Home » சிறுகதைகள் » செய் நன்றி!!!
செய் நன்றி!!!

செய் நன்றி!!!

திருக்குறள் கதைகள்

காரை விட்டு இறங்கும் போதே காவேரி கவனித்து விட்டாள் அங்கே அடகுக் கடையில் நிற்பது ராஜிதான் என்று. வாழ்க்கையில் மறக்க முடியாத முகங்கள் சில உண்டு.

ஒரு வருடம் முன்பு ராஜியின் கணவன் மாரிதான் காவேரியின் கணவன் சங்கரின் உயிரையே காப்பாற்றியவன்.

மாரி மட்டும் தன் உயிரைப் பணயம் வைத்து சாலையில் விழுந்து கிடந்த சங்கரை இழுத்துப் போடவில்லையென்றால், காவேரியின் கழுத்தில் தாலி நிலைத்திருக்காது. அந்த மணல் லாரி……… நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது.
 
ராஜிக்கு இந்த அடகுக் கடையில் என்ன வேலை.என்று யோசித்துக் கொண்டே சென்ற காவேரி பக்கத்தில் சென்று ராஜியின் தோளைத் தொட்டாள்.
 
சற்றும் எதிர்பாராத ராஜி “அம்மா ! நீங்களா ! சௌக்கியமா ? என்றாள் ராஜி !  இங்கே என்ன பண்றே? என்று கேட்டவுடன் அவள் கண்களில் நீர் முட்டியது.

அவ புருஷனுக்கு நாளைக்கு ஒரு ஆபரேஷன் என்று சேர்த்திருக்கிரார்களாம். இன்றைக்குள் பணம் கட்ட கொஞ்சம் குறையுது அதான் நகையை அடகு வைக்க வந்தேன் என்றாள்.
 
ராஜி தன் சேலையில் முடிந்திருந்த நகையை எடுத்தாள். அது …. அவளுடைய தாலி… ராஜி ! அதை உள்ளே வை. எங்கிட்ட பணம் இருக்கு தரேன் ! என்றபோதும் பிடிவாதமாக மறுத்தாள். ஏதோ கௌரவம் பார்க்கிறாள் போல.
 
காவேரியும் விடவில்லை. சரி ராஜி ! நான் பணம் சும்மா தரல ! அந்த தாலியை என்கிட்ட குடுத்துட்டு நீ பணம் வாங்கிக்கோ அப்புறமா பணத்தைக் குடுத்துட்டு தாலியை வாங்கிக்கோ ! என்றதும் தயங்கித் தயங்கி ஒப்புக்கொண்டாள். காவேரி தாலியை வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை எடுத்து ராஜியிடம் கொடுத்தாள்.
 
மறு நாள் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. மூன்றாவது நாள் ஜெனரல் வார்டுக்கு வந்த பின் காவேரியும் சங்கரும் சென்று பார்த்தார்கள். மாரியிடம் காவேரி சொன்னாள் ” உங்க மனைவி தான் உங்களுக்காக ராப்பகலா ரொம்ப கஷ்டப்பட்டா ! உங்க கையாலேயே இதைப் போட்டு விடுங்க ! என்று சொல்லி ஒரு பொட்டலத்தைப் பிரித்தாள்.
 
அதில் இரண்டு பவுன் சங்கிலியில் ராஜியின் தாலி கோர்க்கப்பட்டிருந்தது. அம்மா ! இதெல்லாம் எதுக்கும்மா ? வேண்டாம்மா ! என்ற ராஜியின் கையப்பிடித்து கண் கலங்க காவேரி சொன்னாள் ” ஒரு வருஷம் முன்னே உன் புருஷன் என் தாலியை காப்பாத்தலேயா ராஜி ?
 
இதைத்தான் திருவள்ளூவர் 102வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.
 
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாலப் பெரிது. (102)
 
பொருள் : தக்க சமயத்தில் செய்யப்படும் உதவி சிறியதாக இருந்தாலும் இந்த உலகை விட பெரியதாக எண்ணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top