இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் “சிவன்” என்கிறோம்.
சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து.
நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. வடிவம் எப்படி ஏற்பட்டாலும் இன்றைக்கு முழுமுதல் வழிபாட்டில், சிவலிங்க வழிபாடும், நடராஜர் வழிபாடும், சோமாஸ்கந்தர் வழிபாடும் சிறப்பாகப் பேசப் படுகிறது.
இறைவனைக் கண்ணார, மனதாரக் கண்ட ஞானியர்கள் கூற்றுப் படி இறைவனின் வடிவங்களை உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் உருவம் ஆன கருத்தின் படி பிரம்மா என்னும் நான்முகனும், திருமால் என்னும் காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவும், ருத்ரன், மகேசன் என்னும் அழித்து அருளும் வடிவங்களும் அடங்கும்.
அருவம் என்பது வடிவே இல்லாதது. இதில் அடங்குபவை சிவம், சக்தி,நாதம், பிந்து ஆகியவை. இந்த நான்கையும் வைத்து இறைவனை யோக முறையில் பூசித்தவர்களே சித்தர்கள் எனப் படுவார்கள்.
என்றாலும் சாதாரண மானிடர் ஆன நமக்கு ஒரு உருவம் வேண்டும் இல்லையா?
அப்படி உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு.
இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு. சில சிவன் கோயில்களிலே லிங்கத்தில் முகம் இருக்கும். சிலவற்றில் முகம் இருக்காது. இந்த முகலிங்கங்கள், மற்றும் லிங்கங்கள் பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்.
பொதுவாக லிங்கங்களுக்கு மூன்று பகுதி உண்டு
அவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பொதுவாய்க் குறித்தாலும், பஞ்ச பூதங்களில் முக்கியமான பூமி-பிரம்மா, நீர்-விஷ்ணு, அக்னி-சிவன், ஆகிய மூன்றையுமே சுட்டிக் காட்டுகிறது, என ஆன்றோர் கூற்று.
இயற்கையிலும், இறை சக்தியே நிரம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இவ்வாறு சொல்கின்றார்கள், இந்த லிங்க வடிவிலே அடிப்பகுதியான பிரம்ம பாகம் பூமியிலே மறைந்து இருக்கும் வண்ணமும், ஆவுடை என்று சொல்லப் படும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம், அபிஷேகங்களை ஏற்கும் இடமாகவும், பாணமாகிய மேல் பகுதிதான் மேலோங்கி நின்று ஜோதி போலவும் காட்சி அளிக்கின்றது.
இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு.
முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும். இப்படிப் பட்ட லிங்கங்கள் நம் நாட்டை விட நேபாளத்திலேயே அதிகம் காணப் படுகின்றது.
முகலிங்கம்:
தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன.
லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும். இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு.
இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை.
அம்பிகை தன் தவங்களின் போது, தன் வழிபாடலுக்கு என ஸ்தாபித்தவை “தேவிக லிங்கம்” என்று சொல்லப் படும். இதிலே தேவர்கள் பூஜித்த லிங்கம், “திவ்யலிங்கம்” அல்லது “தெய்வ லிங்கம்” எனச் சொல்லப் படுகின்றது.
இந்திரன் பூஜித்தது இந்திரலிங்கம், வருணன் பூஜித்தது, வருணலிங்கம், வாயு பூஜித்தது வாயுலிங்கம் என வகைப் படுத்தப் படுகின்றது.
மனிதனாக ராமன் வாழ்ந்தபோது ஸ்தாபிதம் செய்தது, பின்னர் பூஜித்ததும், இன்றளவும் அனைவரும் வழிபட்டு வருவதும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியான “மானுட லிங்கம்” ஆகும்.
முனிவர்களால் பூஜிக்கப் பட்டது “ஆர்ஷிக லிங்கம்” எனவும், அசுரர்களால் பூஜிக்கப் பட்டது, “ராட்சச லிங்கம்” எனவும் சொல்லப் படுகின்றது.
முகலிங்கங்கள் பற்றிய விளக்கத்துக்கு முன்னர் லிங்கம் பற்றிய விளக்கம் சரியாக் கொடுக்கலைனு தோணியதாலே இந்த விளக்கம்.
முக லிங்கங்கள் பற்றிப் படங்கள் கிடைத்ததும் ஞாயிறு அன்றோ அல்லது திங்கள் அன்றோ பதிவு எழுதுகிறேன்.
முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும்.
ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும்.
அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது.
இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது.
பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும்.
அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது.
இப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், தன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் “தத் புருஷம்” என அழைக்கப் படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும்.
தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் ஆனது “அகோரம்” என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது.
மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் “சத்யஜோதம்” என அழைக்கப் படும். இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும்.
வடக்கே பார்க்கும் முகம் “வாமதேவம்” எனப் படும், இது சிவந்த நிறத்தில் காணப் படும். ஈசான்ய திசை என்று அழைக்கப் படும் வட கிழக்குத் திசையில் காணப் படுவதோ, “ஈசான்ய முகம்” என்றே அழைக்கப் படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது.
ஒரு முகலிங்கம்:
முதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள்.
தென்மேற்கு மூலையை “நிருதி” என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன.
சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது.
ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது.
முகலிங்கங்கள் என்று தேடினால் அதிகமாய்க் கிடைக்கவில்லை. ஒரு சில கிடைத்தவற்றைப் போடுகிறேன். தொடருக்கும், படத்துக்கும் சம்மந்தம் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
இருமுகலிங்கம்:
இப்போது இரு முக லிங்கம் பத்திப் பார்ப்போம்.
இரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும்.
இவை “ம்ந்திரலிங்கங்கள்” எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் எனச் சொல்லப் படுகிறது.
இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் “விருட்சி” என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம்.
மூன்று முக லிங்கம்:
அடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது.
கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும்.
திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம்.
சதுர்முக லிங்கம்:
இனி சதுர்முக லிங்கங்கள் பத்திப் பார்க்கலாம். சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் “வேத லிங்கம்” என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை
இது தவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளதாய்த் தெரிய வருகிறது. இந்த லிங்கங்களுக்கு நான்கு முக ருத்திராட்சம் அணிவித்து நான்கு வில்வதளங்களால் வழிபடுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வழிபடுவோருக்குப் பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்கிலும் புகழ் வாய்ந்தவராய்ச் சொல்லப் படுவார்கள்.
ஐந்து முகலிங்கம்:
ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானனக்காவில் கோவில் அருகே “பஞ்சமுகேஸ்வரர் கோயில்” என்று தனியாக உள்ளது.
சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது.
இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது.
திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் “ஆகமம்” இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் “சிவாகம லிங்கம்’ எனவும் சொல்வார்கள்.
ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுதல் விசேஷம் எனச் சொல்கின்றனர்.
பஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது.
இது “அதோ முகம்” என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்.
இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமே எனவும் சொல்லப் படுகிறது.
ஆறுமுகலிங்கம்:
ஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு.
திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர்.
காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். அடுத்து சதாசிவ மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?
திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:
“கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!” (ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று)
எனக் கூறுகின்றார்.
சதாசிவ வடிவத்துக்கு முகம் ஐந்து, திருப்பாதங்கள் இரண்டு, பத்துக் கைகள், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களாக மொத்தம் பதினைந்து கண்கள் இவற்றோடு தாமரைப் பீடத்தில் நிற்பதாய்க் கூறுகின்றார்.
ஆத்ம லிங்கம்
தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம்ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.
1. மண் ….. காஞ்சிபுரம் ….. ஏகாம்பர லிங்கம்
2. நீர் ….. திருவானைக்கா …… ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ….. திருவண்ணாமலை ….. அருணாசல லிங்கம்
4. வாயு ….. திருகாளத்தி ….. திருமூல லிங்கம்
5. ஆகாயம் ….. சிதம்பரம் ….. நடராச லிங்கம்
இஷ்ட லிங்கம்
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.
1. இந்திரன் ….. பத்மராக லிங்கம்
2. குபேரன் ….. ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ….. கோமேதக லிங்கம்
4. வருணன் ….. நீல லிங்கம்
5. விஷ்ணு ….. இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ….. ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ….. வெள்ளி லிங்கம்
8. வாயு ….. பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ….. மண் லிங்கம்
10. மகா லட்சுமி ….. ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ….. முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ….. வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ….. மண் லிங்கம்
14. மயன் ….. சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் …. பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ….. பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ….. இரும்பு லிங்கம்
18. பார்வதி …. வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ….. தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ….. விபூதி லிங்கம்
21. சாயா தேவி ….. மாவு லிங்கம்
22. சரஸ்வதி ….. ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ….. தயிர் லிங்கம்
ஷணிக லிங்கம்
நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
1. புற்றுமண் லிங்கம் ….. மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ….. பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ….. பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ….. அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ….. நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ….. மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ….. அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ….. அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ….. அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ….. ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ….. பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ….. விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ….. உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ….. சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ….. நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ….. எல்லா மேன்மைகளும் தரும்