வியட்நாமில் 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பழமையான சிவாலயம்
தலவரலாறு:
வியட்நாமின் மைச ன் நகரில் உள்ள சிவன் கோயில் 4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கட்டிடங்களும் தூண்களும், தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக , வியட்நாமின் சம்பா நாகரீகத்தை பறைசாற்றும் பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கின.
கலாச்சார கொண்டாட்டங்களின் போது, அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், மத குருமார்களும் வந்து வழிபடும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இக்கோயில் திகழ்ந்தது. இக்கோயிலின் சிவ வழிபாட்டு அறை, கி.பி. 381 – கி.பி.413 -ம் நூற்றாண்டைச்சேர்ந்த முதலாம் பத்ரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது என்பதை எஞ்சியுள்ள வரலாற்றுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது.
மைசன் நகரிலுள்ள இக்கோயில், தற்போதைய இந்திய கோயில் தூண்களின் உறுதியான சான்றாகவும், பழமையின் சுடரொளியாகவும் மற்றும் பண்பாட்டின் சிறப்பாகவும் திகழ்கிறது என பாலி மொழி கல்வெட்டுக்களில் எழுதப்பட்டுள்ளது.
4ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மரத்தாலான கோயில்களின் முன்னோடியாக இக்கோயில் திகழ்வதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு, இக்கோயில் பயங்கர தீ விபத்துக்குள்ளாகி, முற்றிலும் எரிந்து சாம்பலானது. பிறகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாம்புவர்மன் (கி.பி.577-629) என்ற மன்னனால், தற்போதுள்ள கோயில் செங்கற்களால் புதுப்பித்துக் கட்டப்பட்டது. பின்னாளில் வந்த மன்னர்கள், இக்கோயிலை மாற்றி அமைத்து, செங்கல் மற்றும் உறுதியான பொருட்களைக் கொண்டு கட்டி உள்ளனர்.
என்னென்ன பொருட்களைக் கொண்டு கட்டினர் என்பதற்கும், அதற்கான கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதற்கும் சரியான வரலாற்றுச் சான்றுகள் பெறப்படவில்லை. இக்கோயிலின் தூண்களும் கம்பங்களும் 7ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டுக்குள்ளாக கட்டப்பட்டிருக்கலாம் என அங்கு வாழ்ந்த சாம் இன மன்னர்களின் கல்லறையிலிருந்து அறியப்படுகிறது. தற்போது இக்கோயில் வளாகத்தில் சுமார் 70 கட்டிடங்கள் உள்ளன.
கற்கோயில்:
இக்கோயில் வளாகத்தில் ஒரு கற்கோயில், சாம்பா நாகரீக முறைப்படி கட்டப்பட்டுள்ளது. தீக்கிரையான கோயிலின் மாற்றுக்கோயில் 1234ல் கட்டப்பட்டது. இதற்கு 30 மீ தொலைவில் உள்ள வளாகத்தின் மிக உயரமான கட்டிடம், 4 ம் நூற்றாண்டுக் கோயிலின் எஞ்சிய பகுதியாகும்.
புதுப்பிக்கப்பட்ட கோயில்:
1937- 1939 ஆண்டுகளில், பிரான்ஸ் விஞ்ஞானியின் தலைமையில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்றன. 1969 ம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் போரின் போது நிறைய தூண்களும் கம்பங்களும் அழிக்கப்பட்டது.
இக்கோயிலின் பெரும்பாலான சிலைகள் அகற்றப்பட்டு, பிரான்ஸ் மற்றும் வியட்நாமின் ஹோ- சி- மிங் மற்றும் சாம் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனி மற்றும் போலந்து நாட்டினரால், எஞ்சிய கோயில் வடிவமைக்கப்பட்டது. இதற்கான நிதி ஜப்பான் நாட்டிலிருந்து பெறப்பட்டது.
2002 முதல் 2004 ம் ஆண்டு வரை, வியட்நாமின் கலாச்சார அமைச்சகத்தால் நிதி ஒதுக்கப்பட்டு இக்கோயில் மேம்படுத்தப்பட்டது.
மேலும், இத்தாலிய அரசு யுனெஸ்கோ நிறுவனத்திற்கு பரிந்துரை செய்து வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி பெறப்பட்டது.