை மாறினாலே மாணவர்களின் நிலை மாறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

வறுமை, பெரும் கடன் சுமைகளின் காரணமாகத்  தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாகத்  தலையீடு செய்து, தொடரும் இந்த அவல நிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
பாலியல் வன்முறையால் இந்த முடிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கூடிவரும் இந்த நாளில் தக்க பாதுகாப்பு அவர்களுக்குத்  தரவேண்டியது சமூகத்தின் கடமையாகும்.

தற்கொலை முயற்சி செய்பவர்கள் எல்லோரும் மன வளர்ச்சி குறைந்தவர்கள் அல்ல.நல்ல மன நலம் உள்ளவர்களும் கூட, தாங்கள் அனுபவித்து வரும் துக்கத்திலிருந்து, அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற தற்கொலையை எளிமையான வழி என்று நினைக்கிறார்கள்.

இது கொடுமையான மூர்க்கத்தனமான செயலாகும்.இது சுய நலத்தின் உச்சம்.தற்கொலை முடிவு என்பது நொடிப்பொழுது உணர்ச்சி உந்தலின் விளைவாகும். புரிய அவகாசம் கொடுக்காத இடத்தில் தான் விரக்தி ஏற்படுகிறது. விரக்தி தான் மேலும் சிந்திக்க விடாது மரணப் பள்ளத்துள்  தள்ளுகிறது. இது கோழைத்தனமான முடிவு என்று சொல்கிறோம். ஆனால் தற்கொலை செய்துகொள்ள தைரியம் வேண்டும்.

தற்கொலைக்கு முயல்பவர்கள் கட்டாயமாக அது பற்றித்  தன் நெருங்கிய தோழர்களிடம் கோடி காட்டுகிறார்கள்  –  “நான் இறந்திருக்கலாம்” என்றோ “நான் போன பிறகுதான் என் அருமை புரியும்” என்பது போலவோ இவர்கள் பேசத் துவங்குகிறார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  மன வலியிலிருந்து மீள வேறு வழி இருப்பது தெரிந்தால் தற்கொலை முயற்சி செய்யும் ஒவ்வொருவரும் வாழவே விரும்புவார்கள் என்பதே உண்மை.

தற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு நாம்  எப்படி உதவலாம்?
அவர்கள் தங்கள் துக்கத்தையோ ஏமாற்றத்தையோ வெளியிடும் போது விமரிசனம் செய்யாமல் முழுக் கவனத்துடன் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளை மதியுங்கள்.தனக்கென ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தற்கொலை முயற்சியில் இருந்து ஒருவரை மீட்கும்.

அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை காப்பாற்றுங்கள்.  அவரது ரகசியம் உங்கள் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படாது என்றும்  எந்தச் சூழ்நிலையிலும் உங்களது நட்பு மாறாது என்றும் நம்பிக்கையும் உத்திரவாதமும்  கொடுங்கள்.
அவரிடம் நீங்கள் எத்தனை அன்பும் அக்கறையும் உடையவர் என்பதை வெளிப் படுத்துங்கள். உங்கள் கனிவும் கருணையும் நிறைந்த சொற்கள் அவரது மனப் புண்ணுக்கு ஆறுதல் அளிக்கட்டும்.
முடிந்து போனவற்றைக் கிளறாதீர்கள். முடிந்தவை முடிந்தவைகளாகவே இருக்கட்டும்.புதிய கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு உதவுங்கள்.
ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மனித நேயம் வேறு ஏதாவது உண்டா?இது போன்றவைகளின்  வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.
மேற்கூறிய முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றால் கவுன்சிலிங் தரும் அமைப்புகளை நாடுங்கள்.
சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற   ஊடகங்கள் தற்கொலை நிகழ்வுகளை  வெளிச்சம் போட்டு காட்டாமல் மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக உதவ வேண்டும்.

தற்கொலையில் வெற்றிபெறாமல் காப்பாற்றப் பட்டவர்களின் நிலை, முந்தியதைக்காடிலும் பரிதாபமானது – சமூகத்திலும் குடும்பத்திலும், மற்றவரைச் சார்ந்தே இருக்க வேண்டிய அவலம்.
தற்கொலை இல்லாத  சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான வேலைதான்.“அரிது அரிது மானிடரைப் பிறத்தல் அரிது”.இயற்கையில் மலர்வதும் உதிர்வதும் யதார்த்தமென்றால்  பிறப்பதும் இறப்பதும் இயற்கையாகவே  நிகழவேண்டுமல்லவா? இறப்பு அது வரும்போது வரட்டும். அதுவரை வாழ்ந்துக்கொண்டிருப்போம்.
தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, சுயநலம், என தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிட்டு  மற்ற மனிதர்களோடு இணங்கி, அவர்களையும் நம்மைப்போலவே எண்ணி, மதித்து, மற்றவர்களையும் வாழ்வித்து நாமும் வாழ்வோம்.வாழ்வது ஒரு முறைதான். வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்.
சத்குரு:

நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, என்னையும்விட சிறிய பெண்ணொருத்தி திடீரென இறந்துபோனது என்னை யோசிக்க வைத்தது. மரணம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். மரணத்தை எப்படி நிகழ்த்திக் கொள்வது என்று ஆராய்ந்து, தூக்க மாத்திரைகள் சேர்த்தேன். ஓர் இரவு உணவு உண்ணாமல், அத்தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, எதிர்பார்ப்புடன் என் படுக்கையில் படுத்துக் கொண்டேன். மரணம் பற்றி நான் ஏதும் புரிந்து கொண்டு விடவில்லை. எனக்கு நீண்ட தூக்கம் தான் வாய்த்தது. ஆம், மூன்று நாட்கள் கழித்து, ஆழ்ந்த மயக்கத்தில் ஒரு மருத்துவமனையில் கண்விழித்தேன்.

தற்கொலை முயற்சிக்குப் பெரிய அளவில் துணிச்சல் அவசியம் இல்லை. அபரிமிதமான முட்டாள்தனம் இருந்தால்போதும் என்பதை நான் அன்று உணர்ந்தேன்.

‘எதற்காக இந்தத் தற்கொலை முயற்சி?’ என்று எல்லோரும் என்னை துளைத்து எடுத்தார்கள். மரணம் என்ற புதிரின் விடையை அறியவே அப்படிச் செய்தேன் என்று நான் கொடுத்த விளக்கம் எடுபடவில்லை. தற்கொலை முயற்சிக்குப் பெரிய அளவில் துணிச்சல் அவசியம் இல்லை. அபரிமிதமான முட்டாள்தனம் இருந்தால்போதும் என்பதை நான் அன்று உணர்ந்தேன்.

இன்னும் சில வருடங்கள் கழித்து, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட ஓர் இளம் பெண் என்னை யோசிக்க வைத்தாள். அடிப்படையில், புழு, பூச்சி முதற்கொண்டு ஒவ்வோர் உயிரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே முயலும். வாழ்க்கையில் எப்படிப்பட்ட பொறுத்துக் கொள்ளவே முடியாத துன்பம் இருந்திருந்தால், வாழும் ஆர்வம் சிறிதும் கூட இல்லாது, தன் உயிரையே மாய்த்துக் கொள்ள அந்தப் பெண் துணிந்திருப்பாள் என்று பலநாள் யோசித்து இருக்கிறேன்.

தற்கொலைகளுக்கு என்ன காரணம்?

அவமானம், துரோகம், பணம், இழப்பு, தாங்வொண்ணா உடல்வலி, தோல்வி என்று எத்தனையோ காரணங்கள்!

உண்மையில், தோல்வி என்று எதையும் நினைக்கத் தேவையில்லை.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பில் ஒளிரும் இழைக்காக இரண்டாயிரம் வெவ்வேறு மூலப்பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்தார். எதுவும் வேலை செய்யவில்லை.

‘எல்லாம் வீண்’ என்று சலித்துக் கொண்டார் அவருடைய உதவியாளர்.

உங்கள் உயிரை நீங்கள் மாய்த்துக் கொள்வது, ஒரு சிசுவின் உயிரை நீங்கள் பறிப்பதற்கு ஒப்பாகும்.

‘இல்லை. மின்சார பல்புக்கு உதவாது என்று இரண்டாயிரம் மூலப்பொருட்களைப் பற்றி நாம் கற்றிருக்கிறோம்’ என்றார் எடிசன்.வாழ்வை எதிர்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும், இப்படிப்பட்ட தெளிவுதான் தேவை!

மனிதர்கள் மட்டுமல்ல. விலங்குகளும், பறவைகளும் கூட தற்கொலை செய்து கொள்கின்றன என்று உங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கலாம். அசாமில், ஜடிங்கா என்ற மலைப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து தற்கொலை செய்து கொள்கின்றன என்று சொல்லப்படுகிறது. உண்மையில், வீசும் காற்றிலும் பனிமூட்டத்திலும் சிக்கி, திசை பற்றிய கவனத்தை அந்தப் பறவைகள் இழக்கின்றன. மரங்களிலும், பாறைகளிலும் மோதிக் கொண்டு இறக்கின்றன. இது விபத்தே தவிர, தற்கொலை அல்ல என்பது என் எண்ணம்.

பறவை இனத்தில் சில, தங்கள் துணையை இழந்தால், உயிரை விடுவது உண்டு. ஆப்பிரிக்காவில் ஒரு வகை மான் இனம் தன் இணையை இழந்ததும், பட்டினி கிடந்து தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறது. இது காதல் உணர்ச்சியால் அல்ல. தங்கள் துணையுடன் வாழ்க்கையைப் பிணைத்தே உயிர் வாழ்ந்து பழகிவிட்டதால், அந்தக் துணையை இழந்ததும், வாழ்வது பற்றிய குழப்பம் வந்துவிடுவதே இந்த மரணங்களுக்குக் காரணம்.

மனிதர்களிலும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் இந்த ரகம்தான். வேறு ஒருவருடன் பின்னிப் பிணைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது, அவரின்றி வாழத் துணிவில்லாமல் போவதே, இந்த முடிவுக்கு அவரை தள்ளிச் செல்கிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களைக் கண்டனம் செய்ய நான் விரும்புவதில்லை. வாழ்க்கை, அவர்களை எப்படிப்பட்ட விளிம்பிற்குத் தள்ளிச் சென்றிருந்தால், விலைமதிப்பில்லாத உயிரையே போக்கிக் கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கும்!

ஆனால், தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உயிரை நீங்கள் மாய்த்துக் கொள்வது, ஒரு சிசுவின் உயிரை நீங்கள் பறிப்பதற்கு ஒப்பாகும். ஆம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, எதிர்க்கவோ முடியாத ஒன்றைத் தாக்குவது எப்படித் துணிச்சலாகும்?

‘உங்கள் மதத்திற்காக தற்கொலைப் படையில் சேர்ந்தால் சொர்க்கம் நிச்சயம்’ என்று பலரை நம்ப வைத்து, அவரவர் உயிரை அவரவரே விட்டுக் கொடுக்கும் அளவிற்கு அவர்களை தயார் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவரவர் உயிரை மாய்த்துக் கொள்வதோடு அல்லாமல், அப்படி மாய்த்துக் கொள்ளும் நேரத்தில், தம்மோடு சேர்த்து, இன்னும் பல உயிர்களையும் அவர்கள் காவு வாங்குகிறார்கள். வெறுப்பு, காழ்ப்பு இவற்றைக் கொண்டு தங்கள் அமைப்பை இயக்குபவர்கள், இறைவன் பெயரைச் சொல்லி மற்றவரை அழிப்பதற்கு, தங்கள் உயிரைவிடவும் தயாராக இருக்கிறார்கள்.

உங்களுடைய உயிராக இருந்தாலும் சரி, அடுத்தவர் உயிராக இருந்தாலும் சரி, அந்த உயிரை நீங்கள் உருவாக்கவில்லை. அது உங்களுக்குச் சொந்தம் இல்லை. உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை அழிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?

ஆன்மீகத்தின் பெயராலும் சில தற்கொலைகள் தூண்டப்படுகின்றன. சொர்க்க வாசலுக்கு அழைத்துச் செல்ல பறக்கும் தட்டுகள் காத்திருப்பதாகச் சொன்ன ‘குரு’வை நம்பி, பலர் குழுவாகத் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்.

இந்த மாதிரி மூடத்தனமான அபத்தங்களை நம்பும் விபரீதங்கள், மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம் காணப்படுகின்றன. உள்நிலை உணராதவர்கள் தங்களைக் குருவாக அறிவித்துக் கொண்டு, சில கவர்ச்சிகரமான சத்தியங்களைச் செய்து கொடுத்து, கூட்டத்தைச் சேர்த்துவிடுகிறார்கள். மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல், ‘தீர்ப்பு நாள் வந்துவிட்டது. இறைவனைச் சேர்வோம்’ என்று சொல்லி மரணத்தையே ஒரு தீர்வாக்கி விடுகிறார்கள்.

உள்நிலையை மேன்மையாக நினைத்து, உள்நிலையில் வளர்ச்சி காணத் தலைப்படும் நம் கலாசாரத்தில், இத்தகைய விபரீதங்கள் நடப்பதில்லை.

இந்த உலகில், தங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற்று நிம்மதியாக வாழ, சாதாரண மண்புழுவில் இருந்து மாபெரும் யானை வரை கடைசிவரை போராடத் தயாராக இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட மிக மிகப் புத்திசாலித்தனமான மனிதன் மட்டும், தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால் உடனே நம்பிக்கை இழக்கிறான். தன்னை மாய்த்தும் கொள்கிறான்.

‘உங்கள் உடலையும், மனதையும் மேலும் திறம்படப் பயன்படுத்துவது எப்படி’ என்பதை அறிவதற்கான புதிய வாய்ப்பாகவே, உங்கள் தோல்வியை எதிர்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் தற்கொலை ஆதரிக்கப்படுவதில்லை. இயற்கையின் அமைப்பில், தற்கொலை என்பது மாபெரும் தவறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும், அதை அடுத்த கட்டத்திற்கான முதல் படியாக நினைத்து, தாண்டிச் செல்ல வேண்டுமே தவிர, உயிரைப் போக்கிக் கொள்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

சமூகத்தில் உண்மையான ஆன்மீகம் தழைக்கத் துவங்கிவிட்டால், தற்கொலை என்ற சொல் கூட நிலைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top