எறும்புகள் எப்போதும் ராணுவ வீரர்களைப் போல…..!!!
உலகில் மிக மேன்மையான பிறப்பு எதுவென்றால் மனித இனம் என்று தானே சொல்லுவோம் ? ஆனால், மனிதர்களை விட உன்னதமான பிறப்பு எறும்புகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார்கள்.
அதாவது, எறும்புகள் மனிதர்களைக் கூட தந்திரமாக வென்று விடும் அளவுக்கு கூரிய அறிவு படைத்ததாம். புத்திசாலி எறும்புகளான ஃபார்மிக்கா எறும்புகளால் 1 முதல் 60வரையிலான எண்ணிக்கையை சுலபமாக எண்ண முடியுமாம். எறும்புகளின் வாழ்கை, நடை, பாவனைகள் எல்லாம் மனிதர்களை ஒத்து இருப்பதாக கண்டுப்பிடித்து இருக்கிறார்கள்.
மனிதன் ஒரு சமூக விலங்கு. அதை போலவே எறும்புகளும், கூட்டம் கூட்டமாக குடியிருப்புகள் அமைத்து வாழும் தன்மை உடையவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
எறும்புகள் தங்கள் எடையை விட 50 மடங்கு எடையை சுமந்து செல்லும் ஆற்றல் உடையவை. இது எவ்வாறு சாத்தியம் ஆகிறது என்றால், இவைகளின் தசைகள் மனிதர்களின் தசைகளை விட இறுக்கமானவை ஆகும். சில எறும்பு வகைகளில் போர் செய்யும் எறும்புகள், தங்கள் தலைகளை புற்றின் வாயிலில் அடைத்து வைத்து எதிரிகள் வராமல் கடமை ஆற்றும்.
சில வகை செடி தண்டுகளில் வெற்றிடம் இருக்கும். அங்கே குடி இருக்கும் எறும்புகள் செடிகளின் சாற்றை உண்டு வாழ்வதோடு மட்டுமல்லாமல், அதற்கு நன்றி கடனாக அந்தச் செடிகளை புழு, பூச்சிகள் அண்டாமல் காக்கவும் செய்கிறது.
இந்த பூமியில் உள்ள எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு தெரியுமா ? இதில் வாழும் அனைத்து மனிதர்களின் எடைக்குச் சமமாகும். அதாவது, இந்த புவியில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நிகராக, பதினைந்து லட்சம் எறும்புகள் வாழ்கிறதாம். வியப்பாக இருக்கிறது அல்லவா ?
மனிதர்களை போலவே உயர் நிலையில் உள்ள சில எறும்புகள் தங்களை விட பலம் குறைந்த எறும்புகளை அடிமையாக்கி வேலை வாங்குமாம்.
அதெல்லாம் இருக்கட்டும், எறும்புகள் எப்படி ஒரே நேர்கோட்டில் போகிறது என்று பல முறை ஆச்சரியப்பட்டு இருக்கிறோம் அல்லவா ? முதலில் Scout Ant எனப்படும் ‘சாரணர் எறும்பு’ உணவை தேடி அங்கும், இங்கும் அலையுமாம். அது உணவை கண்ட பின் பாதி உண்டு, ஒரு நேர்கோட்டில் தன் குடியிருப்பை நோக்கி திரும்பும். அப்படித் திரும்பும்போது ஃபெரோமோன் ( Pheromone ) என்ற ஒரு நறுமணத்தை பீச்சி கொண்டே செல்லுமாம். இதை மோப்பம் பிடித்து தான் மற்ற எறும்புகள் உணவு சேகரிக்கின்றன.
அந்த நறுமணத்தை நீர் அல்லது வேறு ஏதேனும் தடை செய்யுமாயின், எறும்புகள் எல்லாம் திருவிழாவில் காணமல் போன குழந்தைகளைப் போல் அங்கும் இங்கும் ஓடுகின்றன.
எறும்புகளிடம் இருந்து மனிதர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, போட்டிப் பொறாமை இல்லாமல் கூட்டு முயற்சியுடன் செயலாற்றும் உயரிய பண்பு என்று சொன்னால் மிகையாகாது.
நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது.
எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது.
மனிதர்களைப் போலவே எறும்புகளும், வயதான எறும்புகளுக்கு மரியாதை செய்கின்றன. மேலும், கடினமான வேலைகளை செய்வதில் இருந்து வயது முதிர்ந்த எறும்புகளை விடுவிக்கின்றன என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுறுசுறுப்புக்கும், ஒழுங்கிற்கும், கூட்டு முயற்சிக்கும் உதாரணமாக எறும்பை கூறலாம். எறும்புகளில் சித்தெறும்பு, பிள்ளையார் எறும்பு, கட்டெறும்பு, கரையான் உள்ளிட்ட பல வகைகள் இந்தியாவில் உள்ளன. மனிதர்களைப் போலவே, எறும்புகளும் அவற்றிற்கென ஒரு சமூக அமைப்பை கொண்டவையாக உள்ளன.
வளை தோண்டி முட்டையிட்டு கூட்டமாக வாழ்கின்றன. மத்திய அமெரிக்காவில் காணப்படும் இலைகளை துண்டிக்கும் எறும்புகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடந்தது. இதில், இளைய மற்றும் உடல் வலிமை மிக்க எறும்புகள் கொண்ட கூட்டம், இலைகளை துண்டிக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றுகின்றன.
இவை செயல்படும் திறனுக்கு ஏற்றவாறு, தங்களின் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த எறும்புகளின் பற்கள் கூர்மையாக இருப்பதால் விரைவாக இலைகளை கடித்து துண்டாக்குகின்றன.
வயதான எறும்புகளின் பற்கள் கூர்மை இழந்து விடுகின்றன. இதனால் இலைகளை துண்டிக்கும் பணிகளை இளைய மற்றும் பலம் பொருந்திய எறும்புகள் மேற்கொள்கின்றன. உணவுகளை வளைகளுக்கு கொண்டு செல்லுதல், உணவை பாதுகாத்தல் போன்ற பணிகளை பற்கள் கூர்மை இழந்த, வயதான எறும்புகள் செய்கின்றன.
இந்த வகையில், எறும்புகளும் மனிதர்களை போன்று வயதான எறும்புகளுக்கு மரியாதை கொடுக்கின்றன. இலைகளை துண்டிக்கும் எறும்பு கூட்டத்தில், செயல்படும் திறனுக்கு ஏற்றவாறு பணிகளை எறும்புகள் மேற்கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ள, தகவல்களை ஓரிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
எறும்புகளின் செயல் வேகம் அவற்றின் பற்கள் மற்றும் வயது ஆகியவற்றை பொறுத்து உள்ளது. பற்களை கூர்மையாக வைத்துள்ள எறும்புகள், எறும்பு கூட்டத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.