Home » சிறுகதைகள் » முதல் வழக்கில் வெற்றி!!!
முதல் வழக்கில் வெற்றி!!!

முதல் வழக்கில் வெற்றி!!!

ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?” என்று கேட்டார்.

“மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார்.

பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பல்! நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய்? மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.

“முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்” என்றார் பீர்பல்.
அக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, “பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!” என்றார் அக்பர்.

உடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில் யாருக்கு என்ன குறை?” என்று கேட்டார் அக்பர்.
“பிரபு! என் பெயர் அப்துல் ரஹ்மான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்! மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன்.

இதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி! இவன் என் மாணவனாக இருந்தவன்! இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “பிரபு! இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன்.

ஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன்.

இவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்” என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா?” என்று அக்பர் கேட்டார்.

“இல்லை பிரபு! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்!” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்?” என்று கேட்டார்.

“பிரபு! நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை,” என்றான்.

“அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது?” என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்” என்றான்.

பிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார்.

நீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான்.

அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு!” என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.

ஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார்.

பீர்பல் இளைஞனை நோக்கி, “நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா?” என்றார்.

“அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்” என்றான் இளைஞன்.

பிறகு கிழவரை நோக்கி, “பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பல் “ஆம் ஐயா!” என்றார் கிழவர்.

“அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்” என்றார் பீர்பல். பீல்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான்.

திடீரென பீர்பல் பிஹாரியை அழைத்து, “பிஹாரி! இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு! உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.

பீர்பல் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா?” என்று பீர்பல் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன்.

“அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.

ஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top