Home » படித்ததில் பிடித்தது » மனிதர்களை கொல்லும் மர்ம தீவு!!!
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு!!!

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு!!!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.

இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற “துர்கானா ஏரி” கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.

மீதமுள்ள நீர்,  அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது.  குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று “என்வைட்டினெட்”. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல்.  இதன் அர்த்தம் “திரும்ப வராது” என்பதாகும்.  என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்து தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம்.

ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர்.

ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்’ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.

பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது.  இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top