விக்கிரமாதித்தன் கதை
கோதாவரி நதிக்கரையிலுள்ள பிரதிஷ்டானபுரம் என்ற ஊரை விக்ரமாதித்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய தர்பாருக்கு ஒரு நாள் காந்திசீலன் என்ற முனிவர் வந்து, அவனுக்கு ஒரு பழத்தை அளித்து விட்டுச் சென்றார்.
விக்ரமனும் அதை வாங்கி தன் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னான். இதே போல தினமும் அந்த முனிவர் விக்ரமனுக்கு பழம் கொடுப்பதும், அதை அவன் பத்திரப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. ஒருநாள் முனிவர் கொடுத்த பழத்தை, எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று கடித்தது. அப்போது அதிலிருந்த ரத்தினக் கல் கீழே விழுந்தது.
உடனே விக்ரமன் தன் பொக்கிஷ அதிகாரியை அழைத்து, அனைத்து பழங்களையும் சோதித்துப் பார்க்கச் சொன்னான். பழங்களைச் சோதித்த அதிகாரி, “மன்னா, பழங்கள் உலர்ந்து விட்டன. ஆனால் அவற்றில் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருந்தன” என்றார். மறுநாள் வழக்கம் போல முனிவர் வந்து விக்ரமனிடம் பழம் கொடுத்தார்.
அவரிடம், “சுவாமி, தினமும் ஒரு பழத்தில் ரத்தினக் கற்களை வைத்து தருகிறீர்களே… ஏன்? என்று கேட்டான். அதற்கு பதிலளித்த முனிவர், மிகப் பெரிய நன்மையை என் மந்திரத்தால் செய்தாக வேண்டும். இல்லையெனில் பெரும் கேடு ஏற்படும். இச்செயலைச் செய்வதற்கு எனக்கு சுத்தமான வீரன் ஒருவனது துணை வேண்டும். அதற்காகத்தான் உன்னை அணுகினேன்,” என்றார்.
தன்னால் மிகப் பெரிய நன்மை நடக்கப்போவதாகக் கூறியதால் மகிழ்ந்த விக்ரமன், இதற்கு ஒப்புக் கொண்டான். “வரப்போகும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியன்று நள்ளிரவில் ஊருக்கு வெளியே இருக்கும் மயானத்துக்கு நி தனியே வரவேண்டும்,” என்றார் முனிவர்.
சொன்ன நேரத்தில் மயானத்துக்குச் சென்றான் விக்ரமன். அவனுக்காக அங்கு காத்திருந்த முனிவர், “இங்கிருந்து தென் திசையில் சென்றால், அங்கு ஒற்றை மரம் இருக்கும். அதில் ஓர் ஆணின் உடல் தொங்கிக்கொண்டிருக்கும். அதை எடுத்துக் கொண்டு இங்கே வா. நடுவில் ஏதும் பேசக் கூடாது” என்றார்.
மன்னனுன் அவர் கூறிய திசையை நோக்கி நடந்தான். அங்கு ஓர் ஒற்றை மாத்தில் ஆணின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது. மரத்தின் மேல் ஏறி கயிற்றை அறுத்து, பிண நாற்றம் அடிக்கும் அந்த உடலை கீழே தள்ளினான்.
கீழே விழுந்த அந்த உடல் அழுதது. அந்த உடலில் உயிர் இருப்பதாக நம்பிய விக்ரமன், அதைத் தூக்க முயற்சித்தான். உடனே உடல் சிரிக்க ஆரம்பித்தது. “ஏன் இப்படிச் சிரிக்கிறாய்” என மன்னன் கேட்ட அடுத்த நொடி மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது அந்த உடல்.
அது வேதாளம் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரமன், மீண்டும் அதை கிழே கொண்டு வந்து முதுகில் சுமந்து சென்றான். அப்போது அந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. “மன்னா, நாம் நடக்கும் போது பொழுது போவதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன்” என ஆரம்பித்தது.
கதையின் முடிவைப் பற்றி புதிர் போட்டது. அதற்கு விடை தெரிந்தும் மவுனமாக இருந்தால், தலை வெடித்து விடும் என்று விக்ரமனை மிரட்டியது.
வேறு வழியில்லாமல் விக்ரமனும் பதில் கூறினான். பதில் கூறியதால் அவனது மவுனம் கலைந்த அடுத்த நொடி, வேதாளம் மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது. இப்படியே, ஒவ்வொரு கதையாகச் சொல்லி அவனிடம் கேள்விகள் கேட்கும். பதில் சொல்வதற்காக அவன் வாய் திறந்து பேசியதும் மரத்தில் ஏறிக் கொள்ளும்.