வந்தது திருவோணம்
கேரள மக்களின் பண்டிகைகளில் மிக முக்கியப் பண்டிகை திரு ஓணம் பண்டிகை ஆகும்.
ஆன்மீக வரலாற்றின் அடிப்படையில் மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.கேரள மக்களின் வசந்த கால விழாவாக இது கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது.
அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மகாபலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அதாவது ஆன்மீக வரலாற்றின் அடிப்படையில் மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் துவக்கம் தான் இந்த திரு ஓணம் தினமாகும். தமிழர்களின் பொங்கல் பண்டிகையைப் போன்று இது ஒரு விளைச்சல் திருவிழா என்றும் கூறலாம்.
ஓணம் பண்டிகையன்று அதிகாலையில் கண் விழித்து புத்தாடை அணிந்து திருவாதிரைக் களி செய்து உண்டு, வீட்டு வாயிலில் பூக்களால் கோலமிட்டு, பெண்கள் நடனமாடுவது சிறப்பானது ஆகும்.
‘காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு‘ என்பது பழமொழி. கேரள மாநிலத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது ஓணம்பண்டிகை ஆகும்.
கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அத்தம் நட்சத்திர நாளில் துவங்கி 10 நாட்கள் வரை இந்த விழா என்பதை ‘அத்தம் பத்தினு பொன்னோணம்’ என்று அழைப்பதுண்டு. தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அத்தம் நட்சத்திர தினத்தில் துவங்கும் ஓணம் சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று 10 வது நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது.
அவிட்டம், சதயம் என்று அதற்கு அடுத்த 2 நாட்கள் வரை ஓணம் விழா தொடர்வதுண்டு. ஓணத்தை அறுவடை திருநாளாகவும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஒரு ஓணம் & பல கதைகள்
ஓணத்திற்கான வரலாறு என்று பரசுராமர், புத்தர், சேரமான் பெருமாள், சமுத்ர பத்மராஜா, தானிய தேவன் என்று பலரது கதைகள், வரலாறுகள் இருந்தாலும் மகாபலி கதையே முக்கியத்துவம் பெறுகிறது. மகாபலி என்பதற்கு ‘பெரிய தியாகத்தை செய்தவன்’ என்பது பொருளாகும்.
பண்டை காலத்தில் இன்றைய கேரளாவை நல்லமுறையில் ஆண்டு வந்த மகாபலி மன்னன் ஆட்சியில் மக்கள் எல்லோரும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அப்போது மகாபலி மீது தேவர்கள் குறை கூறினர். மகா விஷ்ணுவின் உதவியை நாடி ‘விஸ்வஜித்’ என்ற பெயரில் யாகம் நடத்தினார் மகாபலி. தேவர்கள் குறையை போக்கவும், உலகம் நிலைத்திருக்கும் வரை மகாபலி புகழுடன் விளங்க செய்ய மகா விஷ்ணு மிகச் சிறிய வாமன அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் மூன்று அடி நிலம் தானம் கேட்டார்.
மூன்றடி மண்
மகாபலியும் நிலம் வழங்க தயாராக, குள்ள உருவமாக இருந்த மகாவிஷ்ணு விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும், இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். மூன்றாவது அடிக்கு நிலம் கேட்க, மகாபலியோ தனது தலையை காண்பித்தார். அவரை அப்படியே அழுத்தி பூமிக்குள் புதைத்தார் மகா விஷ்ணு. அப்போது மகாபலியின் வேண்டுகோளையேற்று ஆண்டுக்கு ஒருநாள் அதாவது ஆவணி மாதம் திருவோண நாளில் மகாபலி தனது நாட்டு மக்களை காணவும் மகாவிஷ்ணுவும் வரம் கொடுத்தார். மன்னர் வருகிறார்
கேரள நாட்டு மக்களை மன்னர் காண வரும் நாள் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் திருவோண பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் வாழும் மலையாள மக்கள் ஓணத்தையொட்டி சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
எங்கும் விழாக்கோலம்
ஓணம் பண்டிகையால் கிராமம், நகரம் என்று அனைத்து பகுதிகளும் களைகட்டி காணப்படுகிறது. படகு போட்டிகள், மாறுவேட போட்டிகள், கலாசார ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள் என்று கேரளா மாநில பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. அனைத்து வீடுகளிலும் அத்தப்பூக் களங்கள் அலங்கரிக்கின்றன.
தமிழகத்தில் விழா
கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை மற்றும் மலையாளிகள் அதிகம் வசிக்கின்ற சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு உள்ளூர் விடுமுறை வழங்கி உள்ளது. இம்மாவட்டங்களிலும் ஓணளண பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகள், கலாச்சார விழாக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருவோணம் !!!
அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்….கேரள மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகையான ஓணம், அவர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும்.
இது அறுவடைநாள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
மலையாள மாதமான “சிங்கம்”( ஆகஸ்ட் – செப்டம்பர் ) மாதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என்று பத்து நட்சத்திரத்தில், பத்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணம் அன்று விழா இன்னும் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது.
இதன் சிறப்பாக கேரள மக்கள், தங்கள் இல்லங்கள் முன்பாக அத்தப்பூ கோலமிடுவர். இந்த 10 நாட்களிலும் கேரள பாரம்பரியத்தோடு நடனம், விளையாட்டு ஆகியவை இடம்பெறும். பண்டிகையின் போது ஓணம் சிறப்பு உணவு ( Onam Sadhya) பரிமாறப்படுகிறது.
விழாவின் வரலாறு
முந்தைய காலத்தில் கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் குறையின்றி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். வாமனன் என்னும் குள்ள அவதாரத்தில் வந்து, 3 அடி நிலம் கேட்ட விஷ்ணு பகவானுக்கு, மூன்றாவது அடியாக தன் தலையையே கொடுத்தவன் தான் இந்த மகாபலி.
பின்னர், முக்தி பெற்ற பிறகும் ஆண்டுக்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை காணும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று கேட்டார். பகவானும் அவ்வாறே அருளினார். இதன்படி ஆண்டுதோறும் நாட்டு மக்களை காண வரும் மகாபலியை வரவேற்கும் பொருட்டு இப்பண்டிகையை கேரள மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். மூன்றடியானால் என்ன… மூன்று லட்சம் அடியாய் இருந்தால் என்ன! வாழ்வதற்கு என்ன தேவையோ அது போதாதா! அதிகமாய் சேர்ந்தால் ஆணவம் ஏற்படும். அந்த ஆணவம், மற்றவர்களை அழித்து, முடிவில் தன்னையே அழித்து விடும். இதுதான் மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறு உணர்த்தும் பாடம்.
திருமாலின் ஐந்தாவது அவதாரம் வாமனம். இந்த அவதாரத்தில், குறுகிய மனித வடிவம் எடுத்து, நீண்டு நெடிதுயர்ந்து, உலகளந்த விக்ரமன் ஆகி, மகாபலி மன்னனை ஆட்கொண்டார். இந்த அவதாரத்தில், இன்னொரு விசேஷமும் உண்டு. தசாவதாரத்தில், இரண்டு அவதாரங்கள், ஒரே குடும்பத்துக்காக உருவானது. நரசிம்மனாய் பிரகலாதனுக்கும், வாமனனாய் அவரது பேரன் மகாபலிக்கும் அவர் அவதரித்தது குறிப்பிடத்தக்கது.
விரோசனன் என்ற அசுரனுக்கும், அவனது மனைவி தேவிக்கும் பிறந்த மகனே மகாபலி. இவன் ஒரு யாகம் செய்து, மின்னலென பறக்கும் குதிரை, தேர், சிங்கக்கொடி, வில், இரண்டு அம்பறாத்தூளி (அம்புகள் வைக்கப் பயன்படுவது), ஒரு கவசம் ஆகியவற்றை பெற்றான். இவனது தாத்தா பிரகலாதன், ஒரு கவசத்தை அளித்தார்.
குரு சுக்ராச்சாரியார், வெற்றிச்சங்கு ஒன்றை வழங்கினார். எவராலும் அழிக்க இயலாத இந்த ஆயுதங்களை வைத்து பூலோகம், தேவலோகம், பாதாளம் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஜெயித்தான். இவனது ஆட்சி நல்லாட்சியாக அமைந்தது. இல்லை என்ற சொல் மக்களிடம் இல்லை. இதன் காரணமாக, தன்னை விட்டால் ஆளில்லை என்ற ஆணவத்துடன் திரிந்தான்.
தேவர்களின் தாயான அதிதிக்கு, தன் பிள்ளைகளான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகாபலிக்கு அடிமையாகி பட்டபாடு சகிக்கவில்லை. அவள் விஷ்ணுவை பிரார்த்தித்தாள். அவளுக்கே மகனாகப் பிறந்து, தேவர்களை மீட்பதாக வாக்களித்தார். அதன்படியே அவள் வயிற்றில், திருவோண நட்சத்திரம் துவாதசி திதியில் பிறந்தார். பு@ராகிதர் வடிவில் மகாபலியை தேடிச் சென்றார்.
புரோகிதர் என்ற சொல்லில் உள்ள, புரோ என்பது, மேலே அல்லது இனி என பொருள்படும். இதம் என்றால் நல்லதை எடுத்துரைப்பது. அதாவது, எதிர் காலம் நல்லதாக இருக்க யோசனை சொல்பவர் புரோகிதர்.
திருமால் புரோகிதர் வடிவில் வந்ததற்கு காரணம் உண்டு. மகாபலி எல்லா வகையிலும் நல்லவன் தான், திறமைசாலி தான்; ஆனால், ஆணவம் அவன் கண்ணை மறைக்கிறதே! அதை அழித்து, அவனுக்கு இனி வரும் காலம் நல்லதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி ஒரு வடிவில் வந்தார்.
அது மட்டுமல்லாமல், முந்தைய அவதாரத்தில், தன் பக்தன் பிரகலாதன், தன் மீது செலுத்திய பக்திக்கான நன்றிக்கடனை, அவனது சந்ததிக்கும் தருகிறார். இதனால் தான், ஒருவர் இன்று செலுத்தும் பக்தியும், செய்யும் நற்செயல்களும், அவனது தலைமுறையையும் பாதுகாக்கும் என்கின்றனர்.
மகாபலிக்கு புரோகிதராக இருந்தவர் சுக்ராச்சாரியார், அவர், “வந்திருப்பது எல்லாம் வல்ல ஹரி, அவர் கேட்பதை மட்டும் கொடுத்து விடாதே…’ என்று எடுத்துச் சொன்னார்.
மகாபலியோ, “இறைவனே ஒரு பொருளை யாசித்து என்னிடம் வந்திருக்கிறான் என்றால், நானல்லவோ உயர்ந்தவன், நீர் சொல்வதைக் கேட்க மாட்டேன்…’ என குரு நிந்தனை செய்தான்.
குருவுக்கு மகாகோபம். “உன் செல்வத்தையெல்லாம் இழப்பாய்…’ என சாபமிட்டார். பின், விஷ்ணு ஈரடியால் உலகளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து ஆட்கொண்டது தெரிந்த கதை.
“அந்தணரே… வெறும் மூன்றடி நிலம் கேட்கவா இவ்வளவு தூரம் வந்தீர்… உலகத்தையே என் வசம் வைத்திருக்கிறேன். அவ்வளவையும் கேட்டாலும் தருகிறேன்…’ என்றான் மகாபலி.
அதற்கு வாமனர், “ஒருவனுக்கு தேவை என்னவோ, அதைத் தான் கேட்க வேண்டும்…’ என்றார்.
இதன்மூலம், இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை, திருமாலும், தன்னைப் போல் மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டுமென மகாபலியும், உலகத்துக்கு உணர்த்தி யிருக்கின்றனர். இனியேனும் நாட்டில் நல்லாட்சி மலர, வாமனர் அருள் செய்யட்டும்.
ஓணம் பண்டிகைக்கு முதல் 10 நாட்கள் தங்கள் வீட்டு முன்பு பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்று மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மேலும் ஓணம் ஊஞ்சலாட்டம், ஓண பந்து போட்டி, ஓண படகு போட்டிகளும் நடத்தப்படும்.
ஓணம் பண்டிகையின் முதல் நாளான இன்று ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தன்று ஓணப்பண்டிகை தொடங்கியது. இதைத் தொடர்ந்து பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.
இந்த பூ கோலத்திற்கு தும்பைப்பூ, காசிப்பூ, சங்குப்பூ, வாடாமல்லி, கேந்தி, சம்பங்கி, ரோஜா, தாமரை, கோழிப்பூ ஆகியவை பயன்படுத்தப்பட்டது.
கேரளாவில் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டுள்ளனர். வீட்டு தோட்டங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்தனர். கேரளாவின் எல்லைப்பகுதியான குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை களைகட்டியது. இங்கும் அத்தப்பூ கோலம் வீட்டு வாசல்களை அலங்கரித்தது.
மேலும் பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் திற்பரப்பு, குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை போன்ற பகுதிகளிலும் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலம் கண்ணை கவரும் வகையில் போடப்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஓணம் பண்டிகை கேரளாவின் ஓர் அழகுத் திருவிழா !
ஓண சத்ய
ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் விருந்தாகும். உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும்.
ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும்.
அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.
இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும்.
இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும்.
அரசு விழா
மகாபலி ஆட்சி செய்த நாட்களை போல நாங்கள் இன்றும் மகிழ்ச்சியாக வாழ்வதாக மன்னருக்கு உணர்த்தவே இவ்விழாவை கேரளாவில் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். சகலவிதமான உணவு வகைகளையும் மகாபலி வந்து உண்பதாக நினைத்து அவருக்கு படைத்த பிறகுதான் அவர்கள் உணவு உண்டு மகிழ்கிறார்கள். உலகெங்கிலும் கேரள மக்கள் கோலாகலமாக 10 நாட்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை திருவோணம் ஆகும்.
கேரள அரசு இப்பண்டிகையை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. கேரள மாநில கலாசாரங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்குகளில் நடைபெறும். பலவித இசைக் கருவிகளை இசைத்து இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. குமரி மாவட்டமும் முன்பு கேரள மாநிலத்துடன் இணைந்திருந்ததால் இந்த மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை களைகட்டும்.