Home » படித்ததில் பிடித்தது » நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்!!!
நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்!!!

நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்!!!

நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்:-

1. அறிதல் 


2. புரிதல்


3. உணர்தல்


4. தெளிதல்

முதலில் அறிதலைப் பார்ப்போம்

எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது.

சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி வெளியிலிருந்து பெறப்படும் ஒன்றால் மனித மனதில் மாறுதல் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் யாரோ சொன்னதலிருந்தும் எங்கோ கேட்டதிலிருந்தும் நமக்குள் ஏற்படும் தாக்கங்கள் அழுத்தமாகவோ ஆழமாகவோ பதிவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றங்கள் நிகழ்வது அரிது.

இரண்டாம் படியாகிய “புரிதலை” எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட பல வழிகளின் மூலம் நாம் பெற்ற அறிவை நமக்குள் சுழலவிட்டுச் சிந்தித்துப் பார்ப்பதையே நாம் “புரிதல்” என்கிறோம். “எண்ணிப் பார்த்தல்” என்றும், “யோசித்தல்” என்றும், “அலசி ஆராய்தல்” என்றும், நடைமுறையில் கூறப்படுவதையே “சிந்தித்தல்” என்கிறோம். ஒரு கணிப்பொறியைப் பற்றி நாம் அறிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கணிப்பொறி எனக்கு எந்தெந்த வகையில் பயன்படும்? அது இப்போது எனக்கு தேவையா? அதை வாங்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவை? அதை வாங்குவதால் உடனடி இலாபம் உண்டா? என சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதையே “புரிதல்” என்கிறோம்.

சுருக்கமாக சொன்னால் “புரிதல்” என்பது உள்ளுக்குள் நிகழ்வது. ஒரு நபரின் மனதுக்குள் நிகழ்வது. ஒரு மாற்றத்தை உருவாக்குவதில் புரிதல் என்பது இரண்டாம் நிலையை வகிக்கிறது. ஒன்றை அறிந்த நிலையைக் கடந்து, புரிந்த நிலைக்கு வரும் போது ஓரளவு மாற்றங்கள் நிகழக்கூடும். ஆனாலும் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் அன்றாட வாழ்வில் எத்தனையோ கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கூட நடைமுறையில் மாறுவதில்லை!

புகைப்பது தவறு புகைப்பதால் புற்று நோய் வரும் சாத்தியக் கூறு அதிகம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்பவர்களால் கூட புகைப்பதை நிறுத்த முடிவதில்லை என்பது கண்கூடு. எனவேதான் புரிதலையும் கடந்து, அதற்கு நாம் அடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும்.

மூன்றாம் படியாகிய “உணர்தல்” பற்றி அறிவோம்.

ஒன்றை அறிந்து கொண்டு அதைப் புரிந்து கொண்ட பின்னர் அதைச் செயல் வடிவில் செய்து பார்த்து, அதனால் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பெறப்படுவதையே உணர்தல் என்கிறோம்.

சர்க்கரை என்று பிறர் சொல்லக் கேட்பது “அறிதல்” ஆகும். இதை உண்டால் இனிய சுவை கிடைக்கும் என்று சிந்தித்தால் அதை “புரிதல்” என்கிறோம்.

அந்த சர்க்கரையை எடுத்து நாவில் வைத்து ருசித்துப் பார்த்தால் கிடைக்கும் அனுபவத்தையே “உணர்தல்” என்கிறோம். அதே போன்று ஒரு கருத்தை (அ) கோட்பாட்டை நடைமுறைப் படுத்திட அதனால் கிடைக்கும் அனுபவம் நமக்குள் அழுத்தமான பதிவை ஏற்படுத்தும். ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தி பார்க்காமலே கூட கற்பனையாலேயே அடுத்து வரவிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு கணிப்பொறியை அறிந்து கொள்வதோடு விட்டுவிடாமல் அதனைப் பற்றிய புரிதலோடு அதை இயக்கத்தைப் பார்த்து அதன் முழுப் பரிமாணத்தையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் நிரந்தரமாக இருக்கும். எனவே நமக்குள் உணர்தல் ஏற்பட்டுவிட்டால் அதுவே மிகப்பெரிய உந்துசக்தியாகிவிடும். எனவே மாற்றமானது எளிதில் நடந்துவிடும்.

நான்காவது படியாகிய “தெளிதல்” என்பது ஞானத்தைக் குறிப்பதாகும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் கற்பனையில் ஆழ்ந்தோ நடைமுறைப் படுத்தியோ நம் அனுபவம் முழுமையானதாகும். இத்தகைய தெளிவு ஏற்படும் போது யானை நமக்கு யானையாகவே தெரியும். அப்படியில்லாமல் ஒருமுறை உணர்ந்த நிலையிலோ (அ) புரிந்த நிலையிலோ (அ) அறிந்து கொண்ட நிலையிலோ நின்றுவிட்டால் யானையின் சில பகுதிகளை மட்டும் பார்த்தவர்களாக இருப்போம்.

அதுமட்டுமல்ல… வாழ்நாள் முழுவதும் அந்தப் பகுதி மட்டுமே யானை என்றும் அடம் பிடிப்போம். முழுமையைக் காணும் முயற்சியின்றி உண்மையை உணராமலே வாழ்ந்து முடித்துவிடக் கூடும்.

முழுமைபெறாத இத்தகைய நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. திருவள்ளுவர், புத்தர், விவேகானந்தர், ஏசுநாதர், நபிகள்நாயகம் போன்ற சான்றோர்களும் காந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின் லூதர்கிங், காரல் மார்க்ஸ், லெனின், சர்ச்சில் போன்ற உலகம் போற்றும் அரசியல் தலைவர்களும், தாகூர், பாரதியார், வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்ற இலக்கிய – தத்துவஞானிகளும், ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன், ஆர்க்கிமிடிஸ், சர்.சி.வி.ராமன், மேரிகியூரி, இராமானுஜம் போன்ற அறிவியல் – கணித மேதைகளும் கொலம்பஸ், வாஸ்கோட காமா போன்ற புவியியல் கண்டுப்பிடிப்பாளர்களும்.

ஹென்றி போர்டு, ஜி.டி நாயுடு போன்ற தொழில்நுட்ப வர்த்தக மேதைகளும் இத்தகைய தெளிவைப் பெற்றிருந்தார்கள். இன்றும் சிலர் இந்நிலையை (தெளிவு பெற்ற நிலையை) அடைந்திருக்கிறார்கள் என்றாலும் நம்மில் பலர் அறிந்தும், ஆனால் புரியாமலும், புரிந்தும் ஆனால் உணராமலும், உணர்ந்தும் ஆனால் தெளிவு பெறாமலும் பல்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள்.

எல்லோருமே உயர்ந்த நிலையாகிய தெளிவினை அடைய வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உடனுக்குடன் நிகழும்! உன்னதம் நிலை பெறும்! இந்த நான்கு நிலைகளும் ஒருவரை அறியாமையிலிருந்து ஞானத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான நான்கு படிக்கட்டுகள். இதனை உணர்வோம், தெளிவோம், ஏற்றமிகு மாற்றத்தை விரைவில் காண்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top