விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள்.
அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள்.
நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும்.
நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.
ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.
என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.
இந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள்.
அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுளாக காணப்படும் விநாயகர், தீயவற்றை அழிக்கும் கடவுளாகவும் வணங்கப்படுகிறார். யானைத் தலை அறிவின் அம்சமாகவும், நீண்ட காதுகள் அவருக்கு அனைத்து விஷயங்களும் கேட்கும் என்பதற்கான சின்னமாகவும் விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
எந்த செயலும் செய்வதற்கு முன் விநாயகரை வணங்குவது இந்தியாவில் பழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட எல்லா வேலைகளுமே விநாயகருடனே துவங்குகின்றன. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? வாருங்கள் அதைப் பற்றிப் பார்ப்போம்.
என்ன எழுதப்பட்டிருக்கிறது?
கணபதி உபனிடதத்தின் படி, பிராகிருதி எனப்படும் இயற்கையின் படைப்பிற்கும், புருஷா எனப்படும் விழிப்புணர்வுக்கும் முன்பே விநாயகர் தோன்றிவிட்டாராம். இதனால் தான் அவர் முதன்மைக் கடவுளாக வணங்கப்படுகிறார் என்பதை அறியலாம்.
புராணங்கள்:
ஒருமுறை பார்வதி வாயிலைக் காக்குமாறும், யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் கணபதியை பணித்தாராம். அப்போது அங்கே வந்த சிவனை கணபதி தடுக்கவும் கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை சீவிவிட்டாராம். கணபதியின் அலறலைக் கேட்ட பார்வதி ஓடிவந்து, அவரின் நிலையை கண்டு கோபம் கொண்டாராம்.
அதுமட்டுமல்லாது அவரது மகன் கணபதி மீண்டும் உயிர்பெறவில்லையென்றால் உலகத்தையே அழிக்கப்போவதாக சூளுரைத்தாராம். பிறகு கணபதியின் தலை இருந்த இடத்தில் யானை தலையை மாட்டி அவரை உயிர்ப்பித்தாராம் சிவன். தன் மகனின் நிலையைக் கண்டு பார்வதி வருந்தியதைக் கண்ட சிவன், கணபதிக்கு விஷேச சக்திகளை வழங்கி, எந்த ஒரு வேலையையும் கணபதியை முதலில் தொழாமல் மேற்கொண்டால் வெற்றி பெறாது என்றும் வாழ்த்தினாராம்.
அதுமுதல் முதற்கடவுளாக எந்த விஷயத்திலும் கணபதியை தொழும் வழக்கம் துவங்கியது. மற்றொரு கதையில் கடவுள்களிலேயே சிறந்தவர் தாந்தான் என விநாயகரின் தம்பி கார்த்திகேயன் கூறிக்கொண்டிருந்தாராம். அதனால் சிவன் இருவருக்கும் ஒரு போட்டியை ஏற்பாடு செய்தார்.
அதன் படி யார் உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களே முதலில் வணங்கப்படும் கடவுளாவார்கள் என்றும் அறிவித்தாராம். அதன்படி போட்டி துவங்கியது.
கார்த்திகேயன் தனது மயில் வாகனத்தில் உலகைச் சுற்றி வருவதற்கும், விநாயகர் தனது தந்தை தாய்தான் தனக்கு உலகம் எனக் கூறி, அவர்களைச் சுற்றி வந்து வெற்றி பெற்றுவிட்டாராம். அதிலிருந்து கணபதியே முதலில் வணங்கப்படுவதாகவும் கூறுவர்.
யோகிகளின் நம்பிக்கை:
வாழ்க்கையின் எந்த விஷயமும் பொருள் மற்றும் ஆன்மீகம் என்ற இரு விஷயங்களுக்குள் அடங்கிவிடுவதாக யோகிகள் நம்புகிறார்கள். பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
பொருள் சார்ந்த மகிழ்ச்சிகளையெல்லாம் அளிக்கும் அதே நேரத்தில், உலகின் சகல துன்பங்களில் இருந்து, அவர் நம்மை காப்பாதாகவும் நம்புகிறார்கள். யோக சித்தாந்தங்களின் படி, முலாதாரச் சக்கரத்தில் இருந்தே நமது பொருள் மற்றும் ஆன்மீக வாழ்க்கை துவங்குகிறது.
எனவே நமது வாழ்க்கையை பிரச்சனைகள் இன்றி முழுமையாக வாழ, எந்த விஷயத்திற்கு முன்பும் கணபதியை வணங்குதல் அவசியம் என்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.
அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.
இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.
சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.
அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.
அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.
ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.
அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.
அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?
அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.
அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு.
சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.
பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.
வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.
இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.