ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும்.
இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.
1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.
2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.
3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.
5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.
7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.
8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.
9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.
10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும். ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்.