ரதத்தின் சக்கரம் பூமிக்குள் புதைந்தது சக்கரத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த கர்ணனைக் கொல்லும்படி கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கட்டளையிட்டார்.
அர்ஜுனா, என்னைத் தாக்க வேண்டாம் ரதத்தில் இல்லாத என்னைத் தாக்குவது தர்மம் அல்ல . சில நிமிடங்கள் பொறுத்துக்கொள், போரைத் தொடங்கலாம்.
போரின் விதிமுறைகளையும் தர்மத்தையும் நினைத்துப் பார்,” என்று அர்ஜுனனை நோக்கி கர்ணன் குரல் எழுப்பினான்.
அப்போது கர்ணனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணா, உனக்குக்கூட தர்மத்தின் கொள்கைகள் நினைவிற்கு வருகின்றதோ!
துன்பத்தில் இருப்பவன் எப்போதும் விதியைத் திட்டுவதும், தான் செய்த தவறுகளை மறந்துவிடுவதும் வழக்கம்.
கதறக் கதற திரௌபதியை கௌரவ சபைக்கு அழைத்து வந்தபோது உன்னுடைய தர்மம் எங்கே?
யுதிஷ்டிரரிடமிருந்து இராஜ்ஜியத்தைப் பறித்தபோது உன்னுடைய தர்மம் எங்கே?
பதிமூன்று வருட வனவாசத்திற்குப் பின் நாட்டை திருப்பிக் கேட்டபோது உன்னுடைய தர்மம் எங்கே?
வாரணாவதத்தில் அரக்கு மாளிகைக்கு தீ வைத்து பாண்டவர்களைக் கொல்ல முனைந்தபோது உன்னுடைய தர்மம் எங்கே?
மற்றொரு கணவனை ஏற்றுக்கொள்” என்று பெரும் சிரிப்புடன் திரௌபதியிடம் கூறியபோது உன்னுடைய தர்மம் எங்கே?
நீ விரும்பும் தர்மம்தான் திரௌபதியின் ஆடைகளை அவிழ்க்கும்படி துச்சாதனனுக்கு கட்டளையிட்டதா?
ஆறு மகாரதிகளுடன் இணைந்து 16 வயது அபிமன்யுவை சுற்றி வளைத்துக் கொன்றபோது உன்னுடைய தர்மம் எங்கே?
அப்போதெல்லாம் தர்மம் உனது மனதில் தோன்றவில்லையா?
அப்போதெல்லாம் தர்மத்தை நினைக்காமல், இப்போது தர்மத்தைக் கூப்பிடாதே.
நாங்கள் நீதிப்படி நடக்க வேண்டும் என்று நீ விரும்பலாம், ஆனால் இன்று நீ உயிருடன் செல்ல இயலாது என்றான்.