குதிரைவாலி நெல், குதிரைவாலி புல்லரிசி:
குதிரைவாலி என்பதை நெல் என்று இதுவரை அறிந்திருந்தேன். அண்மையில் இணையத்தில் வெளிவந்த ஒரு படத்தைத் தாவரத் தகவல் தொகுப்பாளர் இரா.பஞ்சவர்ணம் ஐயாவிடம் காட்டிய பொழுது இது புல்லரிசி என்றார். மேலும் உரையாடும்பொழுது குதிரைவாலி நெல்லும் உண்டு. புல்லரிசியும் உண்டு என்றார்.
குதிரைவாலி தண்ணீர் வறட்சியைத் தாங்கி விளையும் நெல்லாகும் என்றார். அதுபோல் புல்லரிசியும் வறட்சியைத் தாங்கி விளையும் என்றார். இரண்டும் உடலுக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார்.
நான் சிற்றூரில் வாழ்ந்த காலங்களில் கார்நெல், கலியஞ்சம்பா நெல்லை அறைத்துத் தை மாதத்திற்குப் பிறகு பயன்படுத்துவோம். கார்நெல் அரிசி, கலியஞ்சம்பா அரிசியில் சோறாக்கிக் கோடைக்காலங்களில் காலையில் பழைய சோற்றில் தயிர் இட்டு நன்கு பிசைந்து உண்டு கண்குளிர்ச்சியுடன் தூங்கி எழுவோம்.
எங்கள் ஊரை அடுத்துள்ள கடாரம்கொண்டான், பெரியவளையம், புதுச்சாவடி, கரடிக்குளம், உத்திரக்குடி,தேவாமங்கலம் பகுதிகளில் இத்தகைய நெல் அதிகம் விளைந்தன. இன்று வீட்டுமனைகளாகவும் தைலமரத் தோப்புகளாகவும் நிற்கும் நிலங்களைப் பார்த்து கண்ணீர்விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
சங்க இலக்கியங்களில் புல்லரிசியைச் சமைத்து உண்பது பற்றிய குறிப்புகள் மிகுதியும் உள்ளன. பெரும்பாணாற்றுப்படையில் எயிற்றியர்கள் (பாலை நில மகளிர்) புல்லரிசி உணவை உண்டனர் என்பது பதிவாகியுள்ளது. வெண்மையான பற்களை உடைய வேடர் குலப் பெண்கள், எறும்புகள் சேர்த்து வைத்திருக்கின்ற புல்லரிசியைத் தேடிச் சேர்ப்பார்களாம். அவ்வாறு சேமிக்கப்பட்ட புல்லரிசி நெல்லை மான்கள் கட்டப்பட்டிருக்கும் விளாமரத்தின் அடியில் அகழ்ந்திருக்கின்ற உரலில் கொட்டி உலக்கையால் குற்றிக் கொழித்தெடுப்பர். பின்னர்க் கிணற்றில் ஊறியிருக்கின்ற உவர்நீரை முகந்து பானையில் ஊற்றி அடுப்பில் வைத்து உலை வைப்பர். குற்றியெடுத்த புல்லரிசியை உலையிலிட்டுச் சமைத்துச் சோறாக்குவார்கள். அச்சோற்றை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்பர். இவ்வுணவைத் தாம் மட்டும் உண்ணாமல் வரும் விருந்தினருக்கும் கொடுப்பர் என்ற விவரம்,
“நுண்புல்அடக்கிய வெண்பல் எயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவின்
நீழல் முன்றில் நிலவுரல் பெய்து
குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடும்கிணற்று
வல்லூற்று உவரி தோண்டித் தொல்லை
முரவு வாய்க்குழிசி முரி அடுப்பேற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல்”
-எனப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை இடம்பெற்றுள்ளது. எனவே புல்லரிசியை உணவாக்கி உண்ணுவது தமிழர்களிடம் காலந்தோறும் இருந்துவரும் உணவுப்பழக்கமாகும்.