Home » படித்ததில் பிடித்தது » ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்!!!
ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்!!!

ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்!!!

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 68 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் ஜப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய ஹிரோசிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின.

ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்த அணுகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹிரோசிமாவில் உள்ள அமைதிப் பூங்காவில் (Peace Memorial Park) ஒன்றுகூடியுள்ளனர்.

அணுகுண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதிநிதிகள் என பலரும் இணைந்து உயிரிழந்தவர்களுக்காக, தாக்குதல் நடத்தப்பட்ட குறித்த நேரத்தில் மௌன அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அமெரிக்காவினால் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஹிரோஷிமா மீது மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலில் 140,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான், தன்னையும் ஒரு வல்லரசாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

தொடர் வெற்றியை தொடர்ந்து ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் ‘பேர்ல்’ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

அதன் பின்னர் போரின் தீவிரம் அதிகரித்தது..

இறுதியில் தனது புதிய கண்டுபிடிப்பான அணுகுண்டுகளை பரிசோதிக்கும் தளமாக ஜப்பானை அமெரிக்கா பயன்படுத்த தீர்மானித்தது..

இந்த நிலையில் ஐரோப்பிய போர் முனையில் ஜெர்மனி 1945ஆம் ஆண்டு  மே 8ஆம் திகதி  தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது.

அதே நாளில் சரண் ஆவணம் கையெழுத்தானது.

ஆனால், பசிபிக் போர் முனையில் போர் தொடர்ந்து நடந்தது பின்னர், 1945, ஜுலை 26-ம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து, பாட்ஸ்டம் பிரகடனத்தை (Potsdam Declaration) வெளியிட்டது.

அந்த அறிக்கையில் ” ஜப்பானின் அரசு தோல்வியை ஏற்று, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடனடி முழு அழிவுக்கு ஆளாக வேண்டும் ” எனவும் கூறப்பட்டிருந்தது.

அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் உடனடி, முழு அழிவு என்னும் சொற்கள் அந்த அறிக்கையில்  பிரயோகிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த இறுதி எச்சரிக்கையை ஜப்பான் அரசு கருத்தில் கொள்ளவில்லை..

எனினும், இதனைத் தொடர்ந்து மான்ஹட்டன் செயல்திட்டம் என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு குண்டுகள் ஜப்பானின் மீது வீசப்பட்டன.

சின்னப் பையன் (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகஸ்டு 6-ம் திகதியும், குண்டு மனிதன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாகி நகர் மீது மூன்று நாட்களுக்குப் பின்னர் அதாவது ஆகஸ்டு 9-ம் திகதியும் வீசப்பட்டன.

இதனால் நினைத்துப்பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.

இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.

இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது.

குண்டுகள் வீசப்பட்ட 2 முதல் 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மக்களும், நாகசாகியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் உயிர் இழந்தார்கள்.

இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து, அணு ஆயுதங்களின் தீவிரத்தினை உலகத்திற்கு வெளிப்படுத்திய இந்த தாக்குதல் மனிட வரலாற்றில் அழிக்க முடியாத கறை என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

ஜப்பான் ஹீரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம் அடைந்தார்.

இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி அணுகுண்டு துயர சம்பவங்கள் மறக்க முடியாத, யாராலும் அழிக்க முடியாத துயர சம்பவமாகும்.

கடந்த 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 6–ந்தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9–ந்தேதி நாகசாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர்.

அதன் பின்னர்தான் இண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன்பின்னர் அந்த இரு நகரங்களிலும் ஏற்பட்ட துயர சம்பவங்கள் எண்ணி லடங்காதவை ஆகும். உலக வரலாற்றில் அழிக்க முடியாத இந்த துயர சம்பவத்தில் அமெரிக்காவின் ‘எனோலா கே’ என்ற விமானிகள் குழு மறக்க முடியாத அங்கமாக உள்ளது.

ஜப்பானின் ஹிரோஷி மாவில் அணுகுண்டு வீசிய அக்குழுவில் 24 வயது நிரம்பிய தியோடர் வன்கிர்க் என்ற விமானியும் இடம் பெற்றிருந்தார். நெதர்லாந்தை சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

தற்போது ஜார்ஜியாவில் குடும்பத்துடன் தங்கியிருந்த அவர் தனது 93 வயதில் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது மகன் தோம் வன்கிர்க் தெரிவித் துள்ளார்.

அவரை இரண்டாம் உலகப்போரின் ‘ஹீரோ’ என்பார்கள். என்னை பொறுத்தவரை அவர் எனக்கு நல்ல தந்தை ஆக இருந்தார். குண்டு வீசியதை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. மாறாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர உதவி செய்ததாக கூறுவார்” என்றார்.

மரணம் அடைந்த தியோடர்வன் கிர்க்கின் இறுதி சடங்கு அடுத்தவாரம் பென்சில்வேனியாவில் நடைபெற உள்ளது. அவர் வீசிய வெடிகுண்டு ‘லிட்டில் பாய்’ என பெயரிடப்பட்டிருந்தது. இவருடன் இருந்த உதவியாளர் மோர்கில் ஜெப்சன் கடந்த 2010–ம் ஆண்டு இறந்தார்.

ஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

Hiroshimaசுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

“ அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.

‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணீக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது .அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் ஹிரோஷிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார்.

அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 (World War II, அல்லது Second World War) என அறியப்படுகிறது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல்,போரியல்முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற பெரும் போரைக் குறிக்கும். முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டு ஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில் செருமனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைபெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள் நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டுப் போரிட்டன. மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70 மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்.
இப்போரில் தான் முதன்முதலாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்கா சின்னப் பையன்(little boy), கொழுத்த மனிதன்(fatman)என்று பெயரிடப்பட்ட இரு குண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது வீசியது.

 

அறுபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு, அதாவது 1945ஆம் வருடம் ஆகஸ்ட் 6ந் தேதி காலை 8.15 மணி. அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பிரிகேடியர் பால் டிப்பெட்ஸ் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது ஒரு பி-29 விமானத்தில் பறந்துகொண்டிருந்தார்.
அடுத்த சில நொடிகளில் அந்த விமானத்திலிருந்து 16 கிலோ டன் யுரேனிய அணுகுண்டு வீசப்பட்டது. ஒரு பாராசூட் விரிந்தது. சூரியனைப் போன்ற வெளிச்சம் தோன்றியது. அவ்வளவுதான், ஹிரோஷிமா நகரம், நரகமாகியது. பாராசூட் உருகுவதைப் பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்களின் கண்கள் உருகின. முகம் வெடித்தது. நகரம் முழுக்கத் தீப்பிடித்து எரிந்தது. வெப்ப நிலை 4,000 டிகிரியைத் தாண்டியது.
இரும்பு உருகி ஓடியது. மனித உடல்கள் ஆவியாகின. உதவிகோரி நீட்டப்பட்ட கைகளிலிருந்த நகங்களும் தோல்களும் உதிர்ந்தன. அணு குண்டு வெடித்த வேகத்தில் நகரம் முழுவதும் இருந்த வீடுகள் நொறுங்கின. உள்ளிருந்தவர்கள் உயிரோடு எரிந்துபோனார்கள். சில நொடிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர்.
அடுத்த ஒரு வருடத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,40,000ஆக உயர்ந்தது. இதற்கு மூன்று நாட்கள் கழித்து “ஃபேட் மேன்” என்று பெயர் கொண்ட மற்றொரு அணு குண்டு நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. அங்கேயும் இதே பேரழிவு.
அணு குண்டு வீச்சில் தப்பிப் பிழைத்தவர்கள், கதிரியக்கத்தினால் புற்றுநோய் வந்து சாகும்வரை அவதிப்பட்டனர். இந்த பயங்கர அனுபவம் அவர்களது வாழ்வை முழுமையாகப் புரட்டிப் போட்டது. எப்போது நோய் தாக்குமோ, சாவு வருமோ என்ற பயத்திலேயே அவர்கள் வாழ்வைக் கழித்தனர். வாழ்வதைவிட சாவதே மேல் என்ற நிலைதான் அவர்களுக்கு.
இந்த அணுகுண்டு வீச்சு, தொழில்நுட்ப, ராணுவ சாதனையாக சுட்டிக்காட்டப்பட்டது. “வரலாற்றின் மிக மகத்தான தருணம்” என்று இதைக் அழைத்துக் கொண்டார்கள். ஒரு நியாயமான யுத்தத்தில் இந்த அணுகுண்டு வீச்சு அவசியம்; தவிர இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதுதான் அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான நிலைப்பாடாக இருந்தது.
ஆனால், பிற்காலத்தில் வரலாற்று ஆவணங்களை ஆராயும்போது, ஜப்பானியர்கள் முன்பே சரணடையத் தயாராக இருந்தனர் என்பதும் இந்தக் குண்டுவீச்சு தேவையில்லாத ஒன்று என்பதும் தெரியவந்தது. 1963ல் நியூஸ்வீக் இதழுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்விட் ஐஸநோவர் இதைக் குறிப்பிட்டார்.
இந்தக் குண்டுவீச்சுக்குப் பிறகு, பல அமெரிக்கர்கள் குற்ற உணர்ச்சியில் மருகினார்கள். மன்ஹாட்டன் புராஜக்டின் சயிண்டிஃபிக் டைரக்டர் ராபர்ட் ஆப்பன்ஹைமர், இந்தக் குண்டு “தோற்கடிக்கப்பட்ட எதிரியின் மீது” வீசப்பட்டதாக 1945ல் குறிப்பிட்டார்.
இந்தக் குண்டுவீச்சினால் ஹிரோஷிமா, நாகசாகியில் நிகழ்ந்த பயங்கரமானது, உலகில் அரசியல், ராணுவ அதிகார அடுக்குகளின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு எந்தப் பாடத்தையும் தந்ததாகத் தெரியவில்லை. இந்த அணுகுண்டு வீச்சினால்தான் அடுத்த 40 ஆண்டுகளை உலகம் கெடுபிடிப் போரில் கழித்தது. நாடுகளை ஆயுதப் போட்டியில் தள்ளியது.
ஒருகட்டத்தில் உலகில் இருந்த அணு குண்டுகளின் எண்ணிக்கை 70,000ஐ எட்டியது. இதை வைத்து லட்சக்கணக்கான ஹிரோஷிமாக்களை அழிக்கலாம். ஏன், நம் பூமி அளவிலான 50 கிரகங்களை அழிக்கலாம்.
உலகிலிருக்கும் அணுகுண்டுகளை அழிக்க,அவை பரவுவதைத் நிறுத்த, அவை பயன்படுத்தப்படாமல் தடுக்க,அவற்றை அழிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்,முன்னேற்றம் ஏதும் இல்லை. இப்போது உலகில் 20,000அணுகுண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இவற்றில் 10,000 குண்டுகள் தகுந்த இடங்களில் ஆயத்தமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்றன.
நல்லவேளையாக, கடந்த 64 ஆண்டுகளில் மீண்டும் அணுகுண்டு பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், அப்படி ஒரு அழிவை நெருங்கிய தருணங்கள் பல உண்டு. 1962 க்யூபா ஏவுகணை பிரச்னையின்போது அமெரிக்கா அணுகுண்டைக் கையில் எடுத்தது. 1983ல் ரஷ்யாவில் இருந்த எச்சரிக்கை அமைப்பில் ஏற்பட்ட தவறால் அமெரிக்காவின் ஐந்து ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தபோது, ரஷ்யா அணுகுண்டுகளைத் தயார் செய்தது.
1995ல் நார்வேயிலிருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டபோது, அதை அணுஆயுதத் தாக்குதலாக நினைத்தது ரஷ்யா. 2007 ஆகஸ்ட் 29-30ந் தேதி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆறு ஏவுகணைகள் ஏற்றப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஏங்கோ சென்றுவிட்டது. அந்த விமானம் எங்கே சென்றது என 36 மணி நேரம் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்படி மனிதத் தவறுகளினால் ஏற்படும் அபாயங்கள் போக, வேறு சில பயங்கரங்களும் இருக்கின்றன. உலகெங்கும் இருக்கும் பயங்கரவாதிகள் அணுகுண்டுக்கான மூலப் பொருள்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவை கிடைத்துவிட்டால், அணுகுண்டைச் செய்து அதை நிச்சயம் பயன்படுத்துவார்கள்.
எதிரி நாடு தம்மீது அணுகுண்டைப் பயன்படுத்தாமல் இருக்க அணுகுண்டு வைத்திருப்பதாகப் பல நாடுகள் சொல்கின்றன. பயங்கரவாதிகளிடம் இந்த வாதம் எல்லாம் செல்லாது. தவிர, இணையத் தொழில்நுட்பம் வளர்ந்துவருவதால், ஒரு நாட்டின் அணு ஆயுத கட்டுப்பாட்டை பயங்கரவாதிகள் எளிதில் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கவும் செய்கிறது.
சுமார் 40 நாடுகளிடம் அணு ஆயுதப் பொருள்கள் இருக்கின்றன. அவை எல்லாமே பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கும் இந்த யுகத்தில், இந்தப் பொருள்களை வைத்து அணு ஆயுதம் செய்யும் தகவல்களை பயங்கரவாதிகள் எளிதாகப் பெற்றுவிட முடியும். தற்போது இருக்கும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் போதுமானதாக இல்லை. இதனால் வரும் ஆண்டுகளில் அணு ஆயுதத்தை வைத்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
15-20 நாடுகள் அணு ஆயுத நாடுகளாகிவிட்டால், உலகம் உண்மையிலேயே மிக அபாயகரமான இடமாகிவிடும். அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தேசங்கள் அணு குண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் விரைவிலேயே பெற்றுவிடும் என்பது மற்றொரு அபாயம்.
ஒவ்வொரு நாடும் அணுகுண்டை வைத்திருப்பதற்கு பெருந்தொகையைச் செலவிடுகிறது. 2008ல் அமெரிக்கா மட்டும் கிட்டத்தட்ட 52.4 பில்லியன் டாலர்களை அணு ஆயுதங்களுக்கும் அது தொடர்பான திட்டங்களுக்கும் செலவிட்டது. தனது அணு ஆயுதத் திட்டத்தை மேம்படுத்தவும் அவற்றை வைத்திருக்கவும் சுமார் 29 பில்லியன் டாலர்களை வருடந்தோறும் செலவிடுகிறது அமெரிக்கா.
இந்தத் தொகை இந்தியாவின் பட்ஜெட்டைவிட அதிகம். உலகம் முழுவதும் அணு ஆயுதங்களை மேம்படுத்த ட்ரில்லயன் கணக்கில் செலவிடப்படுகிறது. அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் 110மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன.
உலகம் இதே திசையில் தொடர்ந்து செல்லுமானால், தவறின் காரணமாகவோ, வேண்டுமென்றோ அணு குண்டு மீண்டும் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது. தற்போதே தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் 2013ல் ஒரு அணு ஆயுத யுத்தமோ, உயிரி ஆயுதத் தாக்குதலோ நடத்தப்படலாம் என அமெரிக்கக் குழு ஒன்று எச்சரித்திருக்கிறது.
அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்குவதற்கான வழிமுறைகள் முன்பே கூறப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்கென காலக்கெடு ஏதும் இல்லாததுதான் கவலையளிக்கிறது.
அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம் அவற்றை அழிப்பதும், தம் பாதுகாப்புத் திட்டத்தில் அணு ஆயுதத்தைச் சேர்ப்பதில்லை என்று உறுதியளிப்பதும்தான் முதல் படி. அடுத்தகட்டமாக, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம், அணு ஆயுதத்தை தாம் முதலில் பயன்படுத்துவதில்லை என்றும் அணு ஆயுதம் இல்லாத நாடுகளின் மீது பயன்படுத்துவதில்லை என்றும் உறுதியளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top