ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்
ஆடிப்பெருக்கு விழாவை காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக குடும்ப பெண்கள் காவிரிக் கரையில் கொண்டாடுவது வழக்கம். ‘ஆடி பெருக்கு’ அன்று காவிரியில் குளிப்பது விசேஷமானது என்பதால் காலையில் பெண்கள் காவிரியில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்னர்.
இக்காலத்தில் காவிரி தாய் ‘மசக்கையாக’ (கர்ப்ப காலம்) இருப்பதாக கருதி படைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள மூத்த பெண் படையலுக்கும், காவிரித் தாய்க்கும் தீபாராதனை செய்து பூஜையை நிறைவு செய்வார்…..
… சிவனின் மனைவியாக காவிரி போற்றப்படுகிறாள்.கைலாயத்தில் சிவன் – பார்வதி திருமணத்தின் போது, வடபுலம் தாழ்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, ‘தென்புலம் சென்று பூமியை சமநிலையாக்குமாறு’ சிவபெருமான் பணித்தார். சிவனை திருமணம் செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக்காலில் தவமிருந்தபோது, கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிட்ம வழங்கினாள் பார்வதி. அவரும் அந்தப் பெண்ணை தன் கமண்டலத்தில் அடக்கி தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரியானது. கமண்டலத்தில் மீதமிருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று, தான் வாசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணியானது. இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி.
திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் மகேந்திர பல்லவன் காலத்து குடவரைக் கோயில் ஒன்றுள்ளது. இங்கு சடைமுடியில் கங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவபெருமானும், பக்கத்திலேயே பார்வதிதேவி நின்ற கோலத்தில் இருப்பதையும் தேவகணங்கள் சுற்றி இருப்பதும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிவபெருமானின் மனைவியாக் கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாகிறாள்….
அண்ணனின் சீர்வரிசை:
ஆடிப்பெருக்கு நாளில் நாமும் காவிரி அன்னையை வணங்குவோம். வரும் ஆண்டுகளிலாவது முன்பு போல் குதித்தோடி வர வேண்டுவோம்.
ஆடி 18ஆம் திகதி ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறு குளம் நதி ஆகிய முக்கிய நீர்நிலைகளில் நீராடுவர்.
புது மணப்பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றி புதிய மஞ்சள் கயிற்றுடன் புதிய தாலியை மூத்த பெண்கள் அணிவிப்பர்.
கன்னி பெண்களுக்கும் புதிய மஞ்சள் கயிறு அணிவிப்பர். மேலும் எலுமிச்சை தேங்காய் மற்றும் பல வகை சாதங்களை உண்டு. ஆடி பாடி மகிழ்வார்கள்.
தம்பதியருக்குள் அற்ப விஷயங்களுக்காக பிரிவினை ஏற்பட்டாலும் கருத்து வேறுபாடுகளை களைந்து மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பதற்கான காரணமாக புராணங்கள் கூறுகின்றன.
புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற தனது பெண்ணை இம்மாதத்தில்தான் ஒரு தாய் சீர் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வருவாள்.
இம்மாதத்தில் தனது தாய்வீட்டில் இருக்கும் பெண் அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் கற்று கொள்வார்கள்.
கட்டுப்பாடாக குடும்பம் நடத்துவது எவ்வாறு எல்லோரையும் அனுசரித்து எவ்வாறு நடந்த கொள்வது தொடர்பில் சொல்லிக்கொடுப்பார்.
அதன்படி அந்த பெண் புகுந்த வீட்டில் செயல்பட்டு பிறந்த வீட்டுக்கு பெருமை தேடித் தருவார்கள்.
இத்தகைய சிறப்புமிக்க ஆடி மாதத்தை நாம் தள்ளுபடி திருவிழா காலமாக கருதாமல் ஆடி மாத அருமை பெருமைகளைப் புரிந்து கொண்டு அம்மனின் மகத்துவங்களை மனமுவந்து அறிந்து கொள்வோம்.
பெரியோர்கள் வழிகாட்டிய விரத மற்றும் வழிபாடுகளையும் மேற்கொண்டு நம் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவோம்.
குழந்தை செல்வம், நீடித்த ஆயுள், வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். சுமங்கலி பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள். இந்த இன்ப திருவிழா வருகிற 3-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
“ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக, எம்மை வாழவைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக” என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.
தமிழ் மாதங்களில் ஒன்றான `ஆடி’ அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது.
பூமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தது ஆடிமாதத்தில் என்பதால் இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பூமத்திய ரேகைக்கு வடக்கில் பயணம் செய்து வந்த சூரியன் அடுத்த ஆறு மாத காலத்திற்கு (ஆடி முதல் மார்கழி வரை) தன் பயணத்தை பூமத்திய ரேகைக்கு தெற்கில் தொடங்குகிறான். இக்காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் இருந்தது ஆடி மாதத்தில் தான். இதை நினைவு கூரும் விதத்தில் `ஆடித்தபசு’ நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இன்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
முற்காலத்தில் அரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக பார்வதி தேவி, புன்னை வனத்தில் தவம் இருந்தார். அவரது தவத்தை பாராட்டி சிவனும், விஷ்ணுவும் ஆடி மாத பவுர்ணமியன்று சங்கர நாராயணராக காட்சி அளித்தனர்.
அம்பிகை தவம் இருந்த இடம் சங்கரன் கோவில் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொண்டார். அம்மன் தவம் இருந்து பலனை அடைந்ததால் இங்கு பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி நலன் பெறுகின்றனர்.
பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என்று வரம் கொடுத்தார். காற்றும், மழையும் ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். காற்றை காளியும், மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் அம்மன் அருள் வேண்டி ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு நடைபெறுகிறது.
திருமணம் ஆகாத பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டி கோவிலுக்கு சென்று கூழ்வார்த்து வழிபட்டு வருகின்றனர். ஆடிச்செவ்வாய் தேடிக்குளி, அரைச்ச மஞ்சளை பூசிக்குளி என்பது பழமொழி.
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து அரைச்ச மஞ்சளை பூசி குளிப்பதால் சுமங்கலி பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும் என்பது நம்பிக்கை.
ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்.
நடந்தாய் வாழி காவிரி
அப்போது காவிரியை பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி காவிரி பெண் தனது கணவரான சமுத்திர ராஜனை அடைவதை மங்கலம் பொங்கும் விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகிறார்கள். காவிரிக்கரையில் இருமருங்கிலும் வெள்ள பிராவகமாக செல்லும் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் நடந்தாய் வாழி காவிரி எனக்கூறி வாழ்த்துவார். கங்கையின் புனிதமாய் காவிரி நடுவிற்பாய என்கிறார் ஆழ்வார். காவிரி சோழநாட்டை வாழ்விக்க வந்த தாய் என்பார்கள்.
ஆடிப்பதினெட்டாம் நாள் காவிரி பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்து கொண்டு போய் காவிரி கரையில் வைத்து நோன்பு நோற்பார்கள்.
கணவனை சென்றடையும் காவிரிக்கு மங்கல பொருட்களான மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகுமணிமாலை, வளையல், அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.
புதுமணத்தம்பதிகள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலைபாக்கு, வாழைப்பழம் வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள். பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடையை களைந்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வர். தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சன்னதிகளுக்கு சென்று வழிபடுவர். பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து புது தாலி கயிறை(மாங்கல்ய சரடு) அணிந்து கொள்வர்.
சிறுவர்கள் சிறிய அளவிலான மரச்சப்பரம் செய்து இழுத்துச்செல்வர். திருச்சி ஸ்ரீரங்கம், தஞ்சை திருவையாறு, ஒகேனக்கல் மேட்டூர், பவானி கூடுதுறை, மயிலாடுதுறை போன்ற காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்குவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்குவிழா விமரிசையாக கொண்டாடப்படும். பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
வரலட்சுமி விரதம், நாகபஞ்சமி, பண்டிகைகள் இம்மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
ஆடிமாதத்தில் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் சுடலைமாடன், ஐயனாரப்பன், மதுரைவீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும். முளைப்பாரி திருவிழா, நையாண்டி மேளம் கரகாட்டம், வில்லுப்பாட்டு, கச்சேரி என்று விழா அமர்க்களப்படும். இந்த திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
தனி ஆலயத்தில் காவிரி தாய்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருச்சேறை என்ற ஊர் உள்ளது. இங்கு சாரப்புட்கரணி என்ற குளத்தின் தென்மேற்கு கரையில் காவிரி தாய்க்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு காவிரி தாய் தனது மடியில் கிருஷ்ணனை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
கும்பகோணம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் உள்ளது. இங்கு உள் பிரகாரத்தில் காவிரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தாலிச்சரடை வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வர். வெற்றிலை, பாக்கு, பூ மாலை ஆகியவற்றை தண்ணீரில் விடுவார்கள்.
ஆடி மாதத்தில் சுப காரியங்கள் நடத்த தடையா?
திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி மாதம் ஏற்றதல்ல என்று கூறப்படுவதுண்டு. ஆடி மாதம் திருமணமான பெண்கள் கருத்தரித்தால் 10-வது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும். அப்போது வெயில் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்தனர். ஆடி மாதம் புதுமண தம்பதியினரை பிரித்து வைக்கிறார்கள்.
ஆடி மாதம் அதிகம் காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும். அதனால் கிரகபிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.
நாகபஞ்சமி
ஆடி மாதத்தில் நாகபஞ்சமி விரதம் பெண்களால் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாகப்பாம்பு கடித்து இறந்து போன 5 சகோதரர்களுக்காக, சகோதரிகள் நாகராஜன் பூஜை செய்து சகோதரர்களை உயிர் பெறுமாறு செய்தனர். ஆடி மாத வளர்பிறையில் பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைபிடிப்பர். இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் குறையின்றி வாழ்வார்கள்.
அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.
அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார். அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருமணத்தடையை நீக்கும் வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் ஆடி மாதம் சுக்லபட்சத்து வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்படுகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என்று பெயர் பெற்றது. இந்த விரதம் மேற்கொண்டு லட்சுமி தேவியை பூஜை செய்தால் குடும்பத்தில் குதூகலம், நீடித்த ஆயுள், அன்பு, புகழ், அமைதி, இன்பம், ஆரோக்கியம் கிடைக்கும்.
திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவர் அமைவர். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதத்தை சந்தியா கால வேளையில் தொடங்க வேண்டும்.
பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்மநோய்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை செல்வம் உண்டாகும்.
பெண்கள் புதிய தாலிச்சரடை கட்டிக்கொள்வது ஏன்?
ஆடிப்பெருக்கின் போது வெள்ளப் பிராவகமாய் பொங்கியெழுந்து வரும் காவிரி ஆற்றை பெண்கள் கங்கா தேவியாக நினைத்து வணங்குவர். ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை போல தங்கள் குடும்பமும், அனைத்து நன்மைகளையும் பெற்று சுபிட்சமாக வாழவேண்டி பெண்கள் திருமாங்கல்ய சரடை மாற்றிக்கொள்கிறார்கள்.
முன்னதாக பெண்கள் மஞ்சள் குங்குமம், கலப்பரிசி (வெல்லம், அரிசி) தேங்காய், பழம், தாலிச்சரடு, ஆகியவற்றை வைத்து பூஜை செய்கிறார்கள். பின்னர் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் புதிய தாலிச்சரடை கட்டிக்கொள்கிறார்கள்.
புதுமணத்தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று அங்கு அரசு, வேம்பு மரத்தை சுற்றி வலம் வந்து வணங்கி மஞ்சள் நூலை கட்டுவர். அரசமரமும், வேப்ப மரமும், சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்சராஜன் என்றும், வேப்ப மரத்தை விருட்ச ராணி என்றும் அழைப்பர். சக்தி ரூபமாக திகழும் வேப்ப மரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலை கட்டுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும், திருமணமான பெண்களுக்கு சந்தானலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
அடுத்த தலைமுறையினரையும் வழிநடத்துவோம்.