Home » சிறுகதைகள் » கடவுளின் குரலை சிறிது நேரம் கேட்போமே!!!
கடவுளின் குரலை சிறிது நேரம் கேட்போமே!!!

கடவுளின் குரலை சிறிது நேரம் கேட்போமே!!!

தகுதியும் திறமையும் மிக்க இளைஞன் அவன். சம்பள உயர்வும் கைநிறைய போனஸும் வந்தவுடன் அவன் செய்த முதல் வேலை, தான் நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட காரை வாங்கியது தான். காரை வாங்கியதும் அதை நண்பர்களிடம் காட்ட ஒரு நாள் காரை எடுத்துக்கொண்டு தெருவில் மிக வேகமாக அவன் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களுக்கு இடையே ஒரு சிறுவன் திடீரென எட்டிப்பார்ப்பது போல தெரிந்தது சற்று வண்டியை ஸ்லோ செய்கிறான்.

ஆனால் அந்த பகுதியை நெருங்கும்போது அப்படி யாரும் இல்லை என்று புரிந்தது. கார் அந்த பகுதியை கடக்கும் தருணம், திடீரென யாரோ வீசிய ஒரு கருங்கல் பறந்து வந்து காரின் பக்கவாட்டு கதவில் மோதியது. அதிர்ச்சியடைந்த அவன், காரை சடர்ன் பிரேக் போட்டு நிறுத்துகிறான். வெளியே எட்டிப்பார்க்கிறான். கல் பட்டு அவனது புதுக் கார் சொட்டையாகியிருந்தது. வேகமாக ரிவர்ஸ் எடுத்து, காரிலிருந்து இறங்கி யார் கல்லை எறிந்தது என்று ஆத்திரத்துடன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கே ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து, அவனருகே சென்று அவன் சட்டையை பிடித்துக்கொள்கிறான்.

“ராஸ்கல்… யார்டா நீ ? எதுக்குடா கார் மேல கல்லை எறிஞ்ச? இது எவ்ளோ காஸ்ட்லி கார் தெரியுமா? இதை ரிப்பேர் பண்ண எவ்ளோ ஆகும் தெரியுமா? நீ கல் எறிஞ்சி விளையாட என்னோட கார் தான் கிடைச்சதா? உன்னை என் பண்றேன் பாரு இப்போ….” வார்த்தைகளால் வெடிக்கிறான்.

“சார்… சார்…. என்னை மன்னிச்சிடுங்க.” அந்த சிறுவன் அழ ஆரம்பிக்கிறான்.

“சார்….எனக்கு வேற எந்த வழியும் தெரியலே… நான் கல்லை விட்டு எறிஞ்சதுக்கு காரணம், யாரும் வண்டியை நிறுத்தலே!” அழுதுகொண்டே சொன்னவன், அங்கே ஒரு ஓரத்தில், கையை காட்டியபடி, “அதோ சார்… அவன் என் தம்பி…அவனால நடக்க முடியாது. இந்த பக்கம் அவனை கூட்டிட்டு வரும்போது பிளாட்பாரத்துல இருந்து வீல் சேர் திடீர்னு இறங்கி அவன் கீழே விழுந்துட்டான். என்னால அவனை தூக்க முடியலே… யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம்னா யாரும் வண்டியை நிறுத்தலே… அதான் கல்லால உங்க காரை அடிச்சேன்… அவனை என் கூட சேர்ந்து கொஞ்சம் தூக்கி விட முடியுமா?”

அந்த சிறுவன் மீது கோபம் மறைந்து அவனுக்காக பரிதாபப்படும் இவன், உடனே சென்று வீல் சேரை தூக்கி நிறுத்தி, பாக்கெட்டிலிருந்து கையிலிருந்த கர்சீப்பை எடுத்து அந்த சிறுவனின் கைகளில் இருந்த சிறாய்ப்புக்களை துடைத்தான்.

“பயப்படாதே… உன் தம்பிக்கு ஒன்னும் இல்லை. லேசான சிறாய்ப்பு தான்.”

அந்த சிறுவன் கையெடுத்து இவனை கும்பிட்டு, “நீங்க நல்லா இருக்கணும் சார்.. God bless you!” என்று கூறிவிட்டு, தனது தம்பியை வீல் சேரில் தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அதை பார்க்கும் அந்த கணம், இவன் மிகவும் நெகிழ்ந்துபோய்விடுகிறான்.

இவன் மெதுவாக யோசித்தபடி தனது புதுக் காரை நோக்கி நடந்து வருகிறான். சிறுவன் வீசிய கல்லால் காரில் ஏற்பட்டிருந்த அந்த சொட்டை மிக பெரிதாக தெரிந்தது. “யாராவது கல்லெறிஞ்சி தான் உங்களை திரும்பி பார்க்க வைக்க முடியும் என்கிற அளவுக்கு ரொம்ப ஸ்பீடா வாழ்க்கையில போகவேண்டாமே!” என்கிற மிக பெரிய செய்தியை அது சொல்லியதால் அதை ரிப்பேர் செய்யவேண்டாம், அப்படியே விட்டுவிடலாம் என்று தீர்மானித்தான்.

கடவுள் நம் இதயத்துடனும் மனசாட்சியுடனும் அவ்வப்போது ரகசியமாக பேசவே செய்கிறார். ஆனால் நாம் தான் அதை கேட்பதில்லை.

நமக்கு கேட்க நேரம் இல்லாமலிருக்கும்போது, கல்லால் அடித்து நம் கவனத்தை ஈர்க்க அவர் முயல்கிறார். கடவுள் பேசுவதை கேட்பதும் கேட்காமல் இருப்பதும் நம் விருப்பம்.

அந்த சிறுவனை போல பாதிக்கப்பட்ட ஜீவன்கள் எத்தனையோ நம் கவனத்துக்காக காத்திருக்கிறார்கள்.

நமது வேகமான (அர்த்தமற்ற) ஓட்டத்தை சிறிது நிறுத்தி, அந்த ஜீவன்களை பார்ப்போம். நீங்கள் கோவிலுக்கு போகும் நேரம் வேண்டுமானால் நீங்கள் கடவுளை பார்க்கும் நேரமாக இருக்கலாம்.

ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்யும் நேரமே கடவுளின் குரலை நீங்கள் கேட்கும் நேரமாகும். பரபரப்பான இந்த உலகில் கடவுளின் குரலை சிறிது நேரமாவது கேட்போமே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top