அனுமார் வால் போல நீளுகிறதே – அனுமார் வால் போல நீண்டதாம்!
இந்தப் பழமொழி ராமாயண சுந்தர காண்ட நிகழ்ச்சியில் இருந்து வந்தது. ராவணனால் துன்புறுத்தப்பட்ட அனுமன், இலங்கைக்கு தீ வைத்தான். அப்பொழுது அவன் வால் திரவுபதியின் புடவை வற்றாது வந்தது போல நீண்டு கொண்டே போனது. அதாவது ஆஞ்சநேயனை தீயானது சுடவே இல்லை. இந்தியாவின் ‘’சூப்பர்மேன்’’ Superman மாருதி. அவன் செய்யாத சாகசம் இல்லை. அத்தனையையும் இன்று வெள்ளைக்காரர்கள் ‘காப்பி’ அடித்து காமிக்ஸ் Comics ஆக (சூபர்மேன், superman ஸ்பைடர்மேன் Spiderman, போகேமான் Pokeman, பேண்டம் Phantom) என்றெல்லாம் எழுதி, விற்றுக் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
இன்னொரு சம்பவமும் சுந்தர காண்டத்தில் உண்டு. ஆஞ்சநேயனக்கு ஒரு தூதருக்கு (ambassador) உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.ஆனால் அது கொடுக்கப்படவில்லை இன்று சர்வதேச ‘ப்ரோடோகோல்’Protocol (சம்பிரதாய விதிகள்) என்ற பெயரில் தூதர்களை எப்படி நடத்த வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதை உலகிற்குக் கற்பித்தது இந்தியர்கள்! சாணக்கியன் எழுதிய விதிகளை திருவள்ளுவனும் ஒரு அதிகாரம் முழுதும் பாடியிருக்கிறான். அப்படி மரியாதை தர ராவணன் மறுத்தான். ஆசனம் கூட கொடுக்கவில்லை. அனுமார் தன் வாலை நீட்டி அதன் மூலம் ஒரு ஆசனம் அமைத்து ராவணனைவிட உயரத்தில் உட்கார்ந்து ‘பதில் மரியாதை’ செய்தான்!
இராம பாணம் பட்டு உருவினாற் போல
அந்தக் காலத்தில் ஒருவர் வீரத்தை மெய்ப்பிக்க ஏழு பொருள்களை ஒரே அம்பினால் துளைக்கச் சொல்லுவார்கள். இந்த ஏழு மர துளை போடும் போட்டி வேறு கலாசாரங்களிலும் உண்டு. இதை ஒட்டியே ராமனின் திறமையைக் கண்டுபிடிக்க ஏழு மரா மரங்களைத் துளைக்கும் அம்பைவிடச் சொன்னான் சுக்ரீவன். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் துளை போட்டது. இதே போல ஒரு வகைப் பூச்சியும் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பாக்கம் வரை குண்டு துளைத்தாற்போல துளை போடும் அந்த பூச்சிக்கும் இந்தியர்கள் ராமபாணம் என்று பெயர் வைத்தனர்.
இராமர் இருக்கும் இடம் அயோத்தி
மக்களுக்கு குணம் மிக்க ஒரு தலைவன் இருந்தால் போதும்; ஒரு ஆபத்தும் வராது என்று தெரியும். முறையாக ஆட்சி செய்யும் மன்னவன் இறைவனுக்கு சமம் என்று வள்ளுவனும் கூறுவான். இதனால்தான் மக்கள் அனைவரும் இரண்டு முறை இராமனைப் பின் தொடர்ந்து சென்றனர். முதல் முறை அவன் காடேகிய நாள் அன்று. ஆனால் இராமனே அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டான். இரண்டாவது முறை ராமன் ஆற்றில் ஜல சமாதி அடைய இறங்கிய போது அயோத்தியில் உள்ள அத்தனை மனிதர்களும், ஜீவராசிகளும் ராமனுடன் சரயு நதியில் இறங்கி மோட்சம் அடைந்தனர். அவர்களைப் பொறுத்த மட்டில், இராமன் எங்கே இருக்கிறானோ அதுதான் அயோத்தி!
இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம,லெட்சுமணன்—ஆகிய இருவரும் இணை பிரியாத ஜோடிகள். எல்லா படங்களிலும் இதைக் காணலாம். அவர்கள் ஒற்றுமையை உவமையாக கூறும் போது, இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது என்று சொல்லுவர்.
இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
இராமன் சத்ய தர்ம பராக்ரமன். சொன்ன சொல்லை மீறாதவன். ஆயுதம் இழந்த ராவணனைக் கூட கொல்லாமல் ‘’இன்று போய், நாளை வா!’’ என்று இயம்பினன். ஆகையால் ராமனின் சொல்லுக்கு மறு சொல் கிடையாது. இலட்சுமணன் மிகவும் (short tempered) கோபக்காரன். எதற்கும் பொங்கி எழுவான. ஆனால் அண்ணன் ஒரு சொல் சொன்னால் போதும். அடங்கிவிடுவான். இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்
மனம் போல மாங்கல்யம். தலைவன் எவ்வழி அவ்வழி தொண்டன். ஆகவே இராமன் போல ஒரு ராஜா (Truthful, honest, sincere, amicable, easily accessible,heroic, people friendly) இருந்தால் உலகமே அவனுக்கு அடங்கி நடக்கும். இராம சேது என்னும் பாலம் கட்டும் போது அணில் கூட உதவி செய்யவில்லையா?
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
உலகில் நிறைய பேர் சுயகாரியப்(Selfish, self centred) புலிகள். தங்களுக்கு வேண்டியது கிடைத்தால் போதும். வாயை மூடிக்கொண்டு அநியாயங்களைக் கண்டும் காணாமல் இருந்து விடுவர். மஹாத்மா காந்தி, பல சத்தியாக் கிரகம், பாத யாத்திரை என்று அறைகூவல் விடுத்தபோதும் சிறை சென்றவர்கள் எண்ணிக்கை சில ஆயிரம்தான். எனக்கு என்ன? வெள்ளைக்காரன் ஆண்டால் என்ன? இந்தியர் ஆண்டால் என்ன? என்று இருந்தவர்களைக் கண்டு பாரதியும் பாடி இருக்கிறான். “நெஞ்சில் உரமும் இன்றி” என்ற பாடலைப் படித்தால் புரியும். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று இருப்போரே உலகில் அதிகம்.
இராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமனுடைய மங்கை சீதை. அவளுடன் இராவணன் வாழ நினைத்தது தவறு. இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.
இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?
ராமனுடைய பெயரைச் சொல்லுவதே அமிர்தம் என்று உண்ணாவிரதம் இருந்தோரைக் குறித்து சொன்ன சொல் இது. மனிதனாகப் பிறந்துவிட்டால் உடலையும் பேணித்தான் ஆகவேண்டும். இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் உள்ளம் பெருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்.
இரா முழுதும் இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும்? என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்)
சொன்ன சொல்லை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் ஒரு செயலை சடங்கு போல செய்வோரைக் குறிக்கும் வசனம் இது. அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையான ஆர்வத்தோடு ஒரு செயலை செய்ய வேண்டும். எதைப் படித்தாலும் கேட்டாலும் சிரத்தையோடு செய்தால் உண்மைப் பொருள் விளங்கும். வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்து முடித்த பின்னர் அடிப்படையே புரியாமல் ஒரு கேள்வி கேட்டல் அவருக்கு எப்படி இருக்கும்! ஒரு கச்சேரிக்குப் போனவர் வித்துவானைப் பார்த்து, உங்கள் தோடி ராகத்தைக் கேட்க அல்லவா நான் வந்தேன் என்று ஒருவர் சொன்னாராம். அவர் அப்போதுதான் தோடி ராகம் பாடி முடித்திருந்தார்!
காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல
சனி பகவான் யாராக இருந்தாலும் ஏழரை ஆண்டுக் காலம் பிடித்தே தீருவான். அதை மூன்று இரண்டரை ஆண்டுகளாகப் (3X2.5 years=7.5 years) பிரிப்பர். ஒரு குறிப்பிட்ட இரண்டரை ஆண்டு, சொல்ல முடியாத துயரம் கொடுப்பான. அவரவர் ஜாதகத்தைப் பொறுத்து இதன் உக்கிரம் அமையும். அப்போது அவர்கள் காசி ராமேஸ்வரம் சென்றாலும் கர்மவினை தொடர்ந்தே வரும். இதையே மற்ற விஷயங்களுக்கும் மக்கள் உவமையாகப் பயன்படுத்துவர். என்னதான் பரிகாரம் செய்தாலும் ஒரு கெட்டது விலகவில்லையானால் அப்பொழுது இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவர். தொடர்ந்து வரும் கஷ்டங்களை இது குறிக்கும். புராணத்தில் அரிச்சந்திரன் பட்ட பாட்டை நினைத்தால் இது சட்டென விளங்கும்.
சிவ பெருமான் பற்றியும் ஒரு கதை சொல்லுவர். சனி பகவானிடம் “நான் மும்மூர்த்திகளில் ஒருவன். என்னை நீர் ஒன்றும் செய்ய முடியாது” என்றார் சிவன். சனைச்வரன் சிரித்துக் கொண்டே “இதற்கு யாரும் விதி விலக்கு அல்ல” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சிவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. சரி இந்த ஆள் கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டுமானால் யாராலும் கற்பனை செய்ய முடியாத இடத்தில் ஒளிந்து கொள்வோம் என்று ஒரு சாக்கடையில் ஒளிந்து கொண்டாராம். சனிச்சரன் மறு முறை சிவனை சந்தித்தபோது, “பார்த்தாயா, என்னை நீ ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று சிவ பெருமான பெருமையாகச் சொன்னாராம்.
சனைச்சரன், “இல்லையே, சோதிட விதிகளுக்கு கடவுளும் விதி விலக்கல்ல. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?” என்று சிவனை சனி பகவான் கேட்டார். சிவன் பெருமையாக “நீங்கள் கண்டு பிடிக்கமுடியாத பாதாள சாக்கடையில் ஒளிந்திருந்தேன். நீங்கள் ஏமாந்து போனீர்கள்” என்று பதில் சொன்னார். சனி பகவான் சிரித்துக் கொண்டே கைலாசத்தில் பாரிஜாதம் முதலான புஷ்பங்கள் கமழும் இடத்தில் இருக்கவேண்டிய நீவீர் சாக்கடையில் காலம் தள்ளினீர் அல்லவா? அதுதான் உமக்கு சனி திசை” என்று சொன்னவுடன் சிவன் முகம் சிவந்து போனது!!!
தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)
இராமனுக்கு பெரிய பலம் அவன் தம்பி லெட்சுமணன். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராம லெட்சுமணர்கள். 14 ஆண்டுக் காலமும் இமைப் பொழுது சோராமல் அண்ணனைக் காத்தவன் லெட்சுமணன். உலக இலக்கியத்தில் இப்படி ஒரு சகோதர ஜோடியை எங்கும் பார்க்கமுடியாது. இரட்டையரைக் காணலாம். ஆனால் இரு வேறு தாயாருக்குப் பிறந்து ஒரு சேர ஜோடி சேர்ந்த சகோதரர் இவர்கள். அப்பேற்பட்ட தம்பி உடைய ஒரு வீரன் எப்பேற்பட்ட படை வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்பான்; வெற்றியும் பெறுவான்!
இராவண சந்யாசி போல இருக்கான்
ராவணன் ஒரு ‘ருத்திராட்சப் பூனை’ (Hypocritical Cat). துணிச்சலாக வீரன் போல வந்து சீதையைக் கவரவில்லை. ஏனெனில் ராமனை வெல்ல முடியாது என்பது அவனுக்குத் தெரியும். சந்யாசி வேடத்தில் வந்து ஏமாற்றியவன். யாரேனும் ஒருவன் வேடம் தரித்து ஏமாற்றுகிறானோ என்ற சந்தேகம் வந்தால் உடனே மக்கள், “ஜாக்கிரதை இவன் ஒரு ராவணன்” என்று சொல்லி உஷாராகி விடுவர்.
இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி போலும்
துரியோதனன் கெட்டுக் குட்டிச் சுவராகப் போக அவன் மாமன் சகுனிதான காரணம் சூதாட்டத்தில் மாயா ஜாலம் செய்து வெற்றி பெற்றுப் பின்னர் போர் ஏற்பட வழி செய்தவன். இதே போல ராவணனிடம் மகோதரன் என்பவன் முதல் மந்திரியாக (Chief Minister) இருந்தான். மகா மாயாவி (Cheat). இந்திரன் போல வேடம் கொண்டு வெள்ளை யானை மேல் ஏறி லெட்சுமணனுடன் போரிட வந்தவன். ராமன் பற்றி உளவு (Spy) வேலைகளில் ஈடுபட்டவன்.
சீதையை அனுப்பவேண்டாம் என்று கெட்ட யோசனை(wrong Advice) கூறி ராவணன் அழிய வழிவகுத்தவன்.(ஆதாரம்: அபிதான சிந்தாமணி-Tamil Encyclopaedia)
ஆக யாராவது ஒருவர் குடியைக் கெடுக்கும் வேலைகளையோ, மற்றவர்கள் அழிய துர் போதனை செய்தாலோ அவர்களை சகுனி, மகோதரன் ஆகியோருக்கு ஒப்பிடுவர்.
படிப்பது ராமாயணம் இடிப்பது சிவன் கோவில் / ராமன் கோவில்
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் செய்பவர்களைக் குறை கூறும் பழமொழி இது. நல்ல விஷயங்களைப் பேசிவிட்டு, கேட்டுவிட்டு அதற்கு நேர் மாறான செயல்களைச் செய்வோர் ராமாயணத்தைப் படித்துவிட்டு கோவிலையே இடித்தது போல இது.
தேசத்தையே வைத்து சூதாடிய தருமபுத்திரனைக் குறைகூறும் பாரதி
“கோயிற்பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி – அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் சீச்சீ சிறியர் செய்கை செய்தான்”
என்று சாடுகிறான். சொல் ஒன்று செயல் வேறு என்பதற்கு, இது நல்ல எடுத்துக் காட்டு. இப்படிப்பட்டவர்களை ‘படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில்’ எனலாம்.
ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.
“இந்த இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்”- (Kamba Ramayanam Quote) என்று சபதம் செய்தவன் ராமன்.
அந்தக் க லத்தில் அரசர்கள் நிறைய பேரைக் கல்யாணம் செய்வது இந்திய மரபு. நாடுகளுடன் நட்புறவு வேண்டும் என்பதற்கும், வேற்று நாட்டான் படை எடுக்கையில் அருகிலுள்ள நாடுகள் படை அனுப்பி உதவி செய்யவேண்டும் என்பதற்காகவும் பல நாட்டுப் பெண்களை மணப்பது ராஜ நீதி (diplomacy), சாணக்கிய நீதி! இதனல்தான் ஆப்கனிஸ்தானத்தில் உள்ள காண்டஹார் (காந்தாரம்) நகரில் இருந்து வந்த பெண்ணை காந்தாரி என்றும் பஞ்சாபில் இருந்து வந்த பெண்ணை பாஞ்சாலி என்றும், சோழதேசப் பெண்ணை சோழமாதேவி என்றும், பாண்டிய தேச இளவரசியை பாண்டிமாதேவி என்றும் அழைப்பர். அவர்களுடைய அம்மா அப்பா வைத்த பெயர் எல்லாம் காலப் போக்கில் மறைந்துவிடும்.
இப்படிப் பல தேசப் பெண்களை மணக்கும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததற்கு இலக்கியமும் கல்வெட்டுகளும் சான்று பகரும் .ஆனால் ராமன் மட்டும் ஒரே பெண்ணைக் கல்யாணம் செய்ததோடு மட்டுமின்றி மனதாலும் வேறு ஒரு பெண்ணை நினைக்கமாட்டேன் (சிந்தையாலும் தொடேன்) என்றான். இதனால் அவன் உயிர் வாழ்ந்த காலத்திலேயே, அவனை கடவுள் நிலைக்கு உயர்த்தினர் மக்கள். அந்த ராமனின் நாமத்தைச் சொன்னாலேயே காம எண்ணங்கள் பறந்தோடிப் போகும்.
வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன்! என்னிடம் வாலாட்டாதே!
அனுமனைப் பார்த்து ராவணன் சொல்லிய சொல் இது. ஆனால் அனுமனோ இலங்கைக்கே தீவைத்து “ராவணன் வாலை” ஒட்ட அறுத்து விட்டான். வால் என்பதும் அஹம்காரம் என்பதும் ஒன்றே. நாமெல்லாரும் யான் எனது என்னும் செருக்கில் ஆடாத ஆட்டம் ஆடுகிறோம். இதுதான் நமது வால். இதை நாய்வால் மாதிரி நிமிர்த்தவே முடியாது. ஒட்ட வெட்டி எறியவேண்டும். நாமும் நமது அகந்தை என்னும் வாலை நோக்கி தினமும் “என்னிடம் வாலாட்டாதே ஒட்ட நறுக்கிவிடுவேன்”– என்று சொல்லச் சொல்ல ஞானம் பிறக்கும்.