Home » படித்ததில் பிடித்தது » மரத்தை ஏன் வழிபடுகிறோம்!!!
மரத்தை ஏன் வழிபடுகிறோம்!!!

மரத்தை ஏன் வழிபடுகிறோம்!!!

மரத்தை ஏன் தெய்வமாகப் போற்றி வழிபடுகிறோம் ………..

மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் வழக்கம் உலகிலேயே இந்து மதத்தினரிடம் மட்டுமே உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே.

மரங்களுள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையிலே சொல்கிறார்.அரச மரத்தை சிவ சொரூபமாகவும், வேப்பமரத்தை சக்தி சொரூபமாகவும் போற்றுகிறோம். அதனால் தான் அரசும் வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவ சக்தி உறையும் இடமாகக் கருதி வணங்கி வழிபடுகிறோம். மகமாயி மாரியம்மனுக்கு வேப்பிலைக்காரி என்றே பெயர்.

அம்மை நோயைத் தீர்க்கும் தெய்வம் மகமாயி . அவள் பெயரால்தான் அந்த நோயை அம்மை என்று குறிப்பிடுகிறோம். அம்மை நோய்க்கு இன்று வரை ஆங்கில மருத்துவத்தில் கூட மருந்து இல்லை. அம்மை வருமுன்னே தடுக்கக்கூடிய அம்மை நோய்த் தடுப்பு ஊசி (மருந்து) தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் வந்த பின் காப்பது அவள் அருள் ஒன்றே! அதனால் அம்மை நோய் கண்டவரது வீட்டில் வேப்பிலைக் கொத்து சொருகி வைப்பதும், அம்மை நோய் குணமாகி தலைக்கு ஊத்துதல் என்னும் பெயரில் நோயாளியைக் குளிப்பாட்டும்போது, அந்த நீரில் வேப்பிலையை ஊறப் போட்டு அந்த நீரால் குளிப்பாட்டுவதே இன்றும் வழக்கத்திலுள்ளது.

மரம் இல்லாவிட்டால் இன்றைய உலக வரைபடமே உண்டாகி இருக்காது. கொலம்பஸ், கேப்டன் குக், வாஸ்கோடகாமா போன்றவர்கள் மரக்கலம் ஏறி கடலில் பயணித்தே புதுப் புது நாடுகளைக் கண்டறிந்தனர். வாணிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு பரிவர்த்தனை ஆயின.

இந்து மதத்திலிருந்து பிரிந்த புத்தர் ஒரு போதி மரத்தின் அடியில் அமர்ந்திருந்த போதுதான் ஞானம் பெற்றார் என்பதால் புத்த மதத்தினர் இன்றும் போதி மரங்களைத் தெய்வமாக வழிபடு கின்றனர். இயற்கை அன்னையை வணங்கியே தங்கள் ஆன்மிக சித்தாந்தத்தைத் தொடங்கிய பண்டைய பாரதமக்கள், இயற்கையின் முதல் அம்சமான மரங்களை வழிபடத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை.

இன்றும் நாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் தேங்காய், பழம், வெற்றிலை- பாக்கு மற்றும் இறைவனுக்கு அணிவிக்கும் சந்தனம், ஜவ்வாது உட்பட எல்லாமும் மரங்களின் கொடை.

மனிதன் உயிர் வாழப் பிராண வாயு தேவை. மரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்ஸைடை) உட்கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜனை) வெளியிட்டு, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் உயிர்த் துடிப்பைத் தொடர்ந்து நடத்துகின்றன.

இந்தப் பேருண்மையை நம் மக்கள் ஆதிகாலத்திலேயே அறிந்து கொண்டதன் விளைவுதான் இந்த மரவழிபாடு! தல விருட்சத் தத்துவம்! உயிர் வாழ உணவுக்கும், உயிர் ஆபத்தான நோய்களிலிருந்து மனிதனைக் காக்கும் மருந்துக்கும் மரங்களே துணை செய்கின்றன. கைம்மாறு கருதாத சேவை.

உப்பு நீரைப் பெற்றுக் கொண்டு இனிமையான இளநீரைத் தரும் மேன்மை; அசுத்தமான எருவை அடி உரமாகப் பெற்றுக் கொண்டு தூய்மையான மலரையும் சுவை மிக்க கனியையும் கொடுக்கும் கனிவு.

மனிதன் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கியதும் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள மரங்களை வெட்ட நேர்ந்தது; பின்னர் எரிபொருளுக்கும் அதுவே தேவையாயிற்று. மரங்களை இதற்கென வெட்டும் போது அவன் மனசாட்சி உறுத்தியதோ, என்னவோ? இனி மரங்களை இயன்றவரை பாதுகாக்க வேண்டும் என எண்ணினான்.

என்ன வழி? எது ஒன்றை மனிதன் மதிப்புள்ளதாகக் கருதுவானோ, அதைத்தான் பாதுகாப்பான். அதனால் மரங்களை மதிப்பிற்குரியன ஆக்க, அதனை தெய்வ நிலையில் வைத்து போற்றலானான். மரங்கள் ஆராதிக்கப்பட்டன; ஆலயங்களிலும் வைத்து வழிபடப்பட்டன.

மரம் செடி, கொடிகளை வெட்டுவதால் நமக்கு ருணா என்ற பாவம் வந்து சேர்வதாகவும், அவசியத்தின் பேரில் மரத்தை வெட்டும் முன், அதனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சொல்கிறது சாஸ்திரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top