திருவாரூர் மாவட்டம் திருப்பள்ளி முக்கூடல் என்ற தலத்தில் திருநேத்திரநாதர் என்ற பெயரில் சிவபெரு மான் அருள்பாலித்து வருகிறார். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த தலம், தேவாரப் பாடல் பெற்ற காவேரியின் தென்கரைத் தலங்களில் 88–வது தலம் இதுவாகும். திருநாவுக்கரசர் இத்தல இறைவனை துதித்து தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார்.
ஜடாயு வழிபாடு
காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தலத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தது ஜடாயு. இது ராமாயணத்தில் ராவணனுடன் போரிட்ட பறவையாகும். ஜடாயுவின் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன்பாக தோன்றினார். ஈசனை கண்ணார கண்டு வழிபட்டார் ஜடாயு. பின்னர் தன்னுடைய வேண்டுதலுக்கான காரணத்தை ஈசனிடம் தெரிவித்தார்.
அதற்கு சிவபெருமான், ‘ஜடாயு! ராமாயண காலம் விரைவில் வரப்போகிறது. அதில் ராவணன், சீதையை தூக்கிச் செல்லும்போது நீ அதைத் தடுப்பாய். இதனால் சினம் கொண்ட ராவணன் உனது இறக்கையை வெட்டி விடுவான். நீ வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் போது ராமபிரான் அங்கு வருவார். நீ அவரிடம் ராவணன் சீதையை தூக்கிச் சென்ற பாதையை தெரிவிப்பாய். அதைக் கேட்டு ராமபிரான் மகிழ்ச்சி அடைவார். நீ அவரது பாதத்தில் விழுந்து முக்தி பெறுவாய்’ என்று கூறினார்.
16 தீர்த்த பலன்
அதற்கு ஜடாயு, ‘இறைவா! நான் காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் நீராடி அத்தலங்களில் வழிபடும் வரம் கேட்டேன். ஆனால் தாங்களோ, ராவணன் என் சிறகை வெட்டி விடுவான் என்று கூறுகிறீர்களே!. ராமபிரானின் பாதத்தில் விழுந்து முக்தி பெறுவது என்பது எனக்கு கிடைத்தற்கரிய புண்ணியமாகும். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் எனக்கு நான் கேட்ட இரண்டு தலங்களிலும் நீராடும் வாய்ப்பையும் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.
‘ஜடாயு! நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில் நீராடிய பலன் உனக்கு கிடைக்கும். எனவே இந்த குளத்தில் நீராடி புண்ணியம் பெறுவாயாக’ என்று கூறி அங்கிருந்து மறைந்தார்.
ஜடாயு இத்தலத்தில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடி பெரும்பேறு பெற்றார். கோவிலின் எதிரில் அமைந்துள்ள இந்த தீர்த்த குளம், பிருங்கி மகரிஷியின் காலத்தில், விநாயகப் பெருமானால் வெட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இத்தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு இணையானது என்பதால் முக்கூடல் தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.
சிவலிங்கமாக மாறிய…
ஒரு முறை சோழ மன்னன் ஒருவன் வேட்டையாட இந்த பகுதி வழியாக குதிரை மீது சென்று கொண்டிருந்தான். இத்தலம் உள்ள பகுதியை கடந்த போது இரவு நேரம் ஆகி விட்டதால், அங்கேயே தங்க நேர்ந்தது. இரவு உணவருந்தும் வேளை வந்தது. ஆனால் மன்னனோ சிறந்த சிவ பக்தன். ஒவ்வொரு வேளை உணவருந்தும் போதும், சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். ஆனால் காட்டுப் பகுதியில் எங்கு போய் சிவலிங்கத்தை தரிசனம் செய்வது. இதுபற்றி அறிந்த குதிரைக்காரன், குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப் பையை, சிவலிங்கமாக அலங்கரித்து, மன்னனிடம் காட்டினான். பார்ப்பதற்கு சிவலிங்கம் போன்றே தோற்றம் அளித்த அதனை இறைவனாகவே எண்ணி வழிபட்டான் மன்னன். பின்னர் உணவருந்தினான். இதையடுத்து குதிரைக்காரன் கொள்ளுப் பையை எடுக்க முயன்றபோது, அதுவே சிவலிங்கமாக மாறியது என்று இத்தல வரலாறு தெரிவிக்கிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருநேத்திரநாதர், முக்கோண நாதர் என்ற திருநாமத்துடன் இறைவன் அழைக்கப்படுகிறார். மாத சிவராத்திரி தினத்தில் இத்தல இறைவனின் மீது சூரியக் கதிர்கள் விழுந்து வழிபடுகிறது. 12 அமாவாசை தினங்கள் இவ்வாலயத்தில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பக்தர்கள் பலரும், சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். மேலும் கோவில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் காணிக்கையும் செலுத்துகின்றனர்.
அம்மனின் அருள்
அம்பாள் மயிமேவும்கண்ணி என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தபோவதனி என்னும் அரசி, தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி இத்தல அம்மனை வழிபாடு செய்தாள். அவளது வேண்டுதலை ஏற்ற அம்மன், தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் குழந்தை வளர்ந்து மணப் பருவத்தை எட்டியபோது, இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என்று அம்மனுக்கு தல வரலாறு கூறப்படுகிறது.
கோவிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், ராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரது சுதை உருவங்கள் அழகுற காட்சியளிக்கின்றன. இந்தக் கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தின் உள்ளே 16 கிணறுகள் அமைந்துள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ராமபிரான், தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்றாகும். முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் ‘கயா’ நதிக்கரையில் செய்யப்படும் தர்ப்பணத்திற்கு ஏற்படும் பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் ‘கேக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. சிவபெருமானுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் நடை திறந்திருக்கும்.
திருவாரூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பள்ளிவாரமங்கலம். இங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் திருப்பள்ளி முக்கூடல் உள்ளது.